யுவனின் கோலிவுட் எண்ட்ரி-க்கு இன்னிக்கு வயசு 25

புல்லாங்குழல் மீதமர்ந்து நாட்டியமாடும் விரல்களுக்கு சொந்தக்காரன்; விட்டேத்தி மனநிலையை ஆற்றுபடுத்துவோன்; வெறுமை வாழ்வின் சுடரொளி; இசைவழியே இளைப்பாற்றும் ஞானக்குழலோன்; கானங்களின் காதலன்; கரைந்துபோகும் கணங்களின் மீட்பன்; தீரா இசை ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் ஜீவநதி… ‘யுவனிசம்’ போற்றுவோரால் இவ்வாறெல்லாம் ஆராதிக்கப்படும் தமிழ்த் திரையிசை உலகின் தனிக்காட்டு ராஜாவான யுவனின் கோலிவுட் எண்ட்ரி-க்கு இன்னிக்கு வயசு 25

ஆம் 1997 ஆம் வருசம் இதே பிப்ரவரி 27ல் இசையமைப்பாளராக அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான யுவன் சங்கர் ராஜா 150 படங்களை கடந்து 23 ஆண்டுகளாக தன்னை ஒரு முன்னணி இசையமைப்பாளராக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ இளம் இசையமைப்பாளர்கள் உருவாகி காணாமல் போனாலும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை தன்னகத்தே கட்டி வைத்திருப்பது யுவன்சங்கர் ராஜாவின் தனிசிறப்பு.

யுவன் தனது ஆரம்ப நாட்களை வலிகளுடனே எதிர்கொண்டார். அம்மாவின் விருப்பத்தின் பேரில் 1997-ஆம் ஆண்டு ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக நுழைந்த அந்த பதினாறு வயது சிறுவன் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

இந்த அறிமுக குறிச்சு, “இளையராஜாவைதான் இந்த படத்துக்கு புக் பண்ண போனேன். வரவேற்பரையில் இருக்கும்போது கிரிக்கெட் விளையாடிட்டு அழுக்கு டிரஸ்ஸோட யுவன் அங்க வந்தாப்ல. ‘என்னப்பா.. என்ன பண்றதா உத்தேசம்?”ன்னு சும்மா பேச்சுக்குடுத்தேன். வடிவேலு வசனம் வருமே! அதுமாதிரி நீ வேணும்ன்னா ‘ஒரு பேங்க் ஒண்ணு கட்டி விடுங்க.. நடத்தறோம்’னு.. சொல்வாப்ல. அதே மாதிரி, ஒரு படம் குடுங்க. இசையமைக்குறேன்னு சொன்னாப்ல.நான் வாய்ப்பு தரேன், பேச்சு மாறக்கூடாது. நீ சொன்னது நிஜம்தானேன்னு திரும்ப கேட்டேன். ஆமான்னு யுவன் சொல்லவும், அப்ப அங்க ராஜா சார் வரவும் சரியா இருந்துச்சு. ‘அய்யய்யோ அப்பாகிட்ட சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு உள்ள யுவன் ஓடிட்டார். ராஜாகிட்ட விஷயத்தைச் சொன்னதும் ‘அதான் பண்றேங்குறானே.. அவனையே வெச்சுப் பண்ணுங்க’ன்னார். நெசமா சொல்றாரானு டவுட்டோட பார்த்தேன். ’நெஜமாத்தான்யா சொல்றேன். யுவனை அறிமுகம் பண்ணது நீங்கங்கற பேர் உங்களுக்கு காலத்துக்கும் நிக்குற மாதிரி வருவான் பாருங்க’ன்னார். மறுநாளே, ஸ்டூடியோவுக்கு யுவன் வந்தாப்ல. மைக் உயரம்கூட இல்ல. ரெண்டு நாள்ல அத்தனை பாட்டுக்கும் இசையமைச்சு கொடுத்துப்ல! அவங்கப்பா மாதிரியே அத்தனை டெடிகேஷன். அன்னிக்கு அவங்கப்பா சொன்ன அந்த வார்த்தை இன்னிக்கு நிஜமாகிடுச்சு!” அப்படீன்னுதான் அம்மா கிரியேஷன்ஸ் சிவா சொன்னார்.

அடுத்த ஆண்டுகளில் வெளியான ‘வேலை’, ‘கல்யாண கலாட்டா’ படங்களின் பாடல்கள் விரும்பப்படவில்லை. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’ படத்தின் பாடல்கள் ஓரளவு பேசப்பட்டன. அடுத்து, ‘தீனா’ படத்தின் தீம் மியூசிக் ஸ்கோர் செய்ய, ‘துள்ளுவதோ இளமை’ படம், ‘யாருயா இவன்?” என யுவனை யுகத்துக்கான இசைத் தலைவனாக அறிமுகப்படுத்தியது.

பின்னாளாகிப் போன இன்றையக் காலக் கட்டத்தில் டிவியோ,ரேடியோவோ, மொபைல்போனோ இன்றும் பலரின் பிளே லிஸ்ட் பாடல்களில் யுவன் பாடல்கள் இல்லாமல் அன்றைய பொழுது கடந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு படத்தின் டைட்டில் போடுகின்ற வேளையில் யுவனின் பெயர் வரும் போது பெரும்பாலானோர் தங்களின் ஆரவாரத்தை வெளிப்படுத்துகின்றனர் என்றால் யுவன் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

யுவனின் இசை பயணத்தில் இயக்குனர்கள் ராம், அமீர்,சுசீந்திரன், விஷ்ணுவர்தன், வசந்த், வெங்கட் பிரபு,லிங்குசாமி ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள். காரணம் பெரும்பாலும் யுவனின் இசை இல்லாமல் இவர்களது படங்கள் இருக்காது. அதிலும் பின்னணி இசையில் தற்காலத்தில் தமிழ் திரையுலகத்தில் யுவனை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அவரது ஒவ்வொரு படத்திற்கும் தீம் மியூசிக்கில் இருந்து பின்னணி இசை வரை வெரைட்டியாக கொடுத்து படம் பார்ப்பவர்களை அப்படியே பிரம்மிக்க வைத்திருப்பார். யுவனால் ஒரே சமயத்தில் ‘பில்லா’ போன்ற படங்களுக்கு மேற்கத்திய ஸ்டைலிலும், பருத்திவீரன் போன்ற கிராமத்து கதைகளுக்கும் நாட்டார் வழக்காற்றியல் இசையையும் கொடுக்க முடியும்.

எப்படி யுவனின் இசை தனித்து தெரிகிறதோ அதேபோல யுவனின் குரலும் ஒரு முறை இந்த பாடலை கேட்டால் அனைவருக்கும் எளிதில் பரீட்சையமாகி விடும். கண்டிப்பாக யுவன் இசையமைக்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் ஒரு பாடி விடுவார். படத்தின் பாடல்கள் வெளியாகும் நேரத்தில் முதலில் ரசிகர்கள் தேடுவது அவரின் குரலில் வெளியாகும் பாடலை தான்.

ஆக.,அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான யுவன் சங்கர் ராஜா 150 படங்களை கடந்து, 25 ஆண்டுகளாக தன்னை ஒரு முன்னணி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் தக்க வைத்துக்கொண்டிருக்கும் யுவனுக்கு  சினிமா பிரஸ் கிளப் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்