இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படம் தீபாவளிக்கு வெளி யாகிறது. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடமேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜ பார்ட்காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம் பெறுகின்றன. அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார்.
இந்த பிஸ்கோத்து படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும் போது, ” படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப் படுத்தி இருக்கிறோம்.வடிவேலுவுக்கு எப்படி ‘இம்சை அரசன் ‘அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு ‘பிஸ்கோத்’ படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும் இருக்கும்.இப்படத்தில் இந்த ராஜா காலக்கட்ட காட்சிகள் 30 நிமிடங்கள் வரும்.
இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார். இதற் கான உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு உடை அலங்கார நிபுணர் பிரியா உடைகளை வடிவமைத்துக் கொடுத்தார். இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்தார்கள் அவ்வளவு பேருக்கும் உடைகள் தயாரிக்கப்பட்டன. காட்சிகள் பெயிண்டிங்கில் போல் வந்துள்ளன.அந்தக்கால பெயிண்டிங் போன்றவற்றை வைத்து ஓவியங்கள் போல் ஒளி அமைப்பு செய்து ‘ 96’ படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் ஒளிப் பதிவு செய்து பிரமாதப்படுத்தி யிருக்கிறார்.
படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில் வரும் காட்சிகளுக்குத்தான் இப்படி ராஜபார்ட் வேடமும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம்பெறும் காட்சிகள் வரும். மூன்றாவது பகுதியாக சமகாலத்து காட்சிகள் அதாவது இக்கால 2020க்கான காட்சிகள் அமைந்திருக்கும். இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால் புரியும் .மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும்.
சந்தானம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த படமாக ‘பிஸ்கோத்’ இருக்கும். கொரோனா முடக்கத்துக்குப் பிறகு அனைவருக்கும் ஒரு மன அழுத்தம் இருக்கிறது.அந்த அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற வைக்கும் வகையில் பெரிய மன நிம்மதி அளிக்கும் படியான கலகலப்பான காமெடி படமாக ‘பிஸ்கோத்’ இருக்கும். இந்த படத்திற்காக சந்தானம் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல.
இப்படத்தில் இடம்பெறும் களரிச் சண்டைக் காட்சிகளுக்காக ஸ்டண்ட் ஹரிதினேஷி டம் களரி கற்றுக் கொண்டார். அதன் பிறகுதான் நடித்தார்.அந்தக் காலத்தில் சௌகார் ஜானகி ‘தில்லு முல்லு’ படத்தில் நடித்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர் இந்தப் படத்தில் சந்தானத்தின் பாட்டியாக வருகிறார் .நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்.
சந்தானத்துடன் ஏற்கெனவே ‘A1’ படத்தில் நாயகியாக நடித்த தாரா அலிஷா பெர்ரி ஒரு நாயகியாகவும் மிஸ் கர்நாடகா விருதுபெற்ற ஸ்வாதி முப்பாலா இன்னொரு நாயகி யாகவும் நடித்துள்ளார்கள். அதுமட்டுமல்ல ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், சிவ சங்கர்,லொள்ளு சபா மனோகர் ,ஆகியோர் படம் முழுக்க வந்து கலகலப்பூட்டுவார் கள்.மசாலா பிக்ஸ் சார்பில், MKRP புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து நான் இந்த படத்தைத் தயாரித்து இயக்கி இருக்கிறேன்.
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் இந்தப் படத்தை வெளியிடுகிறார் .”என்கிறார் இயக்குநர் கண்ணன். இப்படத்திற்கு எடிட்டிங் ஆர் .கே. செல்வா, இசை ரதன்.இவர் தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி ‘படம் மூலம் புகழ் பெற்றவர்.பாடல்கள் கிருதியா,ரதன். நடனம் சாண்டி, சதீஷ்.
மக்கள் தொடர்பு ஜான்சன்.
இந்த தீபாவளிக்குப் பலகாரங்களுடன் இந்த ‘பிஸ்கோத்’தும் சேர்ந்துள்ளது