ஸ்வாதி கொலை வழக்கு இயக்குநர் கிளப்பப் போகும் பரபரப்பு என்னவாக இருக்கும்?

தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொலைவழக்குகளில் ஸ்வாதி கொலை வழக்கு-கும் இடமுண்டு. அந்த வழக்கை மையமாகக் கொண்டு தயாரான ’நுங்கம்பாக்கம்’என்ற பெயரில் மாறி இருக்கும் படம் வரும் 24ம் தேதி அன்று ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

தமிழக தலைநகர் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்பட பல ரயில் நிலையங்களில் இன்று சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம் ஸ்வாதி கொலை வழக்குதான். ஸ்வாதி கொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால்தான் இக்கொலையில் பல மர்மங்கள் நீடிக்கிறது. இந்த கொலை வழக்கிற்கு பின்னர்தான் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும் அந்த சுவாதியின் கொலையில் பல மர்மங்கள் புதைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அப்பெண்ணை கொன்ற ராம்குமார் தற்கொலையிலும் பல மர்மங்கள் புதைந்திருப்பதாக புகார்கள் இருக்கின்றன. ராம்குமாரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்து போராடி வந்தார். ராம்குமாரை கடைசிவரைக்கும் உண்மையை பேச விடாமல் கொன்றுவிட்டார்கள் என்றே அவரது தந்தையும் அவருக்காக வாதாடி வந்த வழக்கறிஞரும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ராம்குமாரின் தற்கொலை தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உண்மை என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறது. மொத்தத்தில் ஸ்வாதியின் கொலையிலும் ராம்குமாரின் தற்கொலையிலும் மர்மங்கள் இன்னமும் விலகாத நிலையில் இருக்கின்றன.

இன்று வரை அதிர்ச்சியும் மர்மங்களும் சுவாதி கொலை – ராம்குமாரின் தற்கொலை வழக்கினை ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரிலேயே சினிமாவாக எடுத்தார் எஸ்.டி.ரமேஷ் செல்வன்.விஜயகாந்த் நடித்த உளவுத்துறை, அருண்விஜய் நடித்த ஜனனம், வஜ்ரம் படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் 2017ல் படம் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படம் குறித்து ரமேஷ் செல்வன், ‘’மக்களுக்கு தெரிவிக்கப்படாத பல சம்பவங்கள் இதில் இடம் பெற்றிருக்கிறது’’என்று கூறினார்.

இதன்பின்னர் இப்படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், சுவாதி திரைப்படத்தில் உண்மைக்கு புறம்பான விசயங்கள் உள்ளது என்று கூறி, அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவாதியின் தந்தை கோபால கிருஷ்ணன் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக அப்படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடரப் பட்டது. மேலும் படத்தை வெளியிடக்கூடாது என்று மிரட்டல்கள் வருவதாக ரமேஷ் செல்வன் சொன்னார்.

தொடர்ந்து சுவாதி கொலை வழக்கு என்ற பெயருக்கு எதிர்ப்புகள் வலுத்ததால் படத்தின் டைட்டிலை நுங்கம்பாக்கம் என்று மாற்றினார் இயக்குநர். அப்படியும் இப்படத்தினை வெளியிட தடை இருந்து வந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டில் இப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “சுவாதி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த திரைப்படம், சுவாதி கொலை வழக்கு என்கிற பெயரில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய சூழலில் நுங்கம்பாக்கம் என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளிவர அனைத்து அனுமதிகளையும், உரிமத்தையும் பெற்றிருக்கிறது.இதுவரை கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு, வெளிவந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டு இந்த படத்தின் கதையை பின்னியிருக்கிறார் என்றாலும் கூட, மாற்றுக் கருத்துக்களும் வலுவாக இதிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக ராம்குமார் இந்த கொலையை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்று விடுதலை சிறுத்தைகளின் சார்பில் கருத்துக்களை வைத்தோம். அந்த கொலையை கண்டித்தோம். சுவாதியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினோம். அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறினோம். அப்போது தான் உண்மை வெளிவரும் என்று கூறினோம். இந்த வாதங்கள் அனைத்தும் இந்தத் திரைப்படத்தில் பதிவாகி இருக்கிறது. வெளியிலே பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற கருத்துக்கள், அல்லது ராம்குமாருக்கு ஆதரவாக பேசப்படுகிற கருத்துக்கள் அனைத்தும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ராம்குமாருக்கு எதிரான கருத்து, ராம்குமாருக்கு ஆதரவான கருத்து என இரண்டு தரப்பு கருத்துகளையும் தன்னுடைய திரைப்படத்தில் ஒரு விவாதமாக, நீண்ட உரையாடலாக பதிவு செய்திருக்கிறார். அதனால், எந்த சிக்கலும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு இருக்காது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

படம் நிறைவடைகிற போது ராம்குமார் கொலையாளி என்று நிரூபிக்க கூடிய வகையில் படத்தின் போக்கு அமைகிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த கருத்திலே நான் மாறுபடுகிறேன். சுவாதி கொலையின் பின்னணியில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக நான் கருதுகிறேன். அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அந்த வழக்கை ஒன்று மில்லாமல் செய்து விட்டார்கள். ராம்குமாருடைய சாவும் சந்தேகத்திற்கு உரியது தான்’’என்று சொல்லி ‘நுங்கம்பாக்கம்’ படம் குறித்து பரபரப்பூட்டினார்.

அதன்பின்னரும் பல்வேறு தடைகளால் இப்படம் ரிலீஸ் செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதன் பின்னர் பாதிக்கப்பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் செயலாளர் பாலாஜிக்கும் படத்தைக் காண்பித்து சம்மதம் பெறப்பட்டது. ராம்குமார் தந்தை தொடர்ந்த வழக்கு மற்றும் இதர வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தடையை நீக்கியது. இறுதியாக இப்படம் அக்டோபரில் பிரபல ஓடிடி நிறுவனத்தின் மூலம் வெளியிடப் படுகிறது என்று ரமேஷ் செல்வன் கடந்த மாதத்தில் அறிவித்திருந்தார்.

ஒரு வழியாக மூன்று வருட போராட்டங்களுக்கு பின்னர் சுவாதி கொலை – ராம்குமார் தற்கொலை வழக்கை மையப்படுத்திய ‘நுங்கம்பாக்கம்’சினிமா, வரும் 24ம் தேதி அன்று ஓடிடியில் வெளியாகிறது என்று இயக்குநர் ரமேஷ் செல்வன் அறிவித்திருந்த நிலையில் இன்று மேலும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களைச் சொல்ல பிரஸ் மீட் ஒன்று அரெஞ்ச் செய்திருக்கிறார் ரமேஷ் செல்வன்..

கோலிவுட்டில் தியேட்டர் திறக்காத நிலையில் அடுத்தடுத்து சர்ச்சைக்களுக்கு பஞ்சமில்லாமல் ஊடகங்கள் நடை போட்டு வருகின்றன