மணிரத்னம் படத்தோட ஹீரோயின் நான்! – நடிகை ஸ்வாதிஷ்டா கனவு!

0
218

இயக்குநர் மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அதில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த நடிகை ஸ்வாதிஷ்டா.

‘சவரக்கத்தி’ இவருக்கு முதல் படம். பொறியியல் பட்டதாரியான இவர், பத்திரிகையியலில் முதுகலையும் படித்துவிட்டு, தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியைத் துவக்கிய ஸ்வாதிஷ்டாவுக்கு சின்ன வயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் அதிகமாம்.

தன்னுடைய திரையுலகப் பயணம் பற்றி ஸ்வாதிஷ்டா பேசும்போது, “ஜர்னலிஸம் படிக்கும்போதே எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. நான்தான் நடிக்க தயங்கினேன். ஆனால், மிஷ்கின் சாரின் ‘சவரக்கத்தி’ வாய்ப்பு வந்தபோது ‘சரி.. நடித்துப் பார்க்கலாம்’ என முயற்சித்தேன்.

‘சவரக்கத்தி’ படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள பல நினைவுகள் இருக்கின்றன. என்னைப் போல ஒரு புதுமுகத்துக்கு மிகப் பெரும் இயக்குநர்களான மிஷ்கின் சார், ராம் சார் ஆகியோரை படப்பிடிப்பில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம்தான்.

ஆனால் எனக்கு ‘சவரக்கத்தியில்’ நானும் நடிக்கிறேன் என்ற மேலான, உயர்ந்த உணர்வுதான் இருந்தது. மிஷ்கின் சார் படப்பிடிப்பில் அனைவரையும் சமமாக நடத்துவார். அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு பொருந்தியவர். எதிர்காலத்தில் அவருடன் நிறைய படங்களில் நடிக்க ஆசை. ராம் சாருடன் எனக்கு பெரிய உரையாடல்கள் இல்லையென்றாலும் அவருடைய நடிப்பால் நான் கவரப்பட்டேன், குறிப்பாக அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் என்னை மிகவும் பாதித்தது.

இதைத் தொடர்ந்து இப்போது ஜீவாவுடன் ‘கீ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ‘கீ’ படம் பற்றி எதையும் வெளியில் சொல்லக் கூடாது என்று இயக்குநர் ரொம்பவும் கண்டிப்பாக சொல்லியிருக்கிறார். படத்தில் நான் ஏற்றிருப்பது ஒரு முக்கிய கதாபாத்திரம், என் பாத்திரம் கதைக்கு வலு சேர்க்கிறது என்பதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்.

ஜீவா சாருடன் நடித்தது மிகவும் ஜாலியான அனுபவம். என்னுடைய பெரும்பாலான காட்சிகள் ஜீவா சாருடன் சேர்ந்து நடிப்பதாகத்தான் அமைந்திருந்தது. மேலும் என்னிலும் மூத்த கலைஞர்களான சுஹாசினி, ராஜேந்திர பிரசாத், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோருடன் நடித்ததில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன.

அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர்கள் அழகு, திறமை இரண்டையும் சரிவிகிதத்தில் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய நடிப்பையும், ஆளுமையையும் நான் வியந்து பார்க்கிறேன்.

நான் பிரமித்து பார்க்கும், அவரின் பாதையில் பயணிக்க விரும்பும் ஒரு நடிகை ஷாலினி அஜித்குமார். அவரின் வேலையை பற்றி குறிப்பிட ஒரு இணையான சொல் கிளாசிக்தான். இளம் வயதிலேயே சிவாஜி சார், ரஜினி சார் ஆகியோரோடு இணைந்து நடித்தது, அவருடைய வசீகரம், திறமை எல்லாம் அவரின் தனிச் சிறப்பு.

மேலும், மணிரத்னம் சார் ‘அலைபாயுதே-2’ படத்தை எடுப்பார், அதில் என்னை நாயகியாக நடிக்க வைப்பார்” என்ற மெய் மறந்த வேடிக்கையான கனவும் எனக்கு வரும்…” என சந்தோஷமாக சொல்லும் ஸ்வாதிஷ்டா தற்போது ‘மதம்’ என்ற படத்திலும் நாயகியாக நடித்து முடித்துள்ளார்.