தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ; நடிகர் விஷால் வெற்றி!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நேற்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கான இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால், ஆர். ராதாகிருஷ்ணன், கேயார் ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதையடுத்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவருக்கு போட்டியிட்ட விஷால் 478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதேபோன்று, பொருளாளர் பதவிக்கு விஷால் அணி சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு 344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 326 வாக்குகளும், விஜய் முரளி 212 வாக்குகளும் பெற்றனர். துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, நடிகர் பிரகாஷ்ராஜ் 408 வாக்குகளும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் 357 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

மேலும், செயற்குழு உறுப்பினர்களாக விஷால் அணியை சேர்ந்த பார்த்திபன், சுந்தர் சி, பாண்டியராஜ் உள்ளிட்ட 17 பேரும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், அடுத்த இரண்டு ஆண்டுகள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொற்காலமாக இருக்கும் என கூறினார்.