தயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவரானார் நடிகர் பார்த்திபன்..!

0
257

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று மாலை சென்னையில் அந்த சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தற்போது சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் ராஜினாமா செய்து விட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால், அவருக்குப் பதிலாக நடிகர் பார்த்திபன் சங்கத்தின் துணைத் தலைவராக செயற்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்து பூட்டுப் போட்டு போராட்டம் நடத்திய தயாரிப்பாளர்களுக்கு ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பவும் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த நோட்டீஸுக்கு பதில் அனுப்பவில்லையென்றால் அவர்கள் மீது சங்க விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

அந்தப் போராட்ட நிகழ்வின் முழு வீடியோவும் சங்கத்தினர் கைகளில் இருப்பதால் அதைப் பார்த்து அதில் ஈடுபட்டவர்களைக் கணக்கில் எடுத்து அதில் சங்கத்தில் உறுப்பினர்கள் இருந்தால் அவர்களுக்கு நோட்டீஸும், சங்கத்தில் இல்லாதவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

அத்துடன் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை கச்சேரியை எப்படி விமரிசையாக நடத்துவது என்பது பற்றியும் விவாதிக்கப் பட்டதாம். இதற்காக தமிழக முதலமைச்சரை சந்தித்துப் பேசவும் தீர்மானித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவை என்றைக்குக் கூட்டுவது என்பதை அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் மத்திய அரசு தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர் கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்ததை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் சினிமா நுழைவுக் கட்டணங்கள் குறைந்து மக்கள் கூட்டம் சினிமா தியேட்டர்களுக்கு கூடுதலாக வரும் என்பதால் இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.