பேய் எல்லாம் பாவம் ஆடியோ ஃபங்ஷன் ஹைலைட்ஸ்!

0
224

தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிக்க, கதாநாயகனாக அரசு, கதாநாயகியாக டோனா சங்கர் மற்றும் அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல்,நடிக்க, பிரசாந்த் ஒளிப்பதிவில் நவீன் சங்கர் இசையில், அருண்தாமஸ் படத் தொகுப்பில், கதை, திரைக்கதை, வசனத்தை தவமணி பாலகிருஷ்ணன் எழுத, தீபக் நாராயணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் “பேய் எல்லாம் பாவம்” இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட்டரில் நடைபெற்றது .

இதில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசும்போது, “பேய் எல்லாம் பாவம்” பாடல், ட்ரெய்லர் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது. இந்த குழுவில் பெரும்பாலும் மலையாளிகள் . தமிழர்களே கம்மி. மலையாளத்திலிருந்து எந்த இயக்குனர் வந்தாலும், தமிழ் இயக்குனர் போலவே கொண்டாடுவோம். ஆனால் அவர்கள் அப்படி இருப்பது இல்லை . மலையாள இயக்குனர் கமல் இயக்கிய பிரியாத வரம் வேண்டும் என்ற தமிழ் படத்துக்கு நான் வசனம் எழுதினேன் .படக் குழுவில் நானும் இரண்டு உதவி இயக்குனர்களும் மட்டுமே தமிழர்கள் . மற்றவர்கள் எல்லாம் மலையாளிகள்.படப்பிடிப்பு நடந்த ஒரு நாள் இயக்குனருக்கு பிறந்த நாள் . படப்பிடிப்பு முடிந்த அன்று இரவு கேக் வெட்டினார்கள் . எல்லோரும் கலந்து கொண்டார்கள். ஆனால் என்னையும் அந்த இரண்டு தமிழ் உதவி இயக்குனர்களையும் மட்டும் அழைக்கவில்லை. காரணம் நாங்கள் தமிழர்கள் என்பதுதான் . மறுநாள் ஒன்றுமே நடக்காதது போல வேலை வாங்கினார்கள். ஆனால் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல.

இந்த இயக்குனர் தீபக் நாராயன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து உயர்ந்த இடத்தை பிடித்த, பாஸில், சித்திக் போல மிக உயர்ந்த இடத்தை பிடிப்பார். கலைக்கு மொழியே தேவையில்லை ஏனெனில் அனைவரும் இந்தியர்கள். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை முன்னின்று கொடுத்தார்கள். நடிகர் களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள். இளைய தளபதி விஜய் 70 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதுபோல எந்த அரசியல்வாதியாவது சொந்த பணத்தை கொடுத்தார்களா ? கேரளா ரசிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் இணையான, வசூல், ஓப்பனிங் விஜய் சார் படங்களுக்கு எப்போதும் கேரளாவில் இருக்கும். எந்த பிரச்சினை என்றாலும் சினிமாக்காரர்களே குரலும், பொருளும் தருகிறார்கள்” என்றார் .

விழாவில் கவிஞர் சிநேகன், பேசுகையில், “எல்லோரும் ஒரு அடையாளத்திற்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். 2500 பாடல்கள் எழுதும் போது கிடைக்காத அடையாளம் ஒரு நூறு நாள் உள்ள வைத்துச் செய்தார்கள் அப்போது கிடைக்கிறது. அவர்கள் இஸ்டத்திற்கு செய்தார்கள், அவங்களுக்குத் தேவையானது மட்டும்தான் போட்டார்கள். உள்ள என்ன நடந்தது என்பது தெரியாது. டிஆர்பி, அது ஒரு வியாபார களம். எதற்காக சொல்கிறேன் என்றால், இந்தக் குழு மொழி தெரியாமல், ஏக்கமும் தடுமாற்றமும் அவர்களுக்குள் இருந்தாலும் இங்கு நம்மை நம்பி வந்திருக்கிறார்கள். கேரளத்துச் சகோதரன் ஒருவன் கேரள வெள்ளம் சமயத்தில் வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி அனுப்பியிருந்தான். ‘தமிழகத்தை நாங்கள் எப்போதும் மதிப்பதில்லை. ஏன் என்றால் இவர்கள் படிக்காதவர்கள், கல்வியறிவில்லாதவர்கள், முரட்டுத்தனமுள்ளவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள் என்று விமர்சித்திருக்கிறோம். அதிகப்படி பாண்டி, பட்டி என்று சொல்லியிருக்கிறோம். உங்களுக்கு விபத்து வந்தபோதும், இயற்கை சீரழிவு வந்த போதுகூட நாங்கள் உதவியதில்லை. ஆனால் இந்த வெள்ளத்தின் போது கேரளா தலைகீழாக தண்ணீரில் மிதந்த சமயத்தில் முதலாளாக உதவியவர்கள், உதவிக் கொண்டிருப்பவர்கள் தமிழர்கள்’ என்று பகிர்ந்திருந்தான்.

