உரு – திரை விமர்சனம்!

சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜானர் என்றால் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்களை சொல்லலாம்.  சமீபகாலமாக சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்கள் தமிழிலும் வரத் தொடங்கி யுள்ளன. உரு படமும் ஒரு சைக்காலஜிகல் த்ரில்லர் படம் தான்.

கலையரசன் பிரபலமாக இருந்து சரிவில் சிக்கித் தவிக்கும் ஓர் எழுத்தாளர். அவரது மனைவி தன்ஷிகா. ரீ எண்ட்ரிக்காக ஒரு தனி வீட்டில் தங்கி புது நாவல் எழுதத் தொடங்குகிறார் கலை. நாவலில் அவர் எழுதுவதெல்லாம் நிஜத்தில் நடக்கத் தொடங்குகிறது. அதனால் விளையும் ஆபத்துகள் தான் கதை. க்ளைமாக்ஸில் முக்கியமான இரண்டு ட்விஸ்ட்கள் இருக்கின்றன. இரண்டுமே எதிர்பாராதவை.

இரண்டே இரண்டு முக்கிய கேரக்டர்கள். இன்னும் நாலைந்து துணை கேரக்டர்கள்.இரண்டு, மூன்று லொகேஷன்கள் இவை தான் படம் முழுக்க. நல்ல திரைக்கதை அமைத்தால் மினிமம் பட்ஜெட்டில் ஒரு சைகாலஜிகல் த்ரில்லர் தரலாம் என்று நிரூபித்த இயக்குநர் விக்கி ஆனந்துக்கு பாராட்டுகள்.

கலையரசன் த்ரில்லர் படத்துக்கே உண்டான முகபாவனைகளை அசாத்தியமாக காட்டி நடிப்பில் தன்னை நிரூபிக்கிறார். தன்ஷிகாவுக்கும் ஸ்கோர் செய்யக்கூடிய கேரக்டர். இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

படத்தின் திரைக்கதையை விட பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும், ஜோஹனின் இசையும் திர்ல்லிங் டெம்போவைக் கூட்டுகின்றன. ஹாலிவுட் பட பிரபல த்ரில்லர் இயக்குநர்கள் தந்த பாதிப்பில் உருவை உருவாக்கி இருக்கிறார் விக்கி.

ஆர்ட்டிஸ்ட்கள் பற்றி கவலைப்படாமல் காட்சியமைப்பை நேசிக்கும் உலக சினிமா ரசிகர்கள் தாராளமாக ஒரு விசிட் அடிக்கலாம்.

உரு – த்ரில் அனுபவம்

ராஜிவ் காந்தி