நிவேதா பெத்துராஜ் பெருமை!

உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரை வில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். தளபதி பிரபு டைரக்டு செய்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமஷனுக்காக உதயநிதிஸ்டாலின், பார்த்திபன், நிவேதா பெத்துராஜ், சூரி, இயக்குநர் தளபதி முருகன் ஆகியோர் தென் தமிழகம் முழுக்க சென்றனர்.

இந்நிலையில் ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், இரண்டாவது படத்திலேயே மெகா கூட்டணியுடன் கிராமத்து ரோலில் களமிறங்குகிறார். இதன்மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நிவேதா பெத்துராஜ், “இது எனக்கு இரண்டாவது படம். கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். ‘சிங்கக்குட்டி’ என்ற பாடலில் சிறப்பாக நடனம் ஆடியிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்துக்காக தினேஷ், ஷோபி, பிருந்தா ஆகிய மாஸ்டர்களுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

நடனத்தில் என்னை வியக்க வைத்தவர் காமெடி நடிகர் சூரிதான். நாங்கள் ஒருபக்கம் பிராக்டிஸ் செய்துகொண்டிருந்தால் சூரி அதை கண்டுகொள்ளவே மாட்டார். ஆனால், ஷாட்டுக்கு வந்தால் கரெக்டாக ஆடி, பாராட்டு பெறுவார். கேமராமேன் பாலசுப்ரமணியம் படத்தில் என்னை அழகாகக் காட்டியிருக்கிறார். பார்த்திபன் சார் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார். இருந்தாலும் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நேரம் கிடைக்கும்போது, ஏதாவது சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருப்பார். இது ஜனரஞ்சகமான படம். நல்ல மெசேஜும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.