சித்தா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த படக்குழுவினர் !

 

எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா , சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந்த படம் ‘சித்தா’. இந்தப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது, சினிமா துறையை சேர்ந்த பலரும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர், இந்நிலையில் இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்

இயக்குநர் சசி பேசியதாவது,

’சித்தா’ படத்தில் ஒரு காட்சி வரும். தூய்மைப் பணியாளர்களைத் தவறாக பேசும் ஒருவரை கதாநாயகி அடிப்பது போல. அந்தக் காட்சியில் கண்கலங்கி விட்டேன். இதுபோல, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கேரக்டர் ஆர்க்கும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அருணின் ஃபிலிம் லாங்குவேஜ் சிறப்பாக வந்துள்ளது. எமோஷனலான, எண்டர்டெய்னிங்கான படம் இது. கிளைமாக்ஸை இதுபோல எடுப்பதற்கு ஒரு இயக்குநருக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அது அருணுக்கு உள்ளது. தயாரிப்பாளராக சித்தார்த்தும் அந்த இடத்தை அருணுக்குக் கொடுத்துள்ளார். இதன் வெற்றி என் படத்தின் வெற்றி போல சந்தோஷமாக உள்ளது. அதைக் கொண்டாடவே இங்கு வந்தேன். தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான படம் கிடைத்துள்ளது”.

இயக்குநர் அருண்குமார் பேசியதாவது,

” இந்த படத்தை எடுத்து செய்வதற்கு நானும் சித்தார்த்தும் ஒரு நாள் கூட யோசித்ததில்லை. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் இதில் வேலை பார்த்துள்ளோம். என்னை நம்பி வேலை பார்த்த படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் கமர்சியலாகவும் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்பிற்கு மிகப்பெரிய அங்கீகாரங்கள் வரும் என காத்திருக்கிறேன். இந்தப் பொறுப்போடு இனி வரும் படங்கள் செய்வோம்”.

நடிகர் சித்தார்த் பேசியதாவது,

“இது அருண்குமாரின் ‘சித்தா’. வெற்றி, தோல்வி என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யாமல் படத்தின் கதைக்கருவுக்காக எடுத்தோம். நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை. நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம். ‘சித்தா’ படம் அன்பு, குடும்பம், குழந்தைகள் வளர்ப்பில் உள்ள பொறுப்பு பற்றிய படம். குற்றம், தண்டனை சார்ந்த படம் கிடையாது. நடந்த ஒரு அனுபவத்தை வாழ்க்கையாக மாற்றி விடாதீர்கள் என சொல்லும் படம். அடுத்து ஒரு மிகப்பெரிய படம் வரப்போகிறது. அதுவரை இந்தப் படத்தை எத்தனை பேரிடம் சென்று சேர்க்க முடியுமோ கொண்டு போங்கள். இந்தப் படம் பார்த்துவிட்டு ஒரு குடும்பத்தில் உரையாடல் ஆரம்பித்தால் கூட சந்தோஷம்தான். மணி ரத்னம், கமல்ஹாசன் என எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்த குருக்கள் இந்தப் படத்திற்கு கொடுத்த ஊக்கம் மிகப்பெரிது. ரஜினி சாரும் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். படக்குழுவினர் அனைவருடைய உழைப்பும் இப்போது பேசப்படுகிறது.
படத்தில் சிறப்பாக வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் நடிகர்களுக்கும் நன்றி!” என்றார்.