ஒய் நாட் ஸ்டுடியோஸ் (Y Not Studios) மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Reliance Entertainment) நிறுவனங்கள் இணைந்து வழங்க, எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ள படம் ‘ஏலே’. இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி, தங்களது வால்வாட்ச்சர் பிலிம்ஸ் (Wallwatcher Films) சார்பில் முதல் படைப்பாக இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடக்ஷன் பணியை மேற்கொண்டுள்ளனர். ‘பூவரசன் பீப்பி’, ‘சில்லுக் கருப்பட்டி’ ஆகிய படங்களை இயக்கிய ஹலிதா சமீம் இயக்கியிருக்கும் இப்படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கேபர் வாசுகி மற்றும் அருள்தாஸ் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரக்கனி, “பள்ளி மாணவியாக இயக்குநர் ஹலிதாவை 15 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். இன்று இவ்வளவு பெரிய இயக்குநராக வளர்ந்து நிற்கிறார். ’ஏலே’ தான் அவருடைய முதல் கதை. இந்த கதையை 8 வருடங்களுக்கு முன்பே கேட்டிருக்கிறேன். பிறகு 5 வருடங்களுக்கு முன்பு கேட்டேன். அதன் பிறகு, இந்த படத்தை புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தயாரிக்க முன் வந்திருப்பதாக ஹலிதா என்னிடம் கூறும் போதும், மீண்டும் கதையே கேட்டேன். அப்போதும் அதே சுவாரஸ்யத்தோடு கதை சொன்னார். ஹலிதாவின் உழைப்பு மற்றும் இயற்கை மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என்னை வியக்க வைத்தது. ஹலிதா இதை விடவும் பெரிய இடத்திற்கு செல்வார். அதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் அவர் விட்டுக்கொடுக்காமல், தனக்கு என்ன வேண்டுமோ அதை பிடிவாதமாக பெற்றுவிடுவார். இப்போது பார்க்கும் ஹலிதாவை படப்பிடிப்பில் பார்க்க முடியாது. நம்மூரில் சாமியாடுவார்களே, அப்படி ஒரு பெண்ணாக தான் இருப்பார். ஆனால், சிரித்த முகத்துடனே இருப்பார்.
எனது மகனாக நடித்திருக்கும் மணிகண்டனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு காலா படத்தில் உருவானது. படத்தில் நாங்கள், ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந் தாலும், படப்பிடிப்பில் ஒன்றாக தான் சுற்றிக்கொண்டிருப்போம். காலா படத்தில் மணிகண்டனை ஒரு நடிகராக பார்த்து வியந்து இருக்கிறேன். அதேபோல், விக்ரம் வேதா படத்தில் அவருடைய எழுத்தை பார்த்து வியந்திருக்கிறேன். புஷ்கர் மற்றும் காயத்ரி இரட்டை குழந்தைகள் போல இருப்பார்கள். சிறிய காட்சியை கூட ரொம்ப ஆர்வமாக பாராட்டி பேசுவார்கள். வியந்து பார்க்ககூடிய பெரிய இயக்குநர்களாக இருந்தாலும், சிறு சிறு விஷயங்களை கூட குறிப்பிட்ட நம்மை பாராட்டுவது ஆச்சரியமாக இருந்தது.
இந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களின் பணியையும் பாராட்டியாக வேண்டும். நாம் அசந்தாலும் அவர்கள் அசராமல் உழைத்தார்கள். அவர்களுடைய உழைப்புக்கு அவர்கள் இன்னும் பல வெற்றியை பெறுவார்கள். இந்த படத்தில் படப்பிடிப்பு நடந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நடித்திருக்கிறார்கள். 102 வயதுடைய ஒரு முதியவர் நடித்திருக்கிறார். அவரை பார்த்து அசந்து போய் விட்டேன். நாம் எதையாவது தவற விட்டால் கூட, அவர்கள் அதை சரியாக எடுத்துக் கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு எங்களோடு பழகி, சினிமா கலைஞர்களாகவே மாறிவிட்டார்கள். இந்த குழுவினருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த நிகழ்வுகளில் நாம் சந்திப்போம்.” என்றார்.
இயக்குநர் ஹலிதா சமீம் பேசுகையில், “’ஏலே’ படத்தை பொருத்தவரை நான் தனியாக பணியாற்றிய படம் அல்ல. ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தில் கூட நான் தனியாக பணியாற்றியிருக்கிறேன். ஆனால், ஏலே படத்தை பொருத்தவரை உதவி இயக்குநர்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் தான் என்னுடைய பலம். ஏலே படம் தான் என்னுடைய முதல் படம். ஆனால், சில காரணங்களால் என்னால் இந்த படத்தை முதல் படமாக செய்ய முடியவில்லை. சில்லுக் கருப்பட்டி படம் இயக்கிக் கொண்டிருந்த போது தான் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார்கள். எனக்கு அது மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. காரணம், சில்லுக் கருப்பட்டி படத்தை நான் பல தடுமாற்றங்களுடன் தான் பண்ணிட்டு இருந்தேன். அந்த சமயத்தில், இவ்வளவு பெரியவர்களின் ஆபர் எனக்கு கிடைக்கும் போது அது பெரிய விஷயமாக இருந்தது. அதனால் உடனே அதை ஏற்றுக் கொண்டேன். சில்லுக் கருப்பட்டி படத்தின் பணியின் போதே ஏலே தொடங்கி விட்டது. இருந்தாலும், சில்லுக் கருப்பட்டி படத்தின் காப்பியை ரெடி பண்ணிய நான்காவது நாளுக்கு பிறகு தான் நான் ஏலே படப்பிடிப்புக்கு சென்றேன். அதற்கு எனக்கு ஒத்துழைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் சார் இந்த படத்திற்கு பணியாற்றினால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதனால், அவருடைய படங்களை பார்த்துவிட்டு, அவர் தான் பணியாற்ற வேண்டும், என்று முடிவு செய்தேன். அவர் எனக்கு பெரிய பலமாக இருந்தார். அவருக்கு நன்றி. இசையமைப்பாளராக பணியாற்ற கேபேரை தேவு செய்த போது, அவரிடம் திரைக்கதையை கொடுத்தேன். அதை படித்துவிட்டு அவர் மிகப்பெரிய ஊக்கம் அளித்தார். அவரை நாங்கள் இசையமைப்பாளராக ஏன் தேர்வு செய்தோம், என்பதை அவருடைய ஆல்பத்தை பார்த்தால் புரிந்துக் கொள்வீர்கள். அதேபோ, அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழலில், அருள்தேவ் சார் பணியாற்றி கொடுத்தார். அவருக்கும் நன்றி. நிறைய பேர் எனக்கு உதவியாக இருந்தார்கள் அனைவருக்கும் நன்றி. ஆரம்பத்தில் இருந்து எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த பத்திரிகையாளர்களுக்கும் நன்றி.” என்றார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஏலே’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது வெளியான பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘ஏலே’ திரைப்படம் வெளியாகிறது.