அல்வா வாசு இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை! – சுரேஷ் காமாட்சி வேதனை!

700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அல்வா வாசு சமீபத்தில் உடல்நலக் குறைவால் மதுரையில் காலமானார். பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலை மோசமடைந்து காலமானார். இவருடைய இறுதிச்சடங்கில் அவருடன் நடித்தவர்கள் மற்றும் திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் , ” சுமார்ர்  36 ஆண்டு காலங்கள் கலை உலகில் பன்முக தோற்றங்களில் நடித்துள்ள அல்வா வாசுவின் இறுதி நாட்கள் எண்ணற்ற துயரங்களைக் கொண்டவையாவே அமைந்துள்ளது.

இவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்க்க போதிய நிதியில்லாமல் நெருக்கடியில் இருந்தபோது கோடிகளில் புரளும் யாரும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. ஏன்? இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை. காரணம் இவர்களின் அளவுக்கு இறந்தவரிடம் வசதியில்லை.

அல்வா வாசுவின் இறுதிநாட்களில் கூட இருந்து தன்னால் இயன்ற உதவிகளை  நடிகரும் இயக்குநருமான சரவண சக்தி, மேனேஜர் கண்ணன், மயில்சாமி, அண்ணன் சத்யராஜ் போன்ற சில நல்ல உள்ளம் கொண்டவர்களே செய்துள்ளனர். சக நடிகனின் கண்ணீரைத் துடைக்கவே யாருக்கும் துணிவில்லை.

வடிவேலுவுடன் சேர்ந்து எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். அவர் கூட இவருக்கு உதவ முன் வரவில்லை. யார் எவரென்றே தெரியாமல் இவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தணிகாசலம் கட்டணமே வேண்டாம் என்று கூறியுள்ளார். நடிகர் சங்கமோ அறிக்கையில் இவருக்காக பிச்சையெடுத்ததோடு நிறுத்திக்கொண்டது.

நல்லாயிருக்கும்போது சந்தா வாங்குறதோ ஓட்டுக்காக வீடு வரை வந்து தாஜா பண்ணுவதோ முக்கியமில்லை. இறப்பின் பிடியிலிருக்கும்போது உதவுவதும், எங்கள் கலைக்குடும்பம் உங்களோடு உள்ளது என உடன் நிற்பதும்தான் சந்தா கட்டியதற்கான மரியாதை என்று  நான் நினைக்கிறேன். சங்கங்கள் சரியான பாதைக்கு திரும்ப வேண்டும்.”இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.