நயன் தாரா-வின் ‘கோலமாவு கோகிலா’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

‘டோரா’, ‘அறம்’ போன்ற நாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களாகத் தேடி நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில் அவர் லேட்டஸ்ட்டாக நடித்துள்ள படம் ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோகோ’. நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, ‘கலக்கப்போவது யாரு’ ஜாக்குலின் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ‘நானும் ரெளடிதான்’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார் அனிருத் ரவிச்சந்தர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஒரு பள்ளி மாணவி தோற்றத்தில், கரும்பலகையில் முன்னாள், தலைகுனிந்து நிற்பது போல இருக்கும் போஸ்டர் வந்துள்ளது.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘எதுவரையோ’ பாடல் மார்ச் 8ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.