இந்தியன்-2′ பட விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய ஆணையர் நியமனம்!

இந்தியன்-2′ பட விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய ஆணையர் ஒருவரை சென்னை ஐகோர்ட் நியமித்துள்ளது.

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘இந்தியன்-2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம் பொத்தினேனியின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். மேலும் ஹிந்தியில் ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்யப் போவதாகவும் அறிவித்தார்.

இதனால் ‘இந்தியன்-2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் வேறு படங்களை இயக்கப் போகக் கூடாது என்று கோரி லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் துவக்க நிலையிலேயே “இரு தரப்பினரும் கோர்ட்டுக்கு வெளியில் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் லைகா நிறுவனம் மற்றும் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியான ஆர்.பானுமதியை நியமித்து உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்.

மேலும், நீதிபதி ஆர்.பானுமதியின் அறிக்கைக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்..” என்று நீதிபதி என்.சதீஷ்குமார் அறிவித்திருக்கிறார்.