யாருக்கு அடித்தாலும் தமிழனுக்கு வலிக்கும். ஆனால் தமிழுக்கு அடித்தால் தான் யாருக்கும் வலிக்க மாட்டீங்கிறது. எங்கிருந்தாலும் இந்தியனுக்கு எதாவது ஒன்றென்றால் முதலில் கை நீட்டி ஓடுகிறவன் தமிழன். ஆனால் தமிழனுக்கு ஒன்றென்றால் எந்த இந்தியனும் வரமாட்டீங்கிறான் என்ற வருத்தம் இருக்கிறது. எவ்வளவு அடித்தாலும் வாங்கிக் கொள்கிறோம், அதைத் தாங்கி கொள்கிறோம். மொழி தெரியாது என்று வராதீர்கள். கலைஞர் என்ற ஒற்றை வார்த்தைக்குள் நீங்கள் எல்லாம் சகோதரர்களாக மாறிவிட்டீர்கள். இது உங்கள் பூமி, உங்கள் களம்” என்றார்.

இயக்குனர் A.வெங்கடேஷ் , “பேய் எல்லாம் பாவம்” இல்லை பேய் எல்லாம் லாபம். ஆமாம் பேய் படங்களுக்கு என்று எப்போதும் ஒரு மினிமம் கியாரண்டி இருக்கிறது. இப்போதெல்லாம் படம் வாங்குபவர்கள் , சார் உங்க படம் பேய் படமா என கேட்கிறார்கள். பேய் படங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்” என்றார்

இயக்குனர் ராசி அழகப்பன் பேசும் போது, “பேய்க்கும் எனக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு. பேய்யை நம்பினோர் கைவிடப் படார். ஊரைவிட்டு வெளியே போய்க்கூட பிழைத்துக் கொள்ளலாம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் சாமளான். பாண்டிச்சேரியில் இருந்து அமெரிக்கா போய் சுமார் 15 பேய் படங்களை எடுத்துவிட்டார். நான் அவரை சமீபத்தில் பார்க்கும் போது கூட கிளாஸ் எனும் பேய் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் வரும் பேய்யோடு குடும்பம் நடத்தலாம் போல் இருக்கிறது. இந்த பேய் நன்றாக டான்ஸ் ஆடுகிறது, லிப்ஸ்டிக் போடுகிறது, சூப்பராக பேசுகிறது. வியாபார ரீதியாக பார்த்தால், பேய் படங்களில் போடப்படும் பணத்தில் 75 சதவீதம் உறுதியாக திரும்பக் கிடைத்துவிடும். எனவே மனிதனை நம்பி படம் எடுப்பதைவிட பேயை நம்பி படம் எடுத்துவிடலாம்”, என அவர் கூறினார்.

இதில் பேசிய ஹீரோயின் டோனா சங்கர், இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தகவலை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

இந்தப் படம் ஆரம்பிக்கும்போது இயக்குன் தீபக் நாராயணன் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். படப்பிடிப்பில் இருவரும் காதலர்களாக மாறினோம், தயாரிப்பாளருக்கு படத்தை முடித்து கொடுத்து விட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம். அதன்படி படம் முடிந்ததும் திருமணம் செய்து கொண்டோம். இப்போது ஆடியோ விழாவில் கணவன் மனைவியாக கலந்து கொண்டு இருக்கிறோம் என்றார். மேலும் இயக்குனர் கல்யாண், மைம் கோபி, கில்டு யூனியன் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.