ஷகீலா-வின் வாழ்க்கை படமாகிறது!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கவர்ச்சி பட நாயகியாக நடித்த 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவரது வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. தெலுங்கு, கன்னடம் இந்தி மொழிகளில் படங்களை இயக்கிய இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். ஷகிலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. 16 வயதில் சினிமாவில் நுழைந்த ஷகீலாவின் சினிமா வாழ்க்கையை மையப்படுத்தியே இந்த படம் உருவாக இருக்கிறது.

இந்த படம் குறித்து ரிச்சாவின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, மலையாள சினிமா உலகில் பல்வேறு கவர்ச்சி படங்களில் நடித்து 90-களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ஷகீலாவின் வாழ்க்கை பற்றிய கதை தான் இது. ஷகீலாவுக்கு ஆசியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக இந்த படம் உருவாகிறது. படத்தின் கதை சிறப்பாக வந்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்றார்.