தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கும் நோக்கில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசிய போது, “’கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்திரவா இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம். லாரியில் பயணம் செய்பவர்களை விட எல்லா வகையிலும் ஓட்டுனருக்கு தான் ஆபத்து அதிகம். மற்ற வாகனங்களை விட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல லாரியில் இறங்கி ஏறுவதற்கு கூட அதிகமான சக்தி வேண்டும். லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது. தனது நிறுவனத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.
ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போல உச்சம் தொட்டவர்கள் அனைவரும் ஆன்மிகத் தில் ஈடுபாடு உள்ளவர்கள் தான். அது எப்பவும் நம்மை பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கும். ஆன்மிகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆகையால், இயக்குநர் லோகேஷ் முதலிலேயே பட்டை போட வேண்டும் என்று கதையை எழுதிவிட்டார்.நான் வீட்டிலிருந்து எப்போது கிளம்பினாலும் விபூதி பூசாமல் கிளம்பினது இல்லை. அது வளர்த்த விதமாகக் கூட இருக்கலாம். படம் பார்த்து விட்டு.. என் நம்பரை எப்படியோ பிடித்து.. குடும்பம் குடும்பமாக பேசுகிறார்கள். முடிந்த வரை எல்லோரிடமும் பேசி விடுகிறேன்.
என் அப்பா திரையரங்கில் ‘கைதி’யைப் பார்த்தார். சிறப்பான படம், அப்பா மகள் செண்டிமெண்ட் அனைவரிடமும் வெற்றியடையும். மற்றும் திரையரங்கப் பார்வையாளர்களுக்கான படம் என்றும் பாராட்டினார். எனக்கும் ஒரு மகள் இருப்பதால் இப்படத்தின் கதாபாத்திரத்தோடு சுலபமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.
நேற்று இயக்குநர் லோகேஷ் என்னைத் தொடர்பு கொண்டு ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக (‘கைதி 2’) 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் முடித்து விடலாம் என்றார். அதுக்கு அவர் ரெடியாகதான் இருக்கிறார். நல்ல விமர்சனங்கள் எழுதி வரும் உங்களுக்கும், பெரிய வெற்றி படமாக்கிய மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்”என்று நடிகர் கார்த்தி பேசினார்.