“தி கிரேட் இந்தியன் கிச்சன்” – விமர்சனம்!

0
536

மலையாளத்தில் வெளிவந்த இப்படத்தை பற்றிய நண்பரின் விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டியது. இந்திய பெரும்பான்மைப் பெண்களின் நிலையை எதார்த்தமாய் விளக்கியுள்ளது இப்படம். சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்காத, சாப்பிட்ட எச்சிலை மேசை மீது போடும் ஆண்கள் உள்ளவீட்டில் திருமணம் முடித்து செல்கிறாள் பெண்ணொருத்தி…!

மூன்று நேரமும் சமைப்பதும், பாத்திரங்களை கழுவுவதுமாகவே செல்கிறது அவள் வாழ்க்கை. அவ்வாழ்க்கையை விடுத்து அவள் சுயத்திற்கானத் தேடலின் முடிவை நோக்கி நகர்கிறது கதை..

இப்படத்தில் வரும் அவளது வாழ்க்கை மட்டுமல்ல, நிறையப் பெண்களின், வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை கூட இப்படித்தான் நகர்கிறது. ஒருநாளில், சமைய லுக்கென ஒருபெண் குறைந்தபட்சம் 5 மணி நேரம் செலவு செய்தால் கூட தன் வாழ் நாளில் மூன்றில் ஒரு பகுதியை சமையலறையில் கழிக்கவேண்டியதாய் இருக்கிறது. பெண்களின் ரத்தத்தை வியர்வையாய் உறிஞ்சுகிறது “தி கிரேட் இந்தியன் கிச்சன்”…

சமைப்பது பெண்களின் வேலையா? ஆண்களின் வேலையா? என்றால் அது இருவரின் வேலையும் தான். பசி என்பது இருவருக்கும் பொதுவானது தானே?…மனிதனைத் தவிரமற்ற உயிரினங்கள் தனக்குத் தேவையான உணவை தானே தான் பெற்றுக் கொள்கிறது. ஆனால், மனித இனத்தில் மட்டும் அதை பெண்ணுக்கு உண்டான வேலையாய் மாற்றி இருப்பதென்பது அவளை அடிமைப்படுத்துவதற்கு தானேயன்றி வேறெதற்காகவும் இல்லை…!

பெண்களை வீட்டுக்குள் பூட்டிவைக்கச் சமையலறையென்பது ஒரு ஆயுதமாய் தான் செயல்பட்டிருக்கிறது. முழு நேரமும் அவள் அங்கு வேலை செய்தால் எவ்வாறு தான் வளரஉழைப்பது? இச்சமூகம் வளர உழைப்பது?.. தெரிந்தப் பெண் ஒருத்தி ஐடி நிறுவனத்தில் மாதம் 80,000 ரூபாய் ஊதியம் பெறுகிறாள். அவளுக்கு வடை போடத் தெரியவில்லை என்பதை ஒரு குற்றமாய் அவளது மாமியார் சொல்லும் போது சிரிப்பு தான் வந்தது. வடை போடத் தெரியவில்லையென்றால் அவளுக்கு என்ன தெரியுமோ அதை செய்து சாப்பிடுங்கள் என்றால், “எனக்கு எல்லா பலகாரமும் செய்ய தெரியும் ஆனால் அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை” என்றார். அவள் மாதம் 80,000 ரூபாய் ஊதியம் பெறுகிறாள் நீங்கள் அதை வாங்கவில்லையே என்றால் அவரிடம் பதில் ஏதும் இல்லை…

ஆண்களின் மூளையால் செயல்படும் இவரைப் போன்றப் பெண்களும் பெண்களின் இழிநிலைக்கு காரணம் தான். பெண்ணாய்ப் பிறந்தால் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும், கோலம் போடத் தெரிந்திருக்கவேண்டும், பூக்கட்டத் தெரிந்திருக்கவேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளை பெண்கள்தான் பெண்கள் மீது வீசிக் கொண்டே இருக்கின்றனர். திருமணத்திற்குப் பெண் தேடும் போதே, அவள் வீட்டு வேலைகளுக்கு சரியானவளா? என்பதை கொண்டே பெண்ணை முடிவு செய்கிறார்கள்…!

பெண்கள் வீட்டு வேலைகளில் தன் இணையரிடமிருந்து உதவிகளைப் பெறும் பொழுது அங்கே முதல் ஆளாய் எதிர் நிற்பது அவன் அம்மாதான். “என் மகனை நான் எந்த வேலையும் சொன்னது கிடையாது. இவள் அவனை வேலை செய்யச் சொல்கிறாள்” என்று ஒரு போராட்டமே நடக்கும்…!

என் தாத்தா என் பாட்டிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து நான் பார்த்ததில்லை. என் அப்பா என் அம்மாவிற்கு ஓரளவு உதவிகளைச் செய்வார். ஆனால் என் கணவர் அனைத்து வீட்டு வேலைகளிலும் உதவி புரிவார். யாரேனும் கேட்டால் கூட “இருவரும் வேலைக்குச் செல்கிறோம் இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டால் தானே இல்லறம் சிறக்கும்”என்பார். எங்கள் குழந்தைக்கும் இதைத்தான் பழக்குகிறோம் …

இப்புரிதல் எல்லா ஆண்களுக்கும் ஒரு சிலப் பெண்களுக்கும் இருந்துவிட்டால் சமையலறை சிறையிலிருந்து பெண்கள் விடுதலை பெறலாம்…

சமூகம் என்பது
குடும்பங்களின் கட்டமைப்பு
தானேயன்றி
தனி மனிதனதன்று…
குடும்பம் என்பது
நமக்கானது…
நாம் வாழ்வதற்கானது…

அதில் பெண் என்பவள் மீது மட்டுமே அனைத்து பாரத்தையும் சுமத்தாமல், வேலைகளை பகிர்ந்து கொண்டு அவளை சிறிதளவேனும் ஆசுவாசப்படுத்தலாம்…
பெண் என்பவள்
மாபெரும் சக்தி …
அவளது திறமைகளை
சமையலறை தீயிலிட்டு
பொசுக்காமல் விளக்கேற்றுங்கள் …
வெளிச்சம் கிடைக்கும்…
#வீடும்_நாடும்_செழிக்கும் …!

வீரத் தமிழச்சி
ரா. துர்கேஷ்வரி.