உலகெங்கும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் அக்டோபர் 4-ம் தேதி அசுரன் வெளியாகிறது!

தனுஷின் அசுரன் படம் வரும் அக்டோபர் 4ம் தேதி உலகெங்கும் 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரன். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பசுபதி, பவன், யோகி பாபு, ஆடு களம் நரேன், தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் என தேர்ந்த நடிகர்கள் இணைந்துள்ளனர். இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணியின் நான்காவது படம் இது. இவர்களுடன் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். அண்மையில் இந்தப் படத்தின் பாடல்கள்ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

தனுஷின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தைத் தந்த படம் ஆடுகளம். வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பெற்ற வெற்றி அசாதாரணமானது. சிறந்த நடிகர். சிறந்த இயக்குநர் உள்பட ஆறு தேசிய விருதுகளையும் இந்தப் படம் அள்ளியது. அதற்கு இணையான படமாக அசுரன் உருவாகியுள்ளதாக படம் குறித்து பேசப்படுகிறது.

இந்த தனுஷின் அசுரன் கதை உருவான விதம் குறித்து இயக்குநரிடம் கேட்ட போது, “லாக்கப்’ நாவல் `விசாரணை’ படமாக உருவாச்சு. ‘நல்ல படம்’னு நாலா பக்கங்கள்ல இருந்தும் பாராட்டுகள். அப்ப ஓர் அலைபேசி அழைப்பு. ‘நான் பூமணி பேசுறேன். என்னைத் தெரியுமா உங்களுக்கு?’ன்னு எதிர்முனையில் ஒரு மெல்லிய குரல். ‘தெரியும் சார் சொல்லுங்க’னேன். ‘உங்களைச் சந்திக்கணும்’ னார். நேரில் சந்திச்சேன். ‘நாவல்களைப் படமாக்குறதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?’ன்னு கேட்டார். ‘எனக்கு அதில் ஆர்வம் இருக்கு சார்’னு சொன்னேன். உடனே, ‘இது உங்களுக்குப் பொருத்தமான நாவலா இருக்கும். படிங்க’ன்னு சொல்லி, தன் ‘வெக்கை’ நாவலைக் கொடுத்தார். படிக்க ஆரம்பிச்சேன். ‘அப்பா, அம்மா, மகன்னு இருக்கிற ஒரு பேமிலி டிராமா படம் இதுவரை நான் பண்ணியதில்லை. இது அப்படியான ஒரு படமாகவும் இருக்கும். தவிர, சாதிய அமைப்பு, பொருளா தார ஏற்றத்தாழ்வு, தண்டனை முறைகளின் நியாயமற்ற தன்மைகளைப் பேசும் படமாகவும் இருக்கும். நிச்சயம் இதைப் படமா பண்ணணும்’னு தோணுச்சு. ‘வெக்கை’ நாவல், ‘அசுரன்’ ஆன கதை இதுதான்” என்றார் வெற்றிமாறன்.

அதே சமயம் தயாரிப்பாளர் தாணுவுடன் வெற்றி மாறன் இணைந்த சூழல் குறித்து விசாரித்த போது டைரக்டர்,“இதுக்கு முன்பே நாங்க பேசிட்டுதான் இருக்கோம். எங்க மாமாவுக்கு தாணு சார் நல்ல நண்பர். ‘பொல்லாதவன்’ முடிச்சதுமே எங்க மாமா என்னை அழைச்சிட்டுப் போய் தாணு சாரை சந்திக்க வெச்சார். அப்பப்ப அவரை சந்திப்பேன். இரண்டரை வருஷத்துக்கு முன் ஒரு அட்வான்ஸ் கொடுத்தார். அதைத் திரும்பக் கேட்கவே இல்லை. ‘இருக்கட்டும். நீயே வெச்சுக்க. படம் பண்ணும் போது பார்த்துக்கலாம்’னார். பெரிய ப்ராஜெக்டா பண்ணணும்னு ஆசைப்படுவார். படத்துக்காகச் செலவு செய்யும் விஷயத்துல நம்மை அசர வைக்கிறவர் தாணு சார்” என்றார்

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், “இந்தப் படம் அதன் தலைப்பைப் போலவே ஒரு அசுரத்தனமான படம். நான் பேசுவதை விட படம் பேசட்டும் என்பதால் இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்வேன். வணிக ரீதியாக இந்த ஆண்டின் முக்கியமான படமாக அசுரன் இருக்கும். அது உறுதி,” என்றார்.

உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 4-ம் தேதி 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் அசுரன் வெளியாகிறது. இதில் அமெரிக்காவில் மட்டும் 110 அரங்குகளில் அசுரன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.