கலாம் கனவு கண்டார்..ரஜினி சொன்னார்… நீங்க செய்தே காட்டிட்டீங்க கண்ணன் சபாஷ்..!

தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவில் உயிர் இழந்து வருவதாகவும், 60 கோடி பேர் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அண்மையில் ஒரு ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் நாட்டில் பெருகி வரும் தண்ணீர்த் தேவையின் அவசியம் கருதி நதிநீர் இணைப்பின் அவசியம் குறித்து அறிஞர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக மக்களின் ஜனாதிபதி என்றழைக்கப்பட்ட அப்துல் கலாம், ‘எனக்கு ஒரு கனவு உள்ளது. தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி போன்ற நதிகளை பிற நதிகளுடன் இணைத்து அதை ஏரிகள், நீர்நிலைகள், கண்மாய்களை இணைக்க வேண்டும். இது முடியுமா? என்றால் முடியும். கரிகாலன் முடியாது என்று நினைத்து இருந்தால் தமிழகத்தில் கல்லணை அமைந்திருக்காது. இஸ்ரோ போன்ற தொழில்நுட்ப அமைப்புகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இது குறித்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நீராதாரங் களை இணைக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். தாமிரபரணி, காவிரி, பாலாறு, வைகை போன்றவற்றை இணைத்தால் தமிழகத்தின் நீர்த் தேவைகளை தாராளமாக நிறைவேற்ற முடியும் ‘ என்றெல்லாம் பேசியது இன்றைக்கும் யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ளது. அத்துடன் பல ஆண்டுகள் முன்பே நாட்டின் நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கினால் அதற்கு நான் முதல் ஆளாக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தார் ரஜினி.

அன்றைய காலகட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் ஆகப்பெரிய விஷயம். ஆனால், அதன் தேவை இப்போது பல மடங்காக உயர்ந்து விட்டது ஒருபுறமிருக்க, கலாம் கண்ட கனவை, ரஜினி வாயால் சொன்னதை இப்போது தன் படத்துக்காக செய்து காட்டியிருக்கிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.கண்ணன்.

ஆம்.. அவரின்‘மசாலா பிக்ஸர்’க்காக அவரே இயக்கியிருக்கும் ‘பூமராங்’ படம் நம் நதி நீர்த் தேவையின் அவசியத்தைத்தான் பேச வருகிறது. குறிப்பாக அப்துல் கலாம் சொன்னது போல் இளைஞர்களே ஒன்றிணைந்து அதை சாத்தியமாக்கிக் காட்டுவதாக அவர் வெளியிட்டிருக்கும் ‘பூமராங் டிரைலர் நமக்கு உணர்த்துகிறது.

அதர்வா, ஆர்ஜே பாலாஜி, இந்துஜா முதன்மைக் காதாபாத்திரங்கள் ஏற்றிருக்கும் அந்தக் காட்சி களில் இளைஞர்கள் இணைந்து பல கிலோமீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட வாய்க்கால் ஒன்றை வெட்டியிருப்பதாகக் காட்சி விரிகிறது. ஹாலிவுட் படம் போல் தோன்றும் இந்தக் காட்சி பற்றி கண்ணனிடம் பேசினோம்.

“படத்தின் முக்கியமான காட்சி இது. நீர்த் தேவை பற்றிப் பேசுகிற படமாக பூமராங் ஆனதால் இதற்காக இந்தக் காட்சி அவசியமாகிறது. இன்றைய சினிமாவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு செட் போட்டு பாடல் எடுப்பதன் அநாவசியத்தைவிட கதைக்குத் தேவையாக சமூகத்துக்கு நல்ல செய்தி நோக்கத்துக்காக செலவு செய்வதையே என் போன்ற இயக்குநர்கள் விரும்புகிறோம். அதையேதான் இன்றைய ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

குறிப்பாக படித்த இளைஞர்கள் ஒரு சமுதாய மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பதால் இப்படியான காட்சிகள் எடுப்பதும், அறிவார்ந்த செய்திகள் சொல்வதும் அவசியமாகிறது. இந்தக் காட்சிக்காக ஒரு கிராமத்தையே வளைத்து முறையான அனுமதிகள் வாங்கி அங்கிருப்பவர்கள் உதவியுடன் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வைத்து ஒரு மாத முயற்சியில் இந்தக் கால்வாயை வெட்டினோம். இதற்கான செலவு மட்டும் ஒரு கோடியானது.

இன்றைய கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் இதை உருவாக்கி வைத்து விட முடியுமென்றாலும் அதில் இறங்கி வேலை செய்வதையோ, அதற்குள் ஆட்கள் இயங்குவதையோ நேர்த்தியாகச் செய்ய முடியாது. அது ரசிகனை ஏமாற்றுவது போலாகும் என்பதால் இந்த அளவு முயன்றோம். டிரைலருக்கான விமர்சனங்களில் இந்தக் காட்சி பரவலான பராட்டுகளைப் பெற்று வருகிறது. படத்தில் பாருங்கள் இதன் முக்கியத்துவத்தை..!” என்றார்.
.

கலாம் கனவு கண்டார்..ரஜினி சொன்னார்… நீங்க செய்தே காட்டிட்டீங்க கண்ணன் சபாஷ்..!”