பள்ளி பருவத்தை நினைவு படுத்தும் ‘நினைவெல்லாம் நீயடா’ !!

தயாரிப்பு – லேகா தியேட்டர்ஸ் படராயல் பாபு
இயக்கம் – ஆதிராஜன்
நடிகர்கள் – பிரஜன், ரோஹித் , யுவலட்சுமி, ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார்.

பள்ளிப்பருவத்தில் ஏற்படும் அன்பும் காதலும் வாழ்க்கையில் பின்னாளில் எத்தனை பாதிப்புகளை கொண்டு வரும் என்பது தான் இப்படத்தின் மையம்.

பள்ளியில் படிக்கும் போது கவுதம் மற்றும் மலர் விழி காதலித்து வருகிறார்கள். படிப்பை முடித்த காதலி ஒரு கட்டத்தில் வெளிநாடு செல்கிறார். காதலிக்காக காத்திருக்கும் கவுதம் (பிரஜன்), வீட்டினர் கட்டாயத்தால் அத்தை மகள் மனிஷாவை கல்யாணம் செய்கிறார். வெளிநாட்டில் இருந்து வரும் காதலி கவுதம் வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பது தான் படம்.

பள்ளிப்பருவ காதல் படங்கள் நிறைய வந்துள்ளது அதே பாணியில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லாமல் வந்திருக்கிறது இப்படம். பள்ளிப்பருவ போர்ஷன் நிறைய வருகிறது இடைவேளைக்குப் பிறகு, தான் மெயின் கதை ஆரம்பிக்கிறது.

நாயகனாக பிரஜின் காதலையும் காதல் ஏக்கத்தையும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். விருப்பப்படி வாழமுடியாமல் கட்டாயத்துக்கு வாழ்கிறோமே என்கிற தன்னிரக்கத்தையும் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். பல வருடங்கள் நாயகனைக் காத்திருக்க வைத்த நாயகியாக நடித்திருக்கிறார் சினாமிகா. இன்னும் கொஞ்சம் நடிக்க பயிற்சி எடுத்திருக்கலாம்.

ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா ஆகியோர் காமெடியில் படத்தையும் தூக்கி நிறுத்த முயற்சித்துள்ளார்கள். இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு பலம்.

படத்தின் உருவாக்கத்திலும் காட்சி அமைப்பிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், ஒரு படத்தை நம்மை கவனித்து பார்க்க வைக்கும் சுவாரஸ்யங்கள் எதுவும் படத்தில் இல்லை.

எத்தனை காதல் வந்தாலும் முதல் காதல் மனதில் என்றும் நீங்காது. அது இனம் புரியாத ஒரு விதமான உணர்ச்சியை கொடுக்கும் என்பதைசொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆனால் இது 80 களின் கதை என்பது தான் சோகம்.