ஆணுக்கு ஒரு பெண்ணைக் காதலிக்கத் தெரிகிறதா என்று கேள்வி எழுப்பும் படம்!

இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரத்துடன் தைரியமாக, வெளிப்படையாக பேசும் படங்களும் என்றுமே வரவேற்பை பெறும். ராம் இயக்கத்தில், JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவியின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ‘தரமணி’ இது போன்ற தற்கால ஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாகும்.

இது குறித்து இயக்குனர் ராம் பேசுகையில் ,”`குழந்தைகளை மையமாக வைத்துப் படம் எடுத்த இயக்குநரிடமிருந்து ‘ஏ’ சான்றிதழ் படமா?. என்ன ஆச்சு இந்த இயக்குநர் ராமுக்கு?’ என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் ஆகவில்லை. சொல்லப் போனால், இந்த 10 ஆண்டுகளில் ராம் எனும் கலைஞன் அதிகமாக நெகிழ்ந்திருக்கிறான். பொதுப்புத்தியில் ‘ஏ’ படம் குறித்து என்ன புரிதல் இருக்கிறது என்று தெரியவில்லை. இந்தப் படம் ஆண்-பெண் உறவுச்சிக்கலைப் பேசும் படம். உலகமயமாக்கல் தனி மனித உறவில், எந்த அளவுக்குத் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை எனக்குத் தெரிந்த காட்சி மொழியில் பேசியிருக்கிறேன். தணிக்கைத்துறை இதற்கு 16-க்கும் மேற்பட்ட வெட்டுகள் கொடுத்து ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். படம் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்வதென்றால் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களின் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதை தான் ‘தரமணி’.

உலகமயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்க்கம் தங்கள் காதலி/மனைவியை புரிந்து கொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி ‘தரமணி’ படத்தில் பேசியுள்ளேன். இது தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கை முறையை பற்றிய படம் மட்டுமே என்பது உண்மையல்ல. ‘தரமணி’ பல கலாச்சாரம், பல்வேறு பின்னையிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக ‘தரமணி’ இருக்கும். அதாவது இந்தக் கதையின் மாந்தர்கள் ஐ.டி ஊழியர்கள். ஆனால், இது ஐ.டி படம் இல்லை. ஆணுக்கு உண்மையாக ஒரு பெண்ணைக் காதலிக்கத் தெரிகிறதா என்று கேள்வி எழுப்பும் படம். ஆண்-பெண் உறவு மூலமாக நுட்பமான ஓர் அரசியல் படம்’

இதனிடையே சென்ஸார் போர்டுமீது உள்ள அந்த வருத்தத்தில்தான் போஸ்டர்களில் அவர்களைக் கலாய்க்கிறீர்களா? என்றும் சிலர் கேட்கிறார்கள். உண்மையில் தணிக்கை வாரியம் மீது எந்த வருத்தங்களும் இல்லை. தணிக்கையின்போது அவர்கள் என்னிடம் என்ன சொன்னார்களோ அதைப் படத்தின் போஸ்டர்களில் பயன்படுத்தி யிருக்கிறேன். ஆண் ‘ரா’-வாக அருந்தினால் U/A; பெண் ‘ரா’-வாக அருந்தினால் ‘A’ என்றார்கள். தணிக்கைக்காக ஆண்ட்ரியாவிடமிருந்து மது புட்டியைப் பிடுங்கினால், படத்தின் ஜீவன் சிதைந்துவிடும். அதனால், நானே ‘A’ சான்றிதழுக்கு ஒப்புக் கொண்டேன். தணிக்கை வாரியம் ஏதோ வானத்திலிருந்து குதித்த அமைப்பெல்லாம் இல்லை. அவர்கள் நம் பொதுப்புத்தியைப் பிரதிபலிக்கிறார்கள். ஒரு பெண்ணை, ஆண் ஒருவன் கிண்டல் செய்தால் நாம் ரசிக்கிறோம். அதற்குப் பெண் அவளுக்குத் தெரிந்த மொழியில், எதிர் வினையாற்றினால் முகம் சுழிக்கிறோம். பதறுகிறோம். அதைத்தான் சென்ஸார் போர்டும் செய்கிறது. இதற்காக அவர்கள்மீது நாம், எப்படிக் கோபம்கொள்ள முடியும்…? தணிக்கை வாரியம் இயன்ற அளவு ஜனநாயகமாகச் செயல்படுவதாகவே நினைக்கிறேன். என்னவொன்று இப்போது வலதுசாரிகளின் தாக்கம் அங்கு நிலவுவதுபோல் தோன்றுகிறது.

இதையெல்லாம் கடந்து, ‘தரமணி’ படம் குழந்தைகளுக்கான படம் அல்ல. நான் என் குழந்தைகளை இந்தப் படத்தைப் பார்க்க அனுமதிக்க மாட்டேன். இது வயது வந்தோருக்கான படம்தான். சொல்லப்போனால், இதுநாள் வரை U/A சான்றிதழ் அளிக்கப்பட்டு வந்த படம் எதுவும் குழந்தைக ளுக்கான படம் அல்ல. அந்தப் படங்களையெல்லாம் குழந்தைகளை அழைத்துக் கொண்டுபோய் திரையரங்கில் பார்த்தீர்கள். இந்தப் படத்தை அவர்கள் இல்லாமல் பார்க்கப் போகிறீர்கள். அவ்வளவுதான் வித்தியாசம்” என்கிறார்.