கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரை உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், “மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
ஆனால் விஷா லின் இந்த முடிவுக்கு பல திரையங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், இம்முடிவுக்கு குறித்து ஆலோசிப்பதற்காக விரைவில் சங்கக் கூட்டத்தை கூட்டவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இது குறித்து கோயம்புத்தூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் பேசிய போது, “தமிழக அரசை விஷால் முறைப்படி அணுகி கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே நடக்காமல் வேலைநிறுத்தம் என்பது எந்த விதத்தில் நியாயம். விஷால் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் நாங்கள் யாருமே கலந்து கொள்ளப் போவதில்லை. எங்கள் மாவட்டத்தின் திரையரங்குகள் வழக்கம் போல் செயல்படும்” என்று தெரிவித்தார்.
என்ன சொல்கிறது பெப்சி அமைப்பு?
தமிழ் திரையுலகினர் வேலைநிறுத்தம் குறித்து பெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசிய போது “அரசாங்கம், திரையரங்க உரிமையாளர்கள், க்யூப் நிறுவனம் உள்ளிட்டவர்களிடம் பல கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். அது ஒரு கெடுவையும் இட்டுள்ளார்கள். மே 25-ம் தேதிக்கு பிறகு அதெல்லாம் நிறைவேற்றுகிறார்களா அல்லது வேலைநிறுத்தம்தானா என்பது தெரியவரும். ஜுன் 1-ம் தேதி தொழிலாளர்கள் அனைவருமே அவர்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் கஷ்டமான நேரம். ஆனால் அதெல்லாம் விட தமிழ் திரையுலகம் நன்றாக இருந்தால் மட்டுமே நாங்கள் வாழமுடியும்.
தமிழ் திரையுலகை காப்பாற்றுவதற்கு எங்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. எப்போது வேலைநிறுத்தம் வந்தாலும் எங்களுக்கு ஒரு பாதிப்பு இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், நிரந்தர பாதிப்பிலிருந்து இந்த திரையுலகை காப்பாற்றினால் மட்டுமே நாங்கள் வாழ முடியும். 25-ம் தேதி கலந்தாய்வு கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. வேலைநிறுத்தம் மட்டுமே தீர்வு என்றால் நாங்கள் ஆதரவை தெரிவிப்போம்” என்று தெரிவித்தார்.
தமிழ் திரையுலக வேலைநிறுத்தம் என்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறுமா என்பது சந்தேகத்துடனே பார்க்கப்படுகிறது.