ஸ்ரீதேவி -யின் மாம் – திரை விமர்சனம்!

எண்பதுகளில் ஒரு பெண்ணை அழகானவளாகச் சொல்லவேண்டுமென்றால் ‘ஸ்ரீதேவி போல…’ என்பார்கள். நடிகைகளிலோ ஸ்ரீதேவி போல் அழகானவர் எவருமில்லை என்றிருந்தது ஒரு காலம்.
ஆனால், அதே காலம் எத்தனை குரூரமானது. அப்படிப்பட்ட அழகி மணமாகி பாலிவுட் போய் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டு மைக்கேல் ஜாக்ஸன் தங்கை போல் ஆனதைத்தான் சொல்கிறேன். (உடனே ‘எம்ஜே’ அழகனில்லையா..? என்றோ, இது கருப்பின மக்கள் மீதான வன்முறை என்றோ சண்டைக்கு வந்து விடாதீர்கள். நானே கருப்பன்தான்..! அந்த ‘டெவில் லைக்’ மூக்குக்காக அப்படி ஒரு ஒப்புமை.)

அப்போதிலிருந்து அவ்வப்போது மும்பையிலிருந்து வரும் ஸ்ரீதேவியின் புகைப்படங்கள் பார்த்து பெருமூச்சு விட்டு ‘காண்டான’ மனதை ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ ஓரளவு பதப்படுத்தியது. முகம் மாறினாலும், ‘மூக்கு’ சப்பாணியானாலும் அந்த அப்பிராணியான நடிப்பில் ‘மயிலு’ உயிர்ப்புடன் இருப்பது புரிந்தது. முகம் முழுதும் மாவு பூசி மறைத்த ‘புலி’ வில்லியை விட்டுவிடுங்கள்..!
இப்போது அதே ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ திரைக்கு வந்திருக்கிறது. இப்போது இன்னும் மோசம். ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ ஸ்ரீதேவியா இது..?’ என்று மனது மருகியது. அப்படியே ‘டெவில்’தான்..! எகிப்திய மம்மிக்குள்ளிருந்து பெயர்த்தெடுத்துக்கொண்டு வந்த பிரேதம் போல்… (இது ரொம்ப ஓவர் என்பவர்கள் படம் பார்த்துவிட்டு என்னை வசை பாடுங்கள்…) போச்சு… இந்த நைந்து போன முகத்தையா இன்னும் இரண்டரை மணிநேரம் பார்த்தாக வேண்டும் என்ற அங்கலாய்ப்பு மாற… கையிலிருந்த செல்போனில் கொஞ்சம் எஃப்.பிக்கும், வாட்ஸ் ஆப்புக்கும் போய் மேய வேண்டியி ருந்தது. படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்துக்குள் கதையில் ஒன்ற முடிந்தது இயக்குநர் ரவி உத்யவாரின் திறமையான கையாளலால் என்பேன்.

கதைக்குள் ஸ்ரீதேவி, நிஜ வாழ்க்கை போலவே அவரது கணவருக்கு இரண்டாம் தாரமாகியி ருக்கிறார். முதல் தாரம் இறந்துவிட்ட நிலையில்… அவரது பதின்பருவ மகள் மற்றும் தனக்குப் பிறந்த ஐந்து வயது மகளுடன் வாழ்க்கையைத் திறம்பட கையாள்வதுடன் பள்ளி ஆசிரியை யாகவும் இருக்கிறார். அந்த18 வயதுப்பெண்ணைப் பெறாவிட்டாலும் அவளது அம்மாவைவிட அதிக அன்புடனும், பொறுப்புடனும் ஸ்ரீதேவி நடந்து கொண்டாலும், விவரம் தெரிந்த அந்தப்பெண் ஸ்ரீதேவியை மனதளவில் அம்மாவாக ஏற்கவில்லை. ‘மேடம்…’ என்கிற அளவிலேயே வைத்தி ருக்கிறாள். அவள் மனம் மாறி “அம்மா…” என்றழைப்பதுடன் படம் முடிந்துவிடும் என்று நமக்கு ஒருவரிக்கதை புரிந்தாலும் அந்த ‘பாச ரச வாதம்’ எப்படி நிகழ்கிறது என்கிற திரைக்கதை நகர்த்தல்தான் படம்.

