காஜல் அகர்வாலுக்கு திருமணம் !

பிரபல தென்னிந்திய நடிகையான காஜல் அகர்வாலுக்கு வரும் அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவிருக்கிறது.

நடிகை காஜல் அகர்வால் 2008-ம் ஆண்டு ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார். அதன் பின்பு ‘பழனி’, ‘மோதி விளையாடு’, ‘நான் மகான் அல்ல’, ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘ஜில்லா’, ‘மாரி’, ‘பாயும் புலி’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘கவலை வேண்டாம்’, ‘விவேகம்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

காதல் அகர்வால் தற்போது ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா புரொடெக்சன்ஸ் தயாரித்து வரும் ‘இந்தியன்-2’ படத்திலும் நடித்து வருகிறார்.  மேலும் பல தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் இருக்கும் அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் நாயகியாக நடித்த பெருமை கொண்டவர் காஜல் அகர்வால்.

தற்போது 35 வயதாகும் காஜலுக்கு திருமணம் என்று சமீப காலமாக பலவித செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. இந்த நிலையில் தனது திருமணம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல தனது திருமணம் வரும் அக்டோபர் 30-ம் தேதியன்று மும்பையில் ஒரு எளிமையான நிகழ்ச்சியில் நடைபெறவிருப்பதாக காஜல் அகர்வாலே தெரிவித்துள்ளார்.

காஜல் திருமணம் செய்யப் போகும் மணமகனின் பெயர் கவுதம் கிச்லு. தொழிலதிபர்.

இது குறித்து காஜல் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள செய்தியில், ”வரும் 30 ஆம் தேதி குடும்பத்தினர் மத்தியில் கவுதம் கிச்லுவுடன் மும்பையில் எனக்குத் திருமணம் நடக்கவுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பெருந்தொற்றுக் காலம் எங்கள் வாழ்க்கையில் ஒரு மெல்லிய ஒளியைப் பாய்ச்சியது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்கவுள்ளோம். எங்களுக்காக நீங்கள் அனைவரும் உளப்பூர்வமாக மகிழ்வீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

இத்தனை ஆண்டுகளும் நீங்கள் என் மீது பொழிந்த அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கும் நாங்கள் உங்களுடைய ஆசிர்வாதங்களை வேண்டுகிறோம். இப்போது புதிய தேவையுடனும் அர்த்தத்துடனும் நான் தொடர்ந்து என்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பேன். உங்கள் முடிவில்லா ஆதரவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.