இமைக்கா நொடிகள் படத்தில் என்ன ஸ்பெஷல்? – இயக்குநர் அஜய் ஞானமுத்து பேட்டி!

போனவருடம் கோலிவுட்டில் வெளியாகி ஹிட் அடைத்த டிமாண்டி காலனொ படத்தை இயக்கிய அஜய் தற்போது கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் சார்பில் தயாரிக்கும் படமான ‘இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தை டைரக்ட் செய்து வருகிறார்; இப்படத்தில் நயன் தாரா சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். பெங்களூர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் தொடர் கொலைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து கூறிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, “சைக்கோ கொலையாளியை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் அல்ல. சைக்கோ கொலை என்றால் எந்தவித காரணமும் இருக்காது. ஆனால், இந்த படத்தில் நடக்கும் கொலை சம்பவங்களுக்கு பின்னணி ரொம்ப அழுத்தமான காரணம் இருக்கும். சமுதாயத்தில் முக்கியமானவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட, அந்த கொலைகள் ஏன் நடக்கிறது, அந்த கொலையாளி யார்? என்பதை சிபிஐ அதிகாரியான நயந்தாரா கண்டுபிடிப்பார். இந்த சம்பவங்கள் அனைத்தும் பெங்களூரில் நடக்கும், அதே சமயம் சென்னையில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் அதர்வா, இந்த சம்பவத்திற்குள் சிக்கிக்கொள்ளும் சூழல் உருவாக, அதில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார், என்பது போல திரைக்கதை அமைத்திருக்கிறேன்.

நயன்தாரா இந்த படத்தில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்தது கதையை கேட்டு தான். அவரது கதாபாத்திரம் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அதிரடியான சண்டைக்காட்சிகள் அவருக்கு இல்லை என்றாலும், அவரை சுற்று வரும் காட்சிகள் அனைத்தும் பரபரப்பாக இருக்கும். அதேபோல், வில்லனாக நடித்துள்ள இயக்குநர் நுராக் காஷ்யப் வரும் காட்சிகள் அனைத்தும் படம் பார்ப்பவர்களுக்கு அச்சம் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.” என்றார்.

வில்லனாக பாலிவுட் இயக்குநரை தேர்வு செய்தது ஏன்? என்றதற்கு, “இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரம் நயன்தாரா, அதர்வா என படத்தின் முக்கியமான வேடங்களுக்கு இணையானது என்பதால் புதிதாக யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து கொளதம் வாசுதேவன் சாரை கமிட் செய்தும் வைத்திருந்தோம். ஆனால் அவர் வழக்கம் போல் டைரக்‌ஷனில் பிசியாகி விட்ட நிலையில். அப்போது தான் முருகதாஸ் சாரின் ‘அகிரா’ படம் பார்த்தேன், அதில் அனுராக் காஷ்யப்பின் நடிப்பும், அவரது கெட்டப்பும் என்னை கவர்ந்தது. உடனே அவரை வில்லனாக நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தோம். பிறகு முருகதாஸ் சார் மூலமாக அவரது அப்பாய்ன்மெண்ட் வாங்கி, அவரிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்ததால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.” என்றார்.

இப்படத்தில் நயன்தாராவுக்கு இப்படத்தில் ஜோடி கிடையாது, அதே சமயம் நயன் தம்பி ரோலில் வரும் அதர்வாவுக்கு ஜோடி இருக்கிறதாம். நயன்தாராவுக்கு காதல் காட்சிகள் இல்லை என்றாலும், ரசிகர்களை அட்ராக்‌ஷன் செய்யும் விதத்தில் அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறதாம். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும்ம் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை வரும் ஆகஸ்ட் மாசம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.