முதல்பாதி… சான்ஸே இல்லை..! இன்றைய பெருநகர வாழ்க்கையை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கும் இயக்குநர், அரை மணிநேரத்துக்குள்ளேயே கதையின் வலுவான பகுதிக்குள் நம்மை அழைத்து சென்றுவிடுகிறார். அங்கிருந்து ஆரம்பிக்கிறது ஸ்ரீதேவி என்கிற நடிக மயிலின் சிறகு விரித்த அசுர ஆட்டம். அந்த ‘நடிப்பு ராட்சசி’யின் முகமும் அப்படியே இருப்பதைத் தற்காலிகமாக மறந்தே போகிறோம். அழகு இத்யாதிகளையெல்லாம் தன் இடதுகை சுண்டு விரலால் ஓரம் ஒதுக்கி விட்டு ஒரு அம்மாவாக தன்னை உணர வைத்திருப்பதில் ஸ்ரீதேவி, ஹாலிவுட்டின் ஆஸ்கர் நடிகைகளுக்கு ‘ஹாய்’ சொல்லவே செய்கிறார்.

இரண்டாவது பாதிக்கதை வழக்கமான ‘சினிமா க்ளிஷே’ பூசிக்கொண்டு பயணித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், அப்படித்தான் அதைச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அவர்கள் செயல்பட்டிருக்க, அப்படி இருக்கக் கூடாது என்று இப்போது நாம் விவாதிப்பதில் அர்த்தம் இல்லை. எதிர்பார்த்த கதை எதிர்பார்த்த இடத்திலேயே முடிந்தாலும் இரண்டு இடங்களில் ஆற்ற மாட்டாமல் அழுதே விட்டேன். (சீமான் எழுத்தில் அமைந்த பாரதிராஜாவின் ‘பசும்பொன்’ பார்த்தால் இப்போதும் அழுவேன்..!)

‘மாம்’ நம் நெஞ்சை நிறைப்பதற்கான மூன்று காரணங்களை வரிசைப் படுத்தினால், முதலாவது ரவி உத்யவாரின் அற்புத இயக்கம், இரண்டாவது ஸ்ரீதேவியின் அசுர சாதக நடிப்பு, மூன்றாவது ஏ.ஆர்.ரஹ்மானின் உணர்வுகளைத் தட்டிப்பார்க்கும் பின்னணி இசை. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே உயர்தரம் என்றாலும் தேர்ந்த இயக்குநர் அமைந்து விடும்போது மொத்த டீமும் ஒழுங்காகப் பணியாற்றியே தீர வேண்டிய கட்டாயம் நிகழ்ந்து விடுகிறது.

\நான்கு காமப்பிசாசுகளால் ஸ்ரீதேவியின் மகள் ஓடிக்கொண்டிருக்கும் காரில் வைத்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் காட்சியில் அந்தக் காட்சியை ஒரு மில்லிமீட்டர் கூட காட்சிப்ப டுத்தாமல் கார் பயணிப்பதை மட்டுமே காட்டுகிறார் இயக்குநர். அந்தக இரவில் டாப் ஆங்கிளில் அந்தக்கார் ஆளில்லாத நகரில் வலம்வர, வெறும் பின்னணி இசையால் மட்டுமே உள்ளே நடக்கும் வன்மத்தை உணரவைத்து நம் மனதைப் பதைபதைக்க வைத்து விடுகிறார் ஏ.ஆர்.ஆர். காரினுள் அந்த இளம் குருத்தை நான்கு தடிமாடுகள் ஏற்றியதையும், அவளைத் தாக்கி அரைமயக்கமுறச் செய்வது வரை மட்டுமே நமக்குக் காட்டப்பட்டது. அந்தக் காரின் அமைதியான பயணம் படம் பிடிக்கப்படும்போது அதனுள் டிரைவர் மட்டுமே அமர்ந்து ஜாலியாகப் பாட்டு கேட்டுக்கொண்டு காரை ஓட்டிப் போயிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சினிமாவின் ஜாலமே அதுதான். அந்த வெற்றுக் காரின் பயணமும், ரஹ்மானின் லய வினோதமும் அந்த பயங்கரத்தை நேரில் பார்ப்பதைவிட பல மடங்கு கூட்டி விடுகிறது.

