ராக்கி – இரத்த தெறிக்கும் வன்முறையில், வாழ்வின் தேடல் !

 

ஒரு சிறப்பான திரை அனுபவத்தை தரும் சினிமாவின் வரவு இந்திய சினிமாக்களில் மிகவும் குறைவாக உள்ளது. தியேட்டர் அனுபவத்தையும், படத்தினுள் சென்று வெளியே வந்த முழுமையான அனுபவத்தையும் தரும் படமாக ராக்கி அமைந்துள்ளது.

தன் குடும்பத்தை கொலை செய்த, தன் முதலாளி கும்பலை பழிவாங்க முயலும் நாயகன். தன் வாழ்வின் இறுதிபிடிப்பாக மிஞ்சியிருக்கும் தன் அக்கா மகளை காப்பாற்ற முயல்வதே கதை. 80 ஆண்டுகால தமிழ் சினிமாவில் நாம் பலமுறை பார்த்த கதை தானே என எண்ணினால், நமது கணிப்பு தவறாகும் படி உருவாக்கபட்டிருக்கிறது, திரைக்கதையும், படத்தின் உருவாக்கமும்.

கதைக்கு ஏற்றார் போல், சினிமாவின் விதம் மாற வேண்டும் என்ற கூரிய சிந்தனையை, நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

உலக சினிமாக்களையும், புதிய அனுபவங்களை அள்ளி வீசும் மேல் நாட்டு சினிமாக்களையும் அருகில் வைத்து ஒப்பிடும் படியான படமாக உருவாகி இருக்கிறது ராக்கி.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் தனக்கே உண்டான தேவைகளையும், பகையையும், கோபத்தையும் வைத்து கொண்டு திரிகிறது.

தேர்ந்த நடிகர்களிடமும், புது முக நடிகர்களிடம் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, படத்தினுள் அதன் ஆழத்தை தொடும் அளவு நடித்திருக்கிறார்கள்.

நடிகர் வசந்த் ரவி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த முக்கியமான நடிகர்களில் ஒருவர். பாசத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் கருணையற்ற கொலைகாரனாக வசந்த் ரவியின் நடிப்பு தத்ரூபம். அதே போன்ற கதாபாத்திர வடிவமைப்பு தான் பாரதிராஜாவிற்கும், பாசத்தின் பிடியில் கருணையற்ற கொலைகாரன். பல நடிகர்களை நடிக்கவைத்த பாரதிராஜா, முழுதிரையும் தன் கைக்குள் கொண்டு வரும் வித்தையை அறிந்தவராக இந்த படத்தின் மூலம் தெரிகிறார். அவரின் நுணுக்கமான நடிப்புகள், நடிகர்களே பார்த்து ஆச்சர்யபடும் விஷயமாக இருக்கிறது.

படத்தின் ஆதிநாதமே திரைக்கதை தான், ஒவ்வொரு எபிசோடுகளாக நகரும் திரைக்கதை, அந்த எபிசோடின் கருவையையும் பூர்த்திசெய்கிறது, படத்தின் திரைக்கதையையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

படத்தில் பாராட்டுகளை அள்ள வேண்டிய அடுத்த இரு நபர்கள் ஓளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தர்புகா சிவா. பரந்த வெளியின் அழகியலையும், இவ்வளவு பெரிய உலகத்தில் வாழும் சின்ன மனிதர்கள் என்பதையும் நமக்கு கடத்த பெரும் உழைப்பை வழங்கி இருக்கிறாள். தர்புகா சிவாவின் பின்னணி இசை பல இடங்களில் ஒரு சிம்பனி கேட்பது போல் உள்ளது. எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத இசையை கொடுத்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் இசையமைப்பாளர்.

வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக இருந்தாலும், அதனை படத்திற்கு அந்நியமாக்காமல், அங்கு வாழும் மனிதர்களின் வாழ்கைமுறை அது என்பதை படத்தின் ஓட்டத்துடன் வழங்கியுள்ளார்.

இந்தியாவின் கில்பில் பாணி திரைப்படமாக வெளிவந்துள்ளது ராக்கி. அனுராக், பாலா, தியாகராஜன் குமாரராஜா என தனக்கென ஒரு திரைமொழியை கண்டுணர்ந்துள்ளார் இயக்குனர்.

முழுக்க இரத்தத்தால் ஆன வன்முறை நிறைந்த ஒரு புது உலகை படைத்து நம்மை உலவ விட்டிருக்கிறார் இயக்குநர் ஆனால் இது கண்டிப்பாக வயது வந்த பார்வையாளர்களுக்கு மட்டுமே. ஏனெனில் படத்தில் தெறிக்கும் அதீத இரத்தமும் வன்முறையும் நம் இதயத்தை தாண்டி பாதிப்பை ஏற்படுத்திக்கொள்வதாக இருக்கிறது.

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் தான் ராக்கி. தமிழ் சினிமாவின் அழகிய வரவு தான் அருண்.