என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க : பிகில் விழாவில் விஜய் எச்சரிக்கை!

அட்லி இயக்கத்தில் 3-வது முறையாக விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். விவேக் பாடல்களை எழுதியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கும் பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியிருக்கிறார். பெண் கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் `சிங்கப் பெண்ணே’, `உனக்காக’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் பாடல் வெளியீட்டு விழா கிராண்டாக நடந்தது.

இதில் இயக்குநர் அட்லி பேசுகையில், “தெறியை விட இரண்டு மடங்கு மெர்சல். மெர்சலை விட மூன்று மடங்கு பெரியது பிகில். என்னை வேற நடிகர்கள் கூடவும் படம் பண்ணுங்கன்னு விஜய் அண்ணா சொன்னார். ஆனால், நான் எந்த கதை எழுதினாலும், எனக்கு மனதில் முதலில் வருவது அவர்தான். மெர்சல் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் நிறைய வந்தன. இருந்தாலும் என்னோட லக்கி நடிகர் விஜய் அண்ணாதான். என் அண்ணன விட்டு நான் எப்படி வெளியே போவேன். அவர் இல்லைனா நான், என்னோட வளர்ச்சி எல்லாம் ஒண்ணுமே இல்லை. மொத்தத்தில் கமர்சியல் படமா, விளையாட்டு படமா என்பதைத் தாண்டி உங்களுக்கு பிடிச்ச படமா பிகில் இருக்கும்.

ராஜா ராணி கதை சொல்லும்போது ஒரு சட்டையோட கதை சொன்னேன் ஓகே அயிடுச்சு. அந்த சட்டைதான் ராசின்னு தெறி கதை சொன்னேன். அதுவும் ஓகே அயிடுச்சு. அந்த ராசியான சட்டை மெர்சல் பட கதை சொல்லப் போறப்போ பழசாகிடுச்சு. இருந்தாலும் அண்ணன நம்பி போனேன் மெர்சலுக்கு ஓகே சொன்னார். அப்போதான் புரிஞ்சது, எனக்கு ராசி சட்டை கிடையாது. விஜய் அண்ணன் தான்னு” என்று பேசியவரிடம் அவரது நிறம் குறித்து வெளியாகும் ட்ரோல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இங்கிலீஷும் ஹிந்தியும் வெறும் மொழிகள் மட்டும்தான்; அதுவே தகுதி இல்ல. அதுமாதிரி கறுப்பும் ஒரு கலர் அவ்ளோதான்” என்றார்.

நடிகர் விவேக் பேசிய போது, ‘இந்த இடத்திற்கு வர எனக்கு 3 மணி நேரம் ஆச்சு. அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடமாக இந்த இடத்தை பார்க்கிறேன். பிகில் படத்தில் வரும் கால்பந்து போட்டி ஒலிம்பிக் போட்டியை போன்று சிறப்பாக இருக்கும். அட்லி உழைப்பு எனக்கு பிடிக்கும். சூரியனை மாதிரி பிரகாசமா சுடர்விட்டு இருக்கணும்னா, சூரியனை மாதிரி இடைவிடாம எரியனும் (உழைக்கணும்) அதனால தான் அட்லீ கருப்பா இருக்கார் போல. வெற்றி எப்பவுமே ஒரு போதை தரும் ஆனால் அது விஜய்க்கு ஏறுனதே இல்லை’என்றார்.

பின்னர் விழாவில் விஜய் பேசிய போது,“வாழ்க்கையில் அவர்களை மாதிரி வரணும், இவர்களை மாதிரி வரணும் என்று ஆசைப்படாதீர்கள். அதுக்குத் தான் அவர்களே இருக்கிறார்களே. நீங்கள் நீங்களாகவே வளருங்கள். வாழ்க்கை கூட கால்பந்து விளையாட்டு போலத்தான். நாம் கோல் போட முயற்சிப்போம், அதை தடுக்க ஒரு கூட்டமே வரும். நம்ம கூட இருப்பவனே கூட எதிரணிக்காக கோல் போடுவான். யாருடைய அடையாளத்தையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்குங்கள்.

இந்த விளையாட்டு மேம்பட வேண்டும் என்றால் அரசியலில் புகுந்து விளையாட்டு பண்ண வேண்டும். ஆனால், விளையாட்டில் அரசியல் பண்ணக்கூடாது. எதை யாரால் முடிக்க முடியும் என்று பார்த்து, அவரை எங்க உட்கார வைக்க வேண்டும் என திறமையை வைத்து முடிவு பண்ணுங்கள்.

உலகத்துலயே உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன்தான். வெறித் தனம் பாட்டுக்காக ஒரு சாம்பிள் பாடி ரஹ்மான் சாருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அவர் மும்பைக்கு போயிட்டார். ஒருவேளை நான் பாட வேண்டாம்னு சொல்லிட்டாங்க போலன்னு நான் நினைச்சேன். ஆனால், அட்லி போன் பண்ணி ரஹ்மான் சார் ரெக்கார்டிங்க்கு கூப்பிட்டதா சொல்லும்போதுதான் எனக்கே தெரிஞ்சது.

பேனரால் விழுந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என் ஆறுதல். இது போன்ற சமூகப் பிரச்சினைக்கு ஹாஷ் டேக் கிரியேட் பண்ணி இருக்கலாம். சமூகப் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள். யார் மேல பழிபோடுறதுனு தெரியாம இங்கு யாரைக் கைது செய்ய வேண்டுமோ, அவர்களை விட்டு விடுகிறார்கள். போஸ்டர் பிரிண்ட் பண்ண கடைக்காரனை எல்லாம் கைது செய்கிறார்கள்.

இதுக்கிடையிலே எனது பேனர், கட் அவுட்டை கிழித்த போது ரசிகர்கள் வருத்தப்பட்ட அளவுக்கு நானும் வருத்தப்பட்டேன். என் புகைப்படத்தைக் கிழியுங்கள், உடையுங்கள். ஆனால், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள். என் ரசிகர்கள் கனவுகள், ஆசைகளுடன் பேனர் வைக்கிறார்கள். அதைக் கிழித்தால் கோபம் வருவது நியாயம் தான். அதற்காக அவர்கள் மீது கை வைக்காதீர்கள். இது என் வேண்டுகோள்”. இவ்வாறு அவர் பேசினார்.