முக்கால் மணிநேரத்தில் வீட்டுக்கு வந்து விடுகிறேன்… என்று சொன்ன மகள் இரவு மூன்று மணியாகியும் வராத பதட்டத்தில் ஆரம்பிக்கும் அந்தத் தாயின் பரிதவிப்பு, மகள் சென்றிருந்த ரெசார்ட்டில் சென்று தேடி போலீஸில் புகார் கொடுத்து… மறுநாள் காலை சேதி அறிந்து மருத்துவமனையில் மகளின் கோலம் பார்த்து வெடிப்பது வரை ஆறாத் துயராக நீள்கிறது. ஆனால், அதுதான் ஸ்ரீதேவி என்கிற நடிப்புத் தாரகைக்குக் கொடுக்கப்பட்ட நள்ளிரவுத் தொடக்கம் என்பது படம் இன்னும் நீள நீளப் புரிகிறது.

மகளின் நிலைக்காகப் பாதி உயிரைக் கொடுத்த நிலையில் ஸ்ரீதேவி இருக்க, மகளோ அசைய முடியாத நிலையிலும் தான் சிறுநீர் கழிப்பதைக்கூட ‘மேடம்’ பார்த்துவிடக் கூடாதென்று படுக்கையின் அருகே இருக்கும் திரையை இழுத்துவிட்டுக் கொள்கிறாள். அப்போது ஸ்ரீதேவி பார்க்கும் ஒரு பார்வை… மூக்கு போனாலும் அந்த முழி இருப்பது ஆறுதல் தேவி..! மகள் மனதில் இடம்பிடிக்க முடியாத நிலையாமையை ஒரு நடிகை எப்படி ஒரு பார்வைக்குள் கொண்டுவர முடியும் என்று விரும்புபவர்கள் ஒரு நடை தியேட்டருக்குப் போய் ஸ்ரீதேவியிடம் அறிந்து வாருங்கள்.

கரீனா கபூருக்கு இருபது வயது குறைத்து பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்தால் எப்படி ஒரு அழகுப் பூங்கொத்து மலருமோ அப்படி இருக்கிறாள் ஸ்ரீதேவியின் மகளாக வரும் ‘சாஜல் அலி’. அந்தப் பூங்கொத்து நடுநிசி நாய்களால் கிழித்து எறியப்பட்டு கழிவுநீர்ப் பாதையில் வீசப்படும்போது இதுவரை நாம் படித்திருக்கும் அத்தனை பாலியல் பலாத்கார செய்திகளும் நம் கண்முன் வந்து போகின்றன… ‘இப்படித்தானே நடந்திருக்கும் அப்போதும்..?’ ஒவ்வொரு வில்லனாக நாடி நரம்ப றுத்துக் கடைசியில் அந்தக் கொடூர வில்லனை நல்ல போலீஸின் துணையுடன் துப்பாக்கி முனை யில் நிறுத்தி, அவனைச் சுட வாய்ப்பிருந்தும் சூழ்நிலைப் பிரமையில் சிக்கி நிதானமிழந்திருந்த நேரம் உண்மையறிந்த மகள் வந்து “மாம்..” (அம்மா) என்றதும் பொட்டு பொட்டென்று சுட்டுத் தள்ளுகிறாரே ஸ்ரீ..? குபீரென்று என் கண்களில் எப்படித்தான் கண்ணீர் பொங்கியதோ..?கண்முன் நடப்பது நிழலான சலனம் என்கிற புரிதல், 1000 படங்களில் வந்த கிளைமாக்ஸ்… என்றிருந்தும் ஒரு விமரிசகனையும் விழியோரம் துடைக்க வைக்க முடியுமென்றால் அதுதான் கலையின் வெற்றி.

தமிழில் நேர்த்தியாக டப்பிங் செய்திருந்தும் தலைப்பை ஏன் ‘அம்மா’ என்று வைத்திருக்கக் கூடாது..? இருந்தாலும் அந்த மூக்கு ஆபரேஷனும், மும்பைக் கலாசாரமும் பாதிக்காமலிருந்தால் இன்னும் கூட ஸ்ரீதேவியைக் கொண்டாடியிருக்க முயுமென்றே தோன்றுகிறது..!

வேணுஜி