2016ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ரஸ்தம் படத்தில் நடித்த இந்தி நடிகர் அக்ஷய் குமார் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘மின்னாமினுங்கு-தி ஃபயர்ஃப்ளை’ என்ற மலையாளப் படத்தில் நடித்த சுரபி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த படத்துக்கான விருது, கசாவ் என்ற மராத்தி படத்துக்குக் கிடைத்துள்ளது. ‘வென்டிலேட்டர்’ என்ற மராத்திப் படத்தை இயக்கிய ராஜேஷ் மபுஸ்கர் சிறந்த இயக்குனராக தேர்வாகி உள்ளார்.
சமூக பிரச்னைகளை சிறப்பாகச் சொன்னப் படத்துக்கான விருதுக்கு அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
சிறந்த இந்திப் படத்திற்கான விருது சோனம் கபூர் நடித்த ‘நீரஜா’வுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறப்பு விருதும் கிடைத்துள்ளது.
குழந்தைகளுக்கான சிறந்தப் படமாக ‘தானக்’ என்ற தெலுங்குப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது ‘தங்கல்’ படத்தில் நடித்த காஷ்மீர் நடிகை சாய்ரா வாஸிமிற்கு கிடைத்துள்ளது.
ஜோக்கர்
தமிழில் சிறந்தப் படமாக ஜோக்கர் தேர்வாகி உள்ளது. ராஜு முருகன் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.
ஜோக்கர் படத்தில் ஜாஸ்மின் பாடலைப் பாடிய சுந்தர் ஐயர் சிறந்த பாடகராக தேர்வாகி உள்ளார்.
சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு அறிவிக்கபட்டு உள்ளது.
சிறந்த பாடலாசிரியருக்கான விருது கவிஞர் வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது. தர்மதுரை படத்தில் இவர் எழுதிய “எந்தப் பக்கம்” என்ற பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது சூர்யா நடித்த ‘24’ படத்தின் ஒளிப்பதிவாளர் திரு-வுக்கு வழங்கப்பட உள்ளது.
சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் விருதுக்கு புலிமுருகன் என்ற மலையாளப் படத்தில் பணியாற்றிய பீட்டர் ஹெய்ன்ஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.