பாரதிராஜா எழுதி இயக்கி நடித்துள்ள படம் ‘ஓம்’ டீசர் ரிலீஸ் ஹைலைட்ஸ்!

இயக்குநர் பாரதிராஜா எழுதி, இயக்கி நடித்துள்ள திரைப்படம் ஓம். இதன் டீசர் இன்று (ஜூலை 22) வெளியாகியுள்ளது. விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, பாரதிராஜாவை வைத்து படம் இயக்க போவதாக கூறினார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா தனது தயாரிப்பு நிறுவனமான மனோஜ் கிரியேஷன் தயாரிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் ஓம். ஓர் எழுத்தாளரின் வாழ்க்கை பற்றிய இக்கதையில், பாரதிராஜாவோடு நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். வைரமுத்து, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இளம் தலைமுறை இயக்குநர்கள், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரன் போன்றோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிருபர்களிடம் பேசிய பாரதிராஜா, ‘‘நான் 45 வருடங்களுக்கு மேலாக நிறைய படங்கள் டைரக்டு செய்துள்ளேன். பாண்டியநாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறேன். ‘அன்னக்கொடி’ படத்துக்கு பிறகு ஒரு நல்ல கதை கிடைத்தது. அதை திரைக்கதை யாக விரிவுபடுத்தி, ‘ஓம்’ என்ற பெயரில் டைரக்டு செய்துள்ளேன்.

இந்த படத்தில் நானே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறேன். நட்சத்திரா என்ற புதுமுகம் கதாநாயகியாக வருகிறார். ஒரு எழுத்தாளரை பற்றிய கதை, இது. அந்த எழுத்தாளரின் மகன் லண்டனில் படிக்கிறான். எழுத்தாளரையும் லண்டனுக்கு அழைத்து தன்னுடன் தங்க வைக்கிறார். அப்போது சில பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதனால் எழுத்தாளர் தன் மகனை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது வழியில் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஒரு இளம் பெண்ணை காப்பாற்றி, ‘‘10 நாட்கள் என்னுடன் பயணப்படு. அதன்பிறகும் வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் நானே உன்னை கொன்று விடுகிறேன்’’ என்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதிக்கிறாள். அந்த 10 நாட்கள் பயணம்தான் கதை. காதல் என்பதற்கும் மேலான ஒரு உணர்வை இந்த படம் பிரதிபலிக்கும். காதலை வித்தியாசமான இன்னொரு பரிமாணத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன்.
இப்போது தமிழ் சினிமாவுக்கு வரும் இளம் தலைமுறையினர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். 12 இயக்குனர்களின் திறமைகளை பார்த்து வியக்கிறேன். டைரக்டர் பாலசந்தருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருக்கிறது. அதனை அரசிடம் வற்புறுத்து வேன். தொடர்ந்து படங்கள் டைரக்டு செய்வேன். ஒரு அரசியல் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. பெரிய பதவி தருவதாகவும் கூறினார்கள். எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி மறுத்து விட்டேன்.
நான் அரசியலுக்கு வந்து இருந்தால், முதல்–அமைச்சராகி இருப்பேன். முன்பெல்லாம் சினிமாவில் தமிழ் நடிகைகள் இருந்தனர். இப்போது இல்லை. கேரளா, மும்பை, கர்நாடகாவில் இருந்து நடிகைகளை அழைத்து வருகிறார்கள். இது வருத்தமான வி‌ஷயம். தனுஷ், சிம்பு திறமையானவர்கள். நடிகைகளில் நயன்தாரா சிறப்பாக நடிக்கிறார். தமிழ் கலாசாரம் சார்ந்த பொலிவும் அவர் முகத்தில் இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.’’ இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

இதைத் தொடர்ந்து நடந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் வெற்றிமாறன், ராம், அமீர் போன்றோர். அந்த உரையின் தொகுப்பு இங்கே.

ராம்

“கலைக்கு வயதில்லை என்று சொன்னார்கள், கலை மூப்பைக் குறைக்கக்கூடிய மருந்து. அதை பாலு மகேந்திராவிடம் பார்த்திருக்கிறேன். அதேபோல் முதிய வயதில் நின்றுகொண்டும், நடந்துகொண்டிருக்கும் பாரதிராஜாவிடமும் பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் பாராட்ட தெரிந்த ஒரு கலைஞன் இவர். யார், என்ன என்பதையெல்லாம் தாண்டி ஊக்குவிப்பதும், பாராட்டுவதும் இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. படத்தின் டீசர் பார்க்கும் போது படத்திற்கு ஓம் என்ற தலைப்பைவிட கலாட்டா என்று வைத்திருந்திருக்கலாம்”

நட்சத்திரா

“என்னை இந்த திரைப்படத்தில் அறிமுகம் செய்ததற்கு நன்றி அங்கிள். இன்றுதான் முதல் முறை நன்றி சொல்கிறேன். இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று தள்ளி வைத்தேன். விதார்த் சொன்னார், ‘இதை முடித்த பின் உங்களை விட்டு விட மாட்டார். நினைத்துக் கொண்டே இருப்பார்’என்றார். ஓம் படம் தாமதம் ஆனாலும் தனது கடின உழைப்பால் முடித்திருக்கிறார். உழைப்பை மட்டும் விட்டு என்றும் சோர்வடைந்திரக் கூடாது என்பதை அடிக்கடி வலியுறுத்துவார் பரதிராஜா அங்கில். அவரும் அப்படிதான் நடந்து கொள்வார்”

வெற்றிமாறன்

“ஓம் படத்தின் டீசர் பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்தேன். டீசர் பார்த்த பின்பு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. ஸ்டெய்லிஷாக செய்திருக்கிறார் பாரதிராஜா சார். அவரை வைத்து கண்டிப்பாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று பேசி கொண்டிருக்கிறோம். விசாரணை படம் பார்த்து விட்டு, இதை விட சிறப்பான படம் பண்ணிவிட்டு வந்து உன்னை பார்க்கிறேன் என்ற ஒரு ஆரோக்கியமான சவால் விட்டார். அதே போல் பிடித்த விஷயங்களை சொல்வதும், பிடிக்காத விஷயங்களை சொல்வதிலும் தயங்குவதில்லை. குறுகிய கால கட்டத்தில் தான் அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாலு மகேந்திரா சார் இல்லாத குறையை அதில் போக்கிக் கொள்கிறேன்.

அமீர்

“இமயம் குன்றுகளை அறிமுகம் படுத்துவது வழக்கம். ஆனால் இன்று குன்றுகள் இமயத்தை அறிமுகப்படுத்தும் சூழல் அமைந்திருக்கிறது. இது இமயத்திற்கு கிடைத்த வரமாகவும், குன்றுக்குக் கிடைத்த பாக்கியமாகவும் பார்க்கிறேன். நட்சத்திரா சொன்னார்கள் எனக்கு நன்றாகத் தமிழ் பேச வரும் என்று, எங்களை போன்றவர்களுக்கு பெருமையான விஷயம். ஆனால் இது தமிழ் சினிமவிற்கு அவமானமாக இருக்கும் என்று கருதுகிறேன். இனி அடுத்தடுத்த விழாக்களில் கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து பேசுங்கள்”

பாரதிரஜா

“என் வாழ்க்கையின் பெரிய சாதனை என்று திரைப்படம் இயக்கியதை சொல்ல மாட்டேன். இந்த தலைமுறை எல்லா பிள்ளைகளும் என்னை அப்பா என்றழைப்பதை பெருமையாக கருதுகிறேன். இங்கு வந்திருக்கும் இயக்குநர்கள் யாரும் சாதாரண ஆட்கள் கிடையாது. இந்த தலைமுறை இயக்குநர்களுக்கு போட்டியாக இந்த படத்தை எடுத்துள்ளேன்.” என்றவர் அடுத்ததாக தான் பண மதிப்பிழப்பு குறித்து படம் எடுக்க இருப்பதாகவும், அதற்கு செல்லாக்காசு என தற்காலிக மாக பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=3psx9Ozm9nM