விவேகம் சூப்பர் ஹிட் – ஃபோர்ப்ஸ் டெய்லி தகவல்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘விவேகம்’ பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு மாறி மாறி ஒரு குழப்பமான விமர்சனங்கள் வந்துள்ளன. குறிப்பாக புளூசட்டை என்ற அடைமொழிக்காரரான மாறன் என்பவரது விமர்சனம், கோலிவுட் அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய விமர்சனத்துக்கு திரையுலகினர் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

அதே சமயம் ‘விவேகம்’ படத்துக்கான எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து இயக்குநர் சிவா, “எதிர்மறை விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் பலரும் இப்படத்துக்கு நல்ல விமர்சனங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எங்களுடைய முயற்சிக்கு கிடைத்த பாராட்டால் நன்றி கடன்பட்டு இருக்கிறேன்.தண்ணி அடிப்பது, தம் அடிப்பது, ஆபாசமாக ஒரு வசனம் எதுவுமின்றி ஒரு நேர்மையான திரைப்படம் என்று பலரும் தெரிவித்த கருத்தால் நெகிழ்ந்திருக்கிறேன். அஜித் சாரின் உறுதுணைக்கும், ரசிகர்களின் உறுதுணைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்மறை விமர்சனங்களை நான் பார்ப்பதில்லை. நியாயமான விமர்சனங்களைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்டுள்ள ப்ளஸ் மற்றும் மைனஸ் அனைத்தையுமே குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். அவை அனைத்துமே ஒரு இயக்குநராக உதவியாக இருக்கும். காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலுள்ள விமர்சனங்களைப் பார்க்கவில்லை. விமர்சனம் என்பது படத்தைச் செய்யலாம், தனிமனித தாக்குதல் என்பது விமர்சனம் அல்ல. அப்படிப்பட்ட விமர்சனம் செய்பவர்கள் மீது எனக்கு எந்தவொரு விமர்சனமில்லை, வெறுக்கவுமில்லை.

விஜய் மில்டன் சார், லாரன்ஸ் சார், கவுரவ் சார் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில் பலரும் பொய்யாக விமர்சனம் செய்பவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்குமே என் நன்றி. நல்ல படத்தை யாராலும் தடுக்க முடியாது என்பது உண்மை. அதே சமயம் பலர் உண்மையாக ரொம்ப அழகாக விமர்சனம் செய்திருந்தார்கள். ஒரு படத்தை எப்படி விமர்சிக்க வேண்டுமே, அப்படி செய்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்குமே நன்றி. நிறைகளுக்கு நன்றி, குறைகளைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன்” என்று சிவா தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ‘விவேகம்’ படத்தின் வெற்றி என்று அஜீத் ரசிகர்கள் தரப்பும், தோல்வி என்று அஜீத்தை பிடிக்காதவர்கள் தரப்பும் செய்தி பரப்பி வரும் நிலையில் சர்வதேச முன்னணி பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஊடகமோ ‘விவேகம்’ சூப்பர் ஹிட் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

விவேகம்’ படம் நான்கு நாட்களில் இந்திய வசூலில் ரூ.69.5 கோடி என்றும், வெளிநாட்டு வசூலில் ரூ.36.5 கோடி என்றும் மொத்தம் ரூ.106 கோடியை வசூலித்துள்ளது என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.127 கோடி. இந்நிலையில் சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை மற்றும் நான்கு நாள் வசூல் ஆகியவைகளை சேர்த்தால் இந்த படம் தற்போதே லாபம் என்றும் இனிமேல் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் கிடைக்கும் லாபம் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

அத்துடன் சென்னையில் இந்த படம் நான்கு நாட்களில் சுமார் ரூ.6 கோடி வசூல் செய்து ‘கபாலி’ மற்றும் ‘பாகுபலி 2’ வசூலை மிஞ்சிவிட்டதாகவும் அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனத்தையும் தாண்டி இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.