உடலில் என்ன வேண்டுமானாலும் குறை இருக்கலாம் ஆனால் அது மனிதனின் தரத்த்தை நிர்ணயம் செய்து விடாது. உடலில் குறை கொண்டவர்களும் மனிதர்களே .. அவர்கள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை சொல்லும் படம் தான் மதிமாறன்.
திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் தபால்காரராக இருக்கும் எம் எஸ் பாஸ்கருக்கு இரட்டைக் குழந்தைகள். அதில் ஒருவர் வெங்கட் செங்குட்டுவன் (நெடுமாறன்), மற்றொருவர் இவானா (மதி). இதில் வெங்கட் உயரத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கிறார். அப்பா போல தபால்காராக ஆக வேண்டும் என்பது இவரது ஆசை.ஊரில் உள்ளவர்கள் கேலியும் கிண்டலும் செய்ய எதை பற்றியும் கவலைப்படாமல் தனது திறமையை படிப்பிலும், அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே அக்காவின் ஆதரவில் வளர்ந்து வருகிறார்.
ஒருநாள், இவானா தனது கல்லூரி பேராசிரியரோடு ஓடி போய்விட்டார் என்ற செய்தியறிந்து எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள். இதன் பிறகு அக்காவைத் தேடி சென்னை வருகிறார் நெடுமாறன்.
சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்களும், பெண்கள் காணாமல் போவதும் தொடர்கிறது. அப்படி அக்கா வீட்டருகில் ஒரு பெண் காணாமல் போய்விட அந்த கேசை துப்பறிகிறார் மதிமாறன் இறுதியில் என்னவானது என்பதே படம்.
நெடுமாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன், தனது உருவம் தாண்டி உயர்ந்து நிற்கிறார். முதல் படம் போல் அல்லாமல் அட்டகாசமாக நடித்துள்ளார். வெங்கட். நிச்சயம் தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தை பிடிப்பார்
நாச்சியார், லவ் டூடே ப்டங்ககளில் நடித்து தனக்கான இடத்தை பிடித்த இவானா இந்த படத்தில் அக்காவாக முக்கியமான பாத்திரம். தன் பாத்திரம் அறிந்து சிறப்பாகச் செய்துள்ளார். எம் எஸ் பாஸ்கர் சில காட்சிகள் என்றாலும் அழுத்தமாக மனதில் பதிகிறார்.
வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரி தோழியாகவும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கும் ஆராத்யா அழகிலும், நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.
ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார்.இ என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கின்றனர்.
கார்த்திக் ராஜாவின் இசையில் பாடுகள் கேட்கும் ரகம் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. பர்வேஸின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.
இடைவேளை வரை அழகான
வாழ்வியலை சொல்லும் படம் இடைவேளைக்குப் பிறகு கொலை கண்டுபிடிப்பு என திரில்லர் மோடுக்கு சென்றுவிடுகிறது. ஏதோ தனித்தனியாக இரண்டு படம் பார்த்தது போல் உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை. அதை மட்டும் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.
ஆனாலும் உடல் ஊனத்தை கிண்டல் செய்யக்கூடாது என்பதை அழுத்திச் சொன்னதற்காக கண்டிப்பாக மதிமாறனை பாராட்டலாம்.