7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
எனக்கு பலவீனங்களை கடந்து வருவதற்கு எழுத்தும், பாடல்களும் கிரியா ஊக்கியாக அமைந்தன. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் நல்ல நட்பு அமைந்தது. அப்படி அமைந்த நட்பு தான் இந்த படத்தில் என்னை கொண்டு வந்து சேர்த்தது. அந்த நட்பு பாடலில் பிரதிபலிக்கும். சமூக கோபங்களை பாடல்களில் ஆங்காங்கே தூவியிருக்கிறேன் என்றார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.
இந்த படம் எனக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. என் நலனில் மிகுந்த அக்கறை உடையவர் விஜய் சேதுபதி. அவரும் இயக்குனரும் என் மேல் முழு நம்பிக்கையை வைத்து, முழு சுதந்திரம் கொடுத்தனர். அது தான் இந்த படத்தில் இசையாய் வெளிப்பட்டிருக்கிறது என்றார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் என்னை யாருமே பாராட்டவில்லை. படத்தை பார்த்த எல்லோருமே விஜய் சேதுபதி பற்றி தான் எல்லா இடத்திலும் என்னை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவரோடு இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் நான் பேசிய ஒரு வசனம் நிச்சயம் ட்ரெண்ட் ஆகும்னு நம்புறேன் என்றார் நடிகர் டேனியல்.
படத்தில் ஒப்பந்தமாகும்போது விஜய் சேதுபதி மட்டும் தான் எனக்கு அறிமுகமானவர், மொத்த குழுவும் எப்படியிருக்குமோ என்ற பயத்தில் தான் ஷூட்டிங் போனேன். ஆனால் மொத்த குழுவும் ரொம்ப நெருங்கி பழகியது. இயக்குனர் ஆறுமுகத்துக்கு நல்ல காமெடி சென்ஸ்பல் இருக்கிறது. நல்ல காமெடி நடிகராக வரவும் வாய்ப்பு இருக்கிறது. சூது கவ்வும் படத்தில் பார்த்த விஜய் சேதுபதிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கும் நடிப்பில் நிறைய மாற்றம். காயத்ரி மாதிரி ஒரு நடிகையை ஏன் தமிழ் சினிமா இன்னும் கொண்டாடவில்லை என தெரியவில்லை. நிறைய உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். இந்த படத்தில் கொண்டாடப்படுவார் என்றார் நடிகர் ஆர்ஜே ரமேஷ் திலக்.
இந்த படத்தில் கோதாவரினு ஒரு கதாபாத்திரம் இருக்கு, நடிக்கிறீங்களானு கேட்டாங்க. ஆறுமுக குமார் தயாரிப்பாளராக, இயக்குனராக இருந்தும் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் ரொம்பவே கூலாக இருந்தார். இந்த குழுவில் இருந்த எல்லோருடனும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் நல்ல ஒரு அனுபவமாக அமைந்தது. தலக்கோணம் காட்டில் மொத்த குழுவுடன் பழக நிறைய வாய்ப்பு கிடைத்தது என்றார் நடிகை காயத்ரி.
இது என்னுடைய முதல் தமிழ் படம். தமிழ் தெரியாது, குழுவில் நடிகர்கள் யாரையும் தெரியாது, வசனம் கூட சரியாக தெரியாது. ஆனாலும் என்னை உற்சாகப்படுத்தி எனக்கு ரொம்பவே ஆதரவு கொடுத்தார்கள் என்றார் நடிகை நிஹாரிக்கா.
இந்த படத்தில் ஹரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரொம்பவே எனக்கு நெருக்கமான கதாபாத்திரம். என்னுடைய ரியல் லைஃபிலும் நான் அப்படி தான். இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் சேதுபதி என்னை பரிந்துரைத்தது எனக்கு பெருமை. அவர் எப்போதுமே சினிமாவையே நினைத்துக் கொண்டிருப்பவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். சினிமாவிலும், வாழ்க்கையிலும் எனக்கு நண்பனாக பயணித்து வருபவன் டேனி தான். கேமராமேன் ஸ்ரீசரவணன் ரொம்ப ரிஸ்க் எடுத்து ஒளிப்பதிவு செய்யக் கூடியவர். படத்துக்காக என்ன வேணாலும் செய்ய துணிந்தவர். இந்த படத்துக்காக புதுமையான இசையை கொடுத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். இயக்குனர் ஆறுமுக குமாருக்கு இது முதல் படம் தான் என்றாலும் தனக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு வாங்கி, சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார் என்றார் கௌதம் கார்த்திக்.
ஒரு தெளிந்த நீரோடை போல மிகவும் தெளிவானவர் தான் இயக்குனர் ஆறுமுக குமார். ஆள் பார்த்து பழகாமல், எல்லோரையும் சமமாக நினைத்து பழகக் கூடியவர். அவர் முதல் படத்திலேயே தயாரித்து இயக்கியிருக்கிறார். தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கும் ஹீரோ தான் கௌதம் கார்த்திக். எந்த ஈகோவும் இல்லாத, நன்கு முதிர்ந்த அனுபவம் கொண்டவர். அவரை இந்த படத்தில் பரிந்துரைத்ததற்கு பெருமைப்படுகிறேன். காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த வருடம் அவருக்கு மிக சிறந்த வருடமாக இருக்கும் என்றார் விஜய் சேதுபதி.
இந்த கதையின் மீதும், எங்கள் மீதும் நம்பிக்கை வைத்து ஃபைனான்ஸ் செய்திருக்கிறார்கள் அம்மே நாராயணா எண்டர்டெயின்மெண்ட். நான் இயல்பாக பழகுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கும் விஜய் சேதுபதி இப்போதும் அதே மாதிரி பழகுவது தான் ரொம்ப பெரிய விஷயம். தன் கதாபாத்திரத்தை எப்படி மெறுகேற்றி செய்வது என்ற எண்ணம் உடையவர். அது தான் அவரின் வெற்றிக்கும் முக்கிய காரணம். படத்தில் கௌதம் கார்த்திக்குக்கு ஜோடினு சொன்னா அது டேனியல் தான். ரொம்பவே ஜாலியான ஹீரோ. படத்தில் ஒவ்வொரு செட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது. படத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டினுக்கு இசையமைக்க நல்ல ஸ்கோப் இருந்தது, அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். எல்லோரும் ரசிக்கும் ஒரு பொழுதுபோக்கு படமாக நிச்சயம் இருக்கும் என்றார் இயக்குனர் ஆறுமுக குமார். ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன், எடிட்டர் கோவிந்தராஜ், பாடலாசிரியர் முத்தமிழ், திங்க் மியூசிக் சந்தோஷ், கூத்துபட்டறை முத்துகுமார், லைன் புரொட்யூசர் யோகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
Related posts:
'Big Shorts - Season 3' போட்டிக்காக மூன்று முக்கிய நிறுவனங்கள் இணைந்துள்ளன!June 8, 2024
பிரபலங்களின் வாழ்த்து மழையில் ‘பக்ரீத்’ டீசர்!February 9, 2019
‘அக்னி சிறகுகள்' முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தது!January 28, 2019
நலன் குமாரசாமி டைரக்ஷனில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' பட ஃபர்ஸ்ட் லுக்!May 26, 2024
பாரதிராஜா- ஜெய்பீம் குறித்து அறிக்கைNovember 16, 2021