கூப்பிடுத் தூரத்தில் இருக்கும் கன்னட திரையுலகில் இருந்து நம்ம கோலிவுட் சினிமாவுக்கு எத்தனையோ நடிகர், நடிகையர், பாடகர், பாடகி வந்து சாதித்த நிலையில் அந்த லிஸ்டில் ஒரு புதிய ஸ்டார் எண்ட்ரி ஆகி தனிக் கவனம் பெற்று விட்டார்.. ஆம். கர்நாடகத்தின் “டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