என் குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்ய தயாரானேன்! – கமல் பகீர்

பிரபல பத்திரிகை ஒன்றின் இணையதளத்துக்காக தனக்குப் பிடித்த 70 படங்களை வரிசைப்படுத்தி பட்டியலிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இதில் தான் எழுதி, நடித்த ‘மகாநதி’ படத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், முதல்முறையாக, அந்தக் கதையை எழுதத்தூண்டிய சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளர்.

அதில், “எது என்னை ‘மகாநதி’ எழுதவைத்தது என்பது பற்றி நான் இதுவரை சொன்னதில்லை. இப்போது எனது மகள்கள் வளர்ந்துவிட்டனர். உலகம் எப்படி என புரிந்துகொண்டிருப்பார்கள். எனவே இப்போது சொல்கிறேன். எனது வீட்டில் வேலை செய்தவர்கள் எல்லோரும் சேர்ந்து எனது மகளை கடத்தி அதன் மூலம் என்னிடம் மிரட்டி பணம் பெறலாம் என திட்டம் போட்டிருந்தார்கள். ஒரு முறை அதற்கான ஒத்திகையும் நடந்தது. ஆனால் எதேச்சையாக அவர்கள் திட்டத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு கோபம் வந்தது, பதட்டமானேன், எனது குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்யவும் தயாரானேன். ஆனால் சரியான சமயத்தில் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

அப்போது நான் புதிய திரைக்கதை ஒன்றை எழுதவேண்டியிருந்தது. அதை நான் ஒரு மாதமாக தள்ளிப் போட்டு வந்தேன். இந்த சம்பவத்துக்குப் பிறகு நான் எழுத உட்கார ஆரம்பித்தபோது, அது தானாக நடந்தது. ஒருவேளை என் பயமும், பீதியும், ஏதோ நடந்துவிடுமோ என்ற பிரமையும் அதற்கு உதவியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.