எப்படி இருக்கிறது RRR ?

இயக்கம் – எஸ்.எஸ். ராஜமெளலி
நடிகர்கள் – ராம்சரண், ஜூனியர் என்.டிஆர், ராம்சரண், அஜய் தேவகன், ஆலியா பட்

பாகுபலி மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த, எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் ஆர்ஆர்ஆர்.

கோரோனா போராட்டங்களை தாண்டி பல தடைகளை கடந்து வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தியதா என்றால் கண்டிப்பாக திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையரங்குகளில் கூச்சலிடுகிறார்கள் ஆனால் படமாக திரைக்கதையாக படம் அசத்துகிறதா என்றால் அது கேள்விக்குறி தான்.

1920களில் சுதந்திரப் போராட்டகாலத்தில், வாழ்ந்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை வைத்து கற்பனையாக ஒரு கதையினை உருவாக்கியிருக்கிறார் ராஜமெளலி.

காட்டுக்குள் இருந்து கடத்தப்பட்ட தங்கை மல்லியைத் தேடும் பீம், அவரை பிடிக்க நியமிக்கப்படும் ராம ராஜூ.
இருவரும் ஒன்றிணைந்து திரையில் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் தான் RRR.

பீமா ஜீனியர் என் டி ஆர், படிக்காத தற்குறி, அடங்கிபோகும் நீரின் பிரதிபலிப்பு ஆனால் பொங்கும்போது மிரட்டுகிறார். பல இடங்களில் நடிப்புக்கு அவருக்கு நல்ல ஸ்கோப் இருக்கிறது. முதுகில் குத்தப்படும் போது, அடிபடும் போது நடிப்பில் மிளிர்கிறார்.

ராம்சரண் படம் முழுக்க கதை இவரை சுற்றி தான் அமைக்கப்பட்டிருக்கிறது தன் லட்சியத்திற்காக அவர் எடுக்கும் முடிவுகள் அதை மாற்றி போராடும் இடத்தில் கவர்கிறார்.

ஆலியாபட் தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாக வந்து போகிறார். ஆக்சன் காட்சிகள் அதகளம் தயாரிப்பு வடிவமைப்பில் படம் ஹாலிவுட் பிரமாண்டத்தை கண் முன் கொண்டுவந்துள்ளது.

புலிவேட்டை காட்சியாகட்டும், பாலத்தில் பற்றி எரியும் ரயில் காட்சியாகட்டும். ரசிகர்கள் மிரண்டு அமரும்படி அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் திரையில் வடித்த ஓவியமாக இருக்கிறது கீரவானியின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது செந்தில் குமாரின் ஒளிப்பதிவு அருமை.

ஆர்.ஆர்.ஆர் பிரமாண்டத்தில் காட்சியமைப்பில் கவர்கிறது ஆனால் அது மட்டும் போதுமா?

படத்திற்குண்டான ஒரு கதையில் நிறைவான திரைக்கதை வேண்டாமா ? இந்திய சுதந்திர போராட்டம் பல இடங்களில் கேவலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா ஆங்கிலேயர்களும் முழு வில்லன்களாக சினிமா மசாலாத்தனத்தோடு காட்டப்பட்டிருக்கிறார்கள்

லாஜிக்கை யாரும் … மதித்ததாகவே தெரியவில்லை. விச உடம்போடு, உடைந்த கலோடு ராம்சரண் சண்டை போடுகிறார் எப்படி என்பது தான் தெரியவில்லை. ஆளும் கட்சியை திருப்திபடுத்த ஆயுதம் தாங்கிய ஆங்கிலேயப் படையினை ராமாவதாரம் எடுத்தது போல ராம் சரண் வில்லும் அம்புமாக வந்து இந்துமதக் கடவுள் ராமனின் வேஷமிட்டு அம்பெய்தி வீழ்த்துகிறார். ராஜமௌலிக்கு ஏன் இந்த நிலை.

தமிழ் டப்பிங்கில் ராம்சரணும் என் டி ஆரும் பேசியிருக்கிறார்கள் தெலுங்கு வாடை பயங்கரம். பல வார்த்தைகளை முழுங்கி வேறேதோ பேசுகிறார்கள்.

சுதந்திர போராட்டத்தை எடுக்கிறோம் எனும் போது நிறைய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சுந்ததிரம் சினிமா ஹீரோக்கள் சண்டை போட்டு வாங்கி தந்ததல்ல, 80 கள் கால படங்களின் காட்சிகளை சிஜி பிரமாண்ட தயாரிப்பில் மீண்டும் பெயிண்ட் அடித்து தந்துள்ளார்கள்.

RRR பிளாஸ்டிக் ரோஜா !