மாஸ்டர் – விமர்சனம்!

மூன்று நாள்களில் “மாஸ்டர்” உலகெங்கிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக செய்தி. கொரோனா பொதுமுடக்கத்தால் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரையரங்குகளில் உச்ச வரிசை நாயகரான விஜய் படம் வெளியாகியிருக்கிறது. பொதுமுடக்க காலத்தின் இழப்புகளாலும் தொடரும் மனஅழுத்தங்களினாலும் “மாஸ்டர்” வந்தால் திரையரங்கில் பார்த்துவிட வேண்டும் என்ற உளவியல்ரீதியான முன்முடிவில் இருந்த மக்கள் படையெடுத்திருக்கிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்பதைவிட, படத்தை திரையரங்கில் பார்க்கிறோம் என்பதே இன்றைய நிலையில் “பெரிய என்டர்டெயின்மென்ட்” ஆக மாறியிருக்கிறது. கூடவே பொங்கல் விடுமுறை, வணிகரீதியாக போட்டிப் படங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதில் வியப்பேதுமில்லை. திரையரங்குகள் வாயிலாக மீண்டும் தமிழ்த் திரைப்பட வர்த்தகம் பொதுமுடக்க காலத்துக்கு முந்தைய நிலையை எட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அது நிறைவேறியிருக்கிறதா? முன் கள திரை வர்த்தகர்களுக்குத்தான் தெரியும்.

சரி. படம் எப்படி இருக்கிறது?

இது விஜய் படமா அல்லது விஜய் சேதுபதி படமா என்ற பார்வையாளர்களின் சந்தேகம் விலகி, விஜய் படம்தான் என்பது ஊர்ஜிதமாக கிட்டத்தட்ட அரைமணி நேரம் பிடிக்கிறது. கல்லூரியில் மாணவர்களின் நலன் காக்க உளவியல் வகுப்புகள் எடுக்கும் பேராசிரியரான விஜய் ஏன் அப்படியொரு மது அடிமையாக மாறினார் என்ற கேள்வியை எழுப்பி, கடைசிவரை அதற்கு விடையளிக்காமல், அது போன்று இன்னபிற கேள்வி களையும் சுமந்தவாறே பார்வையாளர்களை அரங்கத்திலிருந்து வெளியேற்று கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

விஜய் சேதுபதி “பயங்கர வில்லனாக” வருகிறார். அவர் வரும் காட்சிகளை பார்வை யாளர்கள் காமெடி மனநிலையுடன் உள்வாங்குகிறார்கள். விஜய் சேதுபதியின் முகத்தில் அந்தப் பாத்திரத்தைப் பிரதிபலிப்பதற்கான அதாவது நடிப்புக்கான அசைவு வறட்சியாக இருக்கிறது. ஆரம்பக் கால, பின்னால் வந்த ஓரிரு படங்கள் போன்று சற்றேனும் நடிக்க முயற்சித்தால்தான் தொடர்ந்து அவரது படங்களை பார்க்க இயலும். வெறும் நடமாட்டமும் அலைவரிசை வேறுபாடின்றி வசனங்களைப் பேசுவதுமே “இயல்பான” நடிப்பு என்ற மாய வலைக்குள் சேதுபதி சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. இயக்குநரும் அவரைக் கடந்து முன்னடி எடுக்கவில்லை.

படத்தின் ஒரே ஆறுதல் விஜய், மேலும் விஜய் மட்டுமே. வழக்கம்போல, படத்துக்குத் தேவையானதை அவருக்கே உரித்தான கலவையோடு சரியாக வழங்கியிருக்கிறார். இயக்குநரின் தனித்தன்மை விஜய்யின் சிகை அலங்காரத்தை மாற்றியது அன்றி வேறு பெரிதாகத் தெரியவில்லை.

பாடல்கள் ஏற்கெனவே பிரபலமானவை. சிறார் சீர்திருத்தப் பள்ளி மாணவர்களிடையே “Pay attention listen to me” & “Anger always misery baby”என்பது உள்பட பல ஆங்கில வரிகள் கலந்த பாடலை விஜய் பாடுகிறார். பாடட்டும். இதிலெல்லாம் “லாஜிக்” பார்க்கலாமா என்ற கேள்வி நமக்குள் ஏற்கெனவே சொருகப்பட்டிருக்கிறது. மேடையில் சிறப்பு விருந்தினர் பேசிக்கொண்டிருக்கும்போது, பின்னால் ஒரு கேரக்டர் கைபேசியில் ஏதாவது பேசிக் கொண்டிருப்பது போல, அனிருத்தின் பின்னணி இசை. படத்தின் முகத்தை வடிவமைப்பதில் அவராலான பங்களிப்பு. பொதுவாக விஜய் படங்களில் நாயகியுடனான “காதல் ரசாயன” காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அதுவும் “ஷேர் ஆட்டோக்களில்” அருகருகே பயணித்தாலும் அறிமுக ந்மில்லாதவர்கள் என்பது போல இருக்கிறது.

இறுதி சண்டைக் காட்சியில் படுபயங்கரமாக மோதும் விஜய்யும் சேதுபதியும் கடும் காயங்களுக்குப் பிறகு, மூச்சு வாங்கியவாறே நெருங்கி அமர்ந்தவாறு “பேச்சு வார்த்தையும்” நடத்துகிறார்கள். “என்னைக் கொன்றுவிடாதே… நீ சொல்வது போல, சிறார்களை தீய செயல்களுக்கு இனி பயன்படுத்த மாட்டேன்” என்ற கோரிக்கையை வைத்துவிட்டு, “நான் அரசியலுக்கு போய்விடுகிறேன்” என்று முடிக்கிறார் சேதுபதி.

தமிழ் சினிமா இயக்குநர்களின் அரசியல் புரிதல் நெடுங்காலமாக அதே இடத்திலேயே கிடக்கிறது, அசைக்க முடியாத பாறாங்கல்லைப் போல. பார்வையாளன் சுண்டுவிரலை காதுக்குள் விட்டுக் குலுக்கியவாறே எழுந்துவிடுகிறான்.

பிறகு, படம் முடிகிறது.

ஏழுமலை சுகதேவ்