லட்சுமி & மா ஷார்ட் பிலிம் டைரக்டரின் படத்தில் கமிட் ஆன நயன்தாரா!

0
256

தமிழில் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ‘லட்சுமி’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் நம்பர் 1 நடிகையாக நயன்தாரா வலம் வருகிறார். இவர் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்துவருகிறார். இவர் நடித்த அறம், டோரா, மாயா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், முற்போக்கான கதைகளத்தையும் கொண்டு குறும்படங்களை இயக்கிய இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறும்பட இயக்குநர் சர்ஜூன் ‘லட்சுமி’ மற்றும் ‘மா’ என்னும் இரண்டு குறும்படங்களை இயக்கி பிரபலமானார். மேலும் லட்சுமி குறும்படத்திற்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களும், பாராட்டுக்களும் ஒருசேர கிடைத்தன. சர்ஜூனின் அடுத்த இயக்கத்தில் உருவான ‘மா’ குறும்படத்தையும் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் YouTube-ல் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சர்ஜூன் இயக்க இருக்கும் முதல் திரைப்படத்திலேயே நடிகை நயன்தாரா ஹீரோயினாக ஒப்பந்தமாயிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ‘லட்சுமி’ குறும்படம் போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படத்தையே சர்ஜூன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் லட்சுமி குறும்படமே திரைப்படமாக உருவாகலாம் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விவரமறிய சர்ஜூனை தொடர்பு கொண்டு பேசிய போது, “நான் என் முதல் படமான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை ஆர்பாட்டமில்லாமல் இயக்கி முடித்து விட்டேன், சத்யராஜ் சார், வரலட்சுமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் விரைவில் மாதம் வெளியாகவிருக்கிறது. அறம் படத்தைத் தயாரித்த KJR ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படம், த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கிறது. இதுக்கிடையிலேதான் KJR ஸ்டியோஸ் ராஜேஷ்சார் என்கிட்ட ஏதாவது கதையிருந்தால் சொல்லச் சொன்னார். நான் என் படத்தின் ஒன்லைனைச் சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. உடனே, ‘நயன்தாரா மேம்கிட்ட இந்தக் கதையைச் சொல்லலாம்’னு சொன்னார். அவங்களுக்கும் கதை ரொம்பப் பிடித்திருந்தது. ‘பண்ணலாம் சர்ஜூன்’னு சொன்னாங்க. ரொம்ப ஹாப்பியா இருக்கு.. இது  முழுக்க முழுக்க  ஹாரர் படம். அதேசமயம், எமோஷனலான விஷயங்களும் படத்தில் இருக்கும். படத்தின் கதை எழுதுறப்போ, இந்தக் கதைக்கு பெரிய நடிகர், நடிகை யாராவது நடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன். என் லக்… நயன்தாரா மேடத்துக்குக் கதை பிடிச்சிருந்தது ரொம்ப சந்தோஷம்.”எ ன்றார்.