கோலிவுட்டோ அல்லது ஹாலிவுட்டோ காதல், ஆக்சன், பேமிலி செண்டிமெண்ட் சினிமா எடுப்பதில் வல்லவர்கள் எக்கச்சக்கமானோர் உண்டு. ஆனால்,அந்த மாதிரி சுவையான முழுமை யான காமெடி படம் எடுக்கும் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். காமெடி படம் என்றால் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமாக வேண்டும். அந்த வகையில் நம் தமிழ் சினிமா வில் நகைச் சுவைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அதிலும் இந்திய மொழிகளில் எல்லா தரப்பினருக்கும் சவால் விடும் வகையில் கலைவாணர் தொடங்கி தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் என்று அறுபடாத சங்கிலி தொடரில் தேங்காய், சுருளி, கவுண்டமணி – செந்தில், விவேக், வடிவேலு என்று போய் கொண்டிருந்தது அந்த வீரியம். ஆனால் அந்த நகைச்சுவை இப்போது நீர்த்து போய் விட்டது என்றே இப்போதைய தமிழ் சினிமாக்களைப் பார்க்கும் போது சொல்ல தோன்றுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் – அதாவது நடிப்பு என்றால் என்னவென்றாலே தெரியாத யோகிபாபுவை வைத்து ‘தர்மபிரபு’ என்ற பெயரில் ஒரு சினிமாவை கொடுத்து முழுக் காமெடி படம் என்று முத்திரை வேறு கொடுத்து உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
எம தர்ம ராஜன் போஸ்டிங்கில் இருக்கும் ராதாரவிக்கு வயதாகி விட்டதால் ரிட்டயர் ஆக முடிவெடுக்கிறார். அதை அடுத்து அவரது மகன் யோகி பாபு-வுக்கு போதிய தகுதியே இல்லா விட்டாலும் வேறு வழி இல்லாமல் எமனாக அமர வைக்கப் படுகிறார். அதே சமயம், எமன் பதவிக்கு ஆசைப்படும் சித்ரகுப்தனான ரமேஷ் திலக், சதி செய்து யோகி பாபுவை எமன் பதவியில் இருந்து தூக்க திட்டமிடுவதால் ஏற்படும் குளறுபடியால் சிவன் கோபத்துக்கு ஆளாகி எமலோகமே அழிந்து போகும் நிலை வருகிறது. அதை யோகி பாபுவான எமன்(?!) எப்படி எதிர்கொண்டு சுபம் போடுகிறார் என்பதுதான் கதை.
எடுத்துக் கொண்ட விஷயத்துக்காக இந்திய பிரதமரின் 15 லட்ச ரூபாய் கோட் தொடங்கி, தமிழக அரசியல் சம்பவங்கள், அபிராமியின் கள்ளக் காதல், டிராஃபிக் போலீசால் நடந்த சாலைக் கொலை கள், கற்பழிப்பு சம்பவங்கள் என அனைத்தை யும் காட்சிகளாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக பாமக கட்சி நிறுவனர் ராமதாஸை நினைப்படுத்தும் விதமாக வில்லனை ஒரு ஜாதி கட்சி தலைவராக வும், அவரை எமனே பயப்படும் கொலைகாரனாகவும் காட்டி சலிப்பை ஏற்படுத்தி விட்டார்கள். குறிப்பாக யோகி பாபு தன் பாணியில் வாயில் வந்ததை வசனம் என்று பேசுவதே காமெடி என்று நினைத்து விட்டார் போலும். அதிலும் அமைச்சர் பட்டாளம் தொடங்கி சகலரையும், வாடா, போடி, நாதாரி என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நடிப்பின் இலக்கணம் குறித்து உடனடி விளக்கம் அளித்தால் கோலிவுட்டுக்கு நல்லது.
இயக்குநர் புதுசு என்றாலும் அரசியல் நையாண்டி என்ற பெயரில் தேசத் தந்தை காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பெரியார் உள்ளிட்டவர்களை நரகத்துக்கு வரவழைத்து ஆலோசனை நடத்துவதும், சோ. ராமசாமி போன்ற கேரக்டரில் ஒருவரை வைத்து படு மட்டமாக சித்தரித்திருப்பதும் உச்சக் கட்ட அநியாயம். சிவனாக வரும் மொட்டை ராஜேந்திரன் குத்துப் பாடல் ஆடுவது தொடங்கி ஐயோ என்ற பெயரில் எமன் மனைவியான ரேகா சரக்கடிப்பது மாதிரியான காட்சிகளை எல்லாம் காமெடி என்ற பெயரில் வைத்து களங்கப்படுத்தி விட்டார்கள்.
செட் , இசை எதுவும் ஒட்டவில்லை
மொத்தத்தில் இந்த தர்மபிரபு – அண்டர்வெயிட் பேபி