ஆம்புலன்சிற்குள் நடைபெறும் சர்வைவல் திரில்லர் என்ற ஜானரில் தயாராகியிருக்கும் ‘துணிகரம்’!

ஏ4 மீடியா வொர்க்ஸ் டாக்டர் வீரபாண்டியன் மற்றும் டாக்டர் டெய்ஸி வீரபாண்டியன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘துணிகரம்’ அறிமுக இயக்குநர் பாலசுதன் எழுதி, இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகர்கள் வினோத், பரணி, டென்னிஸ், நடிகைகள் செம்மலர் அன்னம், சரண்யா ரவிச்சந்திரன் காயத்ரி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் கோகுல் இசையமைத்திருக்கிறார். பின்னணியிசையை தனுஷ் மேனன் கவனிக்க, படத்தொகுப்பை என். பிரகாஷ் கையாண்டிருக்கிறார். க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த சிறிய பட்ஜெட் படத்தை தமிழகம் முழுவதும் மே 6ஆம் தேதியன்று ஆக்ஷன் ரியாக்ஷன் விநியோக நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் ஜெனிஷ் வெளியிடுகிறார். இதனையடுத்து படத்தின் முன்னோட்ட வெளியீடும், ஊடகவியலாளர் சந்திப்பும் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் அபி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

இயக்குநர் பால சுதன் பேசுகையில்,” துணிகரம்’படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாருமில்லை. முதன்மையான கதாபாத்திரம், முக்கியமான கதாபாத்திரம் என கதாபாத்திரங்கள்தான் இடம்பெற்றிருக்கிறது. ஆம்புலன்சில் நடைபெறும் குழந்தை கள் கடத்தலை மையப்படுத்தி ஒரு இரவில் நடைபெறும் கதையாக ‘துணிகரம்’ உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தோன்றிய தலைப்புதான் இது. பொருத்தமானதாக இருந்ததால் இதனையே படத்தின் தலைப்பாக சூட்டினோம். சிவலோகநாதன் சிவ கணேஷ், திருப்பூர் சம்பத் ஆகிய இருவரும் தான் இந்த படத்தின் கதைக் கரு உருவாவதற்கு மூல காரணமாக இருந்தனர். அவர்களுக்கும் இந்த படத்தில் நன்றி தெரிவித்திருக்கிறேன். சென்னை பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒத்துழைப்பு வழங்கிய காவல் துறையினருக்கும், வனத்துறையினருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதுமுகங்கள், சிறிய பட்ஜெட் என்றாலும் திரைக்கதையை நேர்த்தியாக படமாக்கி இருக்கிறோம்.”என்றார்.

இசையமைப்பாளர் ஷான் கோகுல் பேசுகையில்,“ இந்த படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் இரண்டு பாடல்களை நான் எழுதி இருக்கிறேன், ஒரு பாடலை பாடலாசிரியர் கு. கார்த்திக் எழுதியிருக்கிறார். படத்தின் பின்னணி இசையில் தனுஷ் மேனன் பணியாற்றியிருக்கிறார். ‌ மூன்றாண்டு கால காத்திருப் புக்குப் பின் வெளியாகும் இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் ஜெனிஷ் பேசுகையில்,” எங்கள் நிறுவனம் சார்பில் சிறிய பட்ஜெட் படங்களில் தரமான படைப்புகளை தேர்வு செய்து வெளியிட்டு வருகிறோம். இந்த வகையில் இந்தியாவில் முதன்முறையாக ஆம்புலன்சிற்குள் நடைபெறும் சர்வைவல் திரில்லர் என்ற ஜானரில் தயாராகியிருக்கும் ‘துணிகரம்’ திரைப் படத்தை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் மே 6ஆம் தேதியன்று 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். குழந்தைகள் கடத்தலை மையப்படுத்திய திரைப்படமாக இருந்தாலும், கமர்சியல் அம்சங்கள் இருப்பதால் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.