லைகா-வை நம்பி தமிழில் கால் பதிக்கும் மகேஷ் பாபு தேறுவாரா?

0
343

ஸ்பைடர் பூச்சி வலை பின்னும் போது பலமுறை அறுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சிகள் செய்து கட்டி முடிக்கும்… இது ஸ்பைடர் பூச்சியின் விடா முயற்சி… ஆனால் அந்த வலைப் பின்னல் எதற்காக என்றால் தனக்கான இரையை வேட்டையாடும் கண்ணி தான் அது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வலையில் சிக்கும் பூச்சிகளின் ரத்தம் உறிஞ்சும் கொடூரபூச்சிதான் சிலந்தி என்கிற ஸ்பைடர்…சரி இந்த கதைக்கும் இந்த ஸ்பைடர் படத்துக்கும் என்ன தொடர்பு…. அதை பார்ப்பதற்கு முன்…!

பிரமாண்டமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பிரபல கேமராமேன் சந்தோஷ் சிவன் இந்த கூட்டணியை வைத்து பிரமாண்ட தயாரிப்பில் உருவான படம் ஸ்பைடர். சுமார் 145 கோடி செலவாம். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ். எல்லாம் சரி இந்த பிரமாண்டம் தமிழில் எடுபடுமா…. ? இந்த  மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர் ஸ்டார்தான்… ஆனால் தற்போது தமிழில் அறிமுகம் ஆகும் படம். இந்த ஹீரோவின் முந்தைய தெலுங்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமான பிஸ்னஸ்மேன் தமிழில் டப் செய்யப்பட்டு வசூலித்தது லட்சங்கள் மட்டுமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனாலும் நேரடி படமாக ஸ்பைடர் சினிமாவை தமிழில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது. ஏற்கனவே லைகா இதுவரை எடுத்து ரிலீஸ் செய்த எல்லா படங்களும் போட்ட முதலை எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்படி இருக்கும் போது தெரிந்தே இந்த நஷ்ட முயற்சியில் லைகா ஏன் ஈடுபடுகிறது…

ஏற்கனவே தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எந்திரன் 2 எடுத்து வருகிறார்கள். அதுவும் நூறு கோடியை தாண்டும் பட்ஜெட்.. தமிழ் சினிமா வர்தகத்தில் நூறு கோடியை தாண்டும் படங்கள் மிக குறைவு. அதிலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து நூறு கோடிக்கு மேல் வசூலித்த படம் துப்பாக்கி. அதன் பிறகு அவர் பெரிதும் நம்பிய கத்தி கவிழ்த்து விட்டது. இப்போது ஸ்பைடர் …!இந்த இயக்குனர் முருகதாஸ் எடுக்கும் படங்களில் எல்லாம் கதை திருட்டு புகார் எழுவது வழக்கம். ஸ்பைடர் எப்படியோ…

சரி விஷயத்திற்கு வருவோம்… !

ஸ்பைடர் தமிழகத்தில் 550 தியேட்டரில் வெளியிட திட்டம் என்கிறார் லைகா ராஜூ மகாலிங்கம்.  தமிழகத்தில் மொத்த தியேட்டரின் எண்ணிக்கை ஆயிரத்துக்குள்தான். ஸ்பைடர் வரும் போது ஹர ஹர மகாதேவி , கருப்பன் படங்களும் வருகிறது. ஹர் ஹர மகாதேவி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட தியேட்டர்கள் இருக்கிறது அதில் தயாரிப்புக்குத்தான் முதலிடம் தருவார்கள். அடுத்து விஜய் சேதுபதியின் கருப்பன். விநியோகஸ்தர்கள் நஷ்டமடை யாத ஹீரோ ஆக வளர்ந்து வரும் விஜய சேதுபதி படம் குறிப்பிட்ட தியேட்டர்களை பிடிக்கும். தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நடிப்பில் ஓடிக்கொண்டிருக்கும் துப்பறிவாளன் பிடித்துக் கொண்ட தியேட்டர்கள் அதோடு கடந்த வெள்ளி 11 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளது இப்படி படங்கள் அதிகம் இருக்கும் போது ராஜூ மகாலிங்கம் சொல்வது போல் தியேட்டர்கள் கிடைக்குமா?

அப்படியே  கிடைத்த தியேட்டரில் ஸ்பைடர் ஓடி வசூல் வந்து விடுமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஆக  வாங்கிய விலை வசூல் ஆக வாய்ப்பு இல்லை என தெரிந்தும் லைகா நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கியதற்கு காரணம்.  உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு தனி மார்க்கெட் உண்டு. அதே நேரம் லைகா நிறுவனத்துக்கு உலக அளவில் மோசமான பெயர் தான் இருக்கிறது. பல நாடுகளில் மோசடி வழக்குகள் , பங்குதாரர்கள் சட்ட சிக்கல் என பல சிக்கல்களோடு தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த ராஜ பக்‌ஷேவின் பினாமி நிறுவனம் என்கிற குற்றச்சாட்டும் லைகா நிறுவனம் மீது உண்டு. இந்த அவப்பெயர்களை துடைக்கும் விதமாகத்தான் நஷ்டம் என தெரிந்தும் தமிழ் சினிமாவில் கோடிகளை கொட்டி வருகிறது லைகா.

இது நஷ்ட கணக்கா அல்லது கருப்பை வெள்ளை ஆக்கும் முயற்சியா என்றும் ஒரு கேள்வியும் மக்கள் மனசில் எழாமல் இல்லை…இப்பேர் பட்ட லைகாவின் பப்ளிசிட்டிக்கும் , பிரமாண்டமான தோற்றத்துக்கும் நம்பி கால் பதிக்கும் மகேஷ் பாபு எதிர் பார்க்கும் வெற்றியை லைகாவின் நிறுவனம் பெற்றுத் தருமா என்றால் சந்தேகமே.. ஸ்பைடர் பூச்சியின் வலைப் பின்னலில் சிக்கி ரசிகர்களின் உழைப்பை உறிஞ்சப் போவது நிச்சயம்..!

– கோடங்கி