வீரன் படத்துக்குப் பிறகு, கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்துள்ள PT சார் இப்போது வெளியாகியுள்ளது.
வழக்கமான ஹிப் ஹாப் ஆதி படங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு கருத்து சொல்லியிருக்கிறார்கள். படமாக அனைவரையும் கவர்ந்ததா ?
ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவனத்தில் பிடி வாத்தியாராக வேலை பார்க்கும் ஹிப் ஹாப் ஆதியை அவரது அம்மா நேரம் சரியில்லாத காரணத்தால் பொத்தி பொத்தி வளர்க்கிறார். தன் பள்ளி நிறுவனத்தில் மேஜிக் சுவர் எனும் சுவாரஸ்யமான விஷயத்தை மாணவர்களுக்கு மத்தியில் உருவாக்கி பாராட்டுகளைப் பெறுகிறார். ஆனால் இதே சுவரால், எதிர்வீட்டுப் பெண்ணான அனிகா சுரேந்திரன் மூலம் எதிர்பாராத பிரச்னை, அதுவும் அவர் வேலை பார்க்கும் கல்வி நிறுவனத்துக்குள்ளேயே ஏற்படுகிறது. விளையாட்டுத் தனமாய் இருந்த ஹிப் ஹாப் ஆதி சமூகப் பிரச்னையாய் மாறும் இந்த விஷயத்தை எப்படி டீல் செய்கிறார்? அவர் எதிர்கொள்ளும் போராட்டம், அனிகாவுக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
சமூகத்தில் பெண்களுக்கெதிராக நடைபெற்று வரும் ஒரு மிக முக்கியமான பிரச்சனையை கதைகருவாக தேர்ந்தெடுத்து அதை விரசமில்லாமல் பொறுப்புடன் கையாண்டதற்கு படக்குழுவை பாராட்ட வேண்டும்.
ஹிப் ஹாப் ஆதி முந்தைய படங்களிலிருந்து கொஞ்சம் முன்னேறியிருக்கிறார். நடிப்பில் நல்ல வளர்ச்சி இண்டர்வெல் பிளாக் அவருக்கு சரியாக ஒர்கவுட் ஆகியுள்ளது. ஹிப்ஹாப் ஆதியின் இசை கேட்கும் ரகம். படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை பாராட்டுக்குறியது.
தியாகராஜன் வழக்கமான வில்லனாக கதையில் வந்து செல்கிறார். பிரபு, பாக்கியராஜ், தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா என நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், இளவரசு மட்டுமே கவனம் ஈர்க்கிறார். பாண்டியராஜன், முனீஷ்காந்த் என காமெடிக்காக நடிகர்கள் மட்டுமே படத்தில் இருக்கிறார்கள்.
ஹீரோயினைத் தாண்டி, அனிகா தன் கதாப்பாத்திரம் உணர்ந்து நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்.
முதல் பாதியில் கமர்ஷியல் படத்துக்குத் தேவையான வழக்கமான மசாலாக்களை அரைத்து முடித்து சுமார் அரை மணி நேரம் கழித்து தான் கதையை ஆரம்பிக்கிறார்கள், ஆனால் இரண்டாம் பாதி உண்மையிலேயே கவனம் ஈர்க்கிறது.
கோர்ட்டில் நடக்கும் காட்சிகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் இருந்தாலும் ஒரு நிறைவான படம் பார்த்த படத்தை தந்ததற்காக பிடி சாரை கண்டிப்பாக பாராட்டலாம்.