பனை என்பது படத்தின் பெயர் அல்ல மண்ணின் பெயர்!-வைரமுத்து!

 

ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பனை”. இந்த படத்தில் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்,

இயக்குநர் பேரரசு பேசியதாவது ,

“இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு, கவிதை, உரையாடலை கேட்கவே பங்கேற்றேன். கவிப்பேரரசு வைரமுத்து என்பது பெயர் அல்ல. தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை, கௌரவம், தவப்புதவன் என சொல்லலாம். அவரிடம் இருந்து ஒரு சில விஷயங்களை நான் ஃபாலோ பண்ணுகிறேன். கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ஹீரோக்களுக்கென்று அறிமுக பாடல்கள் இருக்கும். அந்த பாடல்கள் எல்லா இடங்களிலும் ஒலிக்கும். ரஜினியின் வந்தேண்டா பால்காரன், ஆட்டோக்காரன் போன்ற பாடல்கள் மக்களிடத்தில் போய் சேரும். ட்யூனுக்கு வரிகளை நிரப்பாமல் மக்களுக்கு என்னென்ன தேவையோ அதை நுழைத்து ஹீரோவுக்கான பாடலாக அமைந்தாலும் அங்கு உண்மையான ஹீரோ வைரமுத்துதான்.

அவரை உன்னிப்பாக கவனித்து வந்த நான் படம் இயக்கும்போது அதுபோன்ற பாடல்களை எல்லாம் எழுதுனேன். வைரமுத்து எழுதுன பாடலை அமைக்க வேண்டும் என நினைத்து திருப்பாச்சி படத்தில் நீயெந்த ஊரு பாடலை எழுதுனேன். என் படங்களில் ஹீரோவுக்கான அறிமுக பாடலை எழுத தூண்டியது வைரமுத்து தான். ட்யூனுக்கு வரிகளை நிரப்புவதை விட, கவிதைகலை நிரப்புபவர் தான் வைரமுத்து.

படத்தின் பெயர் பனை. அன்றைக்கு பனை ஓலை இல்லையென்றால் தமிழில் பெரும்பான்மையான காப்பியங்களே இருந்திருக்காது. திருவள்ளுவருக்கு வெள்ளை ஆடை, காவி ஆடை, கருப்பு ஆடை வேண்டுமானாலும் அணிவிக்கலாம். ஆனால் அவர் கையில் இருக்கும் பனை ஓலையை மாற்ற முடியாது. அந்த சிறப்பு தமிழுக்குரியது” என தெரிவித்துள்ளார்.

 

கவிஞர் வைரமுத்து பேசியதாவது..

 

பனை என்பது படத்தின் பெயர் அல்ல மண்ணின் பெயர், மக்களின் பெயர் மற்றும்
நம்முடைய கலாச்சாரத்தின் குறியீடு என்றுதான் கருதுகிறேன்.  ஒரு படத்திற்கு
தலைப்பு மிக மிக முக்கியம். இப்போது வருகிற தமிழ்த் திரைப்படங்களின் பெயர்களை
பார்த்தால் தான் கொஞ்சம் துக்கப்படுகிறேன். சில நேரங்களில் வெட்கம் படுகிறேன்.அந்தப் பெயர் எனக்கு ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை அது வெறும் ஒரு சொல்லாக இருக்கிறது. தமிழில் சொற்களுக்கா பஞ்சம். தமிழில் தலைப்புகளுக்காக பஞ்சம். தமிழில் அழகான சொல்லாடலுக்கா பஞ்சம். நல்ல பெயர்களை தனித்துவமான
பெயர்களை ஏன் நீங்கள் சூடக் கூடாது என்று பார்க்கிறேன். இதற்காக பத்திரிகைகளில் அதிகாலை செய்திகளை புரட்டிப் பார்க்கிறேன்.

Panai' Audio & Trailer Launch | Vairamuthu | Vairamuthu Latest Speech | Perarasu | Panai Movie - YouTube

படத்தின் தலைப்புகளை பார்க்கிறபோது அடுத்த பக்கம் செல்வதற்குள் அந்த தலைப்பு ஒரு மின்னலைப் போல் என் மூளையை கடந்து முடித்து விடுவதை பார்க்கிறேன்.  தலைப்பு என்றால் நெஞ்சில் தைக்க வேண்டாமா என் இருதயத்தில் சென்று பசை போட்டு ஒட்டிக்கொள்ள வேண்டாமா? என்னை திருப்பி உச்சரிக்க வைக்க வேண்டாமா?

இந்த படத்திற்கு எனக்கு கதை சொன்ன இயக்குனர் இந்தப் படத்திற்கு விதை என்று பெயர் வைத்திருக்கிறேன் என்று சொன்னார் நான் சொன்னேன் விதை நல்ல பெயர் தான் ஆனால் நீங்கள் சொல்ல விரும்புகிற கதையை விட்டு விதை தள்ளி இருக்கிறது எனவே இந்த படத்தின் ஒட்டுமொத்த இருதய துடிப்பும் தலைப்புக்குள் வரவேண்டும் என்றால்
பனை என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னேன்.விதையை விட பனை எனக்கு இன்னும் பக்கத்தில் இருக்கிறது ஐயா என்று சொன்னார் அவருக்கு வாழ்க என்று சொன்னேன்.