‘தரமணி’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் .

கடந்த வாரம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘தரமணி கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை ‘தரமணி’ மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெருகி வரும் விமர்சனமும், கூடி வரும் ரசிகர்களும் தரும் ஆதரவை தொடர்ந்து ‘தரமணி’ படத்தின் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது, மக்களின் ஏகோபித்த வரவேற்பும் பாராட்டும் இந்த படத்துக்கு வணிகரீதியான பெரும் வெற்றியை கொடுத்துள்ளது.

மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தரமான படங்களை தவறாமல் பார்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ போனிலோ மனதார பாராட்டும் வழக்கம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தரமணி படத்தை நேற்று பார்த்தார். தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.” இது போன்ற ஒரு வாழும் சாதனையாளரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. மகிழ்ச்சியான ஆச்சிரியத்தில் உறைந்தே போனேன்.

‘தரமணி’ ஒரு துணிச்சலான படம் (Bold film). என்று கூறினார். படத்தின் எல்லா அம்சங்களை பற்றியும் விவரமாக பாராட்டினார். படத்தின் வணிக வெற்றியை பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார். படத்தின் பெரிய வெற்றியை அவரிடம் கூறியபொழுது கேட்டு மகிழ்ந்தார். ‘தரமணி’ மூலம் நடிப்பில் காலடி எடுத்துவைத்திருக்கும் எனது நடிப்பையும் எனது கதாபாத்திரத்தையும் பற்றியும் விவரமான பேசி பாராட்டினார். இது போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகள் மேலும் தரமான படங்களை தயாரிக்க எனக்கும் எனது நிறுவனத்துக்கும் பெரும் ஊக்கமாக உள்ளது” என்று உவகையுடனும் உற்சாகத்துடனும் கூறினார் ஜே சதீஷ் குமார்.

இச்சந்திப்பில் இயக்குநர் ராம் பேசிய போது, “2007-ல் இயக்குநராக அறிமுகமானேன். கடந்த 10 ஆண்டுகளில் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தொலைபேசி வாயிலாக, மக்கள் வருகிறார்கள், கைதட்டி ரசிக்கிறார்கள், படம் ஓடிவிடும் என்று கேட்பது இதுவே முதல் முறை. எனது முதல் 2 படங்களில் இது நடக்கவில்லை. அப்படி நடக்கவில்லை என்பதால் அடுத்த படங்கள் தாமதமானது.

கடந்த 3 வருடங்கள் 8 மாதங்களாக ஒரு படத்தைத் தாங்கிப் பிடித்திருப்பது இயக்குநரின் அணி மட்டுமே என நினைக்கிறேன். இக்கதையை யோசிக்கும் போது புதுமையாக இருந்தது. இடையே ‘ஓ காதல் கண்மணி’ மற்றும் ‘இறைவி’ ஆகிய படங்களும் இதே பாணியிலான கதை என்னும் போது, குப்பைத் தொட்டிக்கு ‘தரமணி’ போகும் சூழல் இருந்தது. இதற்கு இடையே சமூகத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.

கதையை யோசித்து முதல் பாதி படப்பிடிப்பு முடியும் வரை வாட்ஸ் ஆப் என்ற ஒன்று கிடையாது. ஆகையால் இரண்டாம் பாதியில் வாட்ஸ் ஆப் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும். இப்படம் வெளியாகும் போது ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்ற பயமிருந்தது. தயாரிப்பாளர் மிகவும் நம்பினாலும், முந்தைய 2 படங்கள் மூலம் கொஞ்சம் பயமிருந்தது.

‘தரமணி’ படத்தின் தாமதம் ஏதோ ஒரு வகையில் வெற்றிக்கு உதவியாக இருந்திருக்கிறது. அதற்கு ஜே.எஸ்.கேவுக்கு மட்டுமே நன்றி சொல்ல வேண்டும். இப்படத்துக்கு வட்டி எல்லாம் சேர்ந்து ஐந்தரை கோடி வரை ஆனது. யாருமே வாங்க வராத சூழலில், அவரே தனியாக வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. திரையரங்க வசூலை மட்டுமே தற்போது தமிழ் சினிமா நம்பியிருக்கும் சூழலில் ஐந்தரை கோடி படத்தை வெளியிட கடந்த ஓராண்டாக போராடிக் கொண்டிருந்தோம்.

‘விவேகம்’ படத்தோடு ‘தரமணி’ வெளியீடு என்று ஜே.எஸ்.கே அறிவித்த போது, இது எவ்வளவு விவேகமற்ற செயல் என்று சொன்னேன். அப்போது ஆண்ட்ரியா “படம் வெளியானால் போதும், அதுவே நமக்கு பெரிய வெற்றி” என்று சொன்னார்.

படத்தின் விளம்பரங்களில் மீம்ஸ் பாணியில் செய்வதற்கு காரணம் என்னவென்றால் என் படத்துக்குள் அது இருந்தது. முக்கியமான காட்சி போய்க் கொண்டிருக்கும் போது, அதை கட் செய்து இடையே 2 வார்த்தைகள் பேசியிருப்பேன். அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று முதலில் தெரியவில்லை. ஆகையால்தான் மக்களை படம் எந்த மாதிரி இருக்கும் என்பதை தெளிவுபடுத்துவதற்கே விளம்பரங்களை மீம்ஸ் பாணியில் வெளியிட்டோம். ஆனால், எங்களுக்கு விளம்பரங்கள் மக்களிடையே படத்தை பெருவாரியாக கொண்டு போய் சேர்த்தது.

‘தரமணி’யிலும் நிறைய குறைகள் இருக்கின்றன. ஒரு பயங்கரமான மாற்று சினிமா எடுத்துவிட்டேன், உலகத்திற்கான ஒரு சினிமா எடுக்க முயற்சித்துள்ளேன் என்று சொல்ல விரும்பவில்லை. இன்னும் இயக்கத்தில் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு காட்சியை நல்லபடியாக எடுத்துவிட்டால், அடுத்த காட்சி எப்படி என்ற குழப்பம் வந்துவிடுகிறது.

ஆண்ட்ரியா முதன் முறையாக இப்படத்தில்தான் நடிகரில்லாமல் நடித்துள்ளார் என நினைக்கிறேன். எப்போதுமே புதுமுக நடிகர்களோடு நடிப்பது என்பது நடிகர்களுக்கு சவாலான விஷயம்” என்றார்