தயாரிப்பு : லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ்
நடிகர்கள் : சார்லி, பவன், மேக்னா எலன், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ் மற்றும் பலர்.
இயக்கம் : ரமேஷ் கந்தசாமி
கரு. பழனியப்பனின் உதவியாளர் ரமேஷ் கந்தசாமி இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் ‘அரிமாபட்டி சக்திவேல்’. தமிழகத்தின் கிராமம் ஒன்றில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை தழுவி உருவாகி இருக்கிறது இப்படம். சாதிய ஒடுக்குமுறைகளை பற்றி பேசும் இப்படம் ரசிகர்களைக் கவரும்படி இருக்கிறதா ?
திருச்சி அருகே அருகே அரிமாபட்டி என்ற ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வழி வகுத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் நயாகன் சக்திவேல்(பவன்) வேறு ஒரு ஜாதி பெண்ணை காதலிக்கிறான். இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்புக் தெரிவிக்கின்றனர். அதையும் மீறி நாயகன் சக்திவேல் நாயகி (மேகனா) வை வெளியூருக்கு கூட்டி சென்று மணமுடிக்கிறார். இதன் பிறகு கட்டுப்பாடோடு வாழ்ந்து வந்த கிராமத்து மக்கள் இவர்களது காதலை ஏற்று கொண்டார்களா? இதன் பிறகு என்ன என்ன பிரச்சனைகளை இவர்கள் சந்தித்தார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் பேசும் படங்களை, அதிகம் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் மற்றும் ஒரு முயற்சியாக வந்திருக்கிறது இந்த திரைப்படம். முழுக்க முழுக்க கிராமங்களில் நிலவும் சாதியை ஏற்றத்தாழ்வுகள், தற்போதைய தலைமுறையை எப்படி பாதிக்கிறது, தற்போதைய தலைமுறை திருந்த நினைத்தாலும் அதன் முந்தைய தலைமுறையும் கிராமத்து கட்டுப்பாடுகளும் எப்படி இன்னும் சாதியத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே பேசி இருக்கிறது இப்படம். அதற்காகவே படத்தை கண்டிப்பாக பாராட்டலாம்.
ஒரு திரைப்படத்திற்கு ஒரு சமூக பிரச்சனை மட்டுமே போதுமா? ஒரு கதையும் அதில் விழும் முடிச்சுகளும் சுவாரஸ்யமும் சரியாக இருந்தால் மட்டுமே படம் நம்மை ஈர்க்கும். இப்படம் பிரச்சனையை பேசும் விதத்தில் சரியாக இருந்தாலும் ஒரு சினிமாவாக, முழுமையான படைப்பாக இல்லாமல் இருக்கிறது. வெறும் பிரச்சனையை மட்டுமே பேசும் படமாக ஆகிவிடுவது படத்தின் மைனஸ்
சக்திவேலாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் பவன் நடிக்க முயற்சித்திருக்கிறார். மூத்த நடிகர் சார்லி வழக்கம் போல் தனது நடிப்பால் ஈர்க்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை மேக்னா எலன் இயக்குநர் சொன்னதை மட்டும் கச்சிதமாக செய்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்படுத்திய ஈர்ப்பை படம் ஏற்படுத்த தவறிவிட்டது
ஜே பி மேனின் ஒளிப்பதிவும், மணி அமுதவனின் இசையும் படத்திற்கு தேவையானதைச் செய்துள்ளது.
அரிமாபட்டி சக்திவேல்- சமூகத்திற்கு தேவையான படைப்பு தான் ஆனால் சினிமா ரசிகர்களுக்கு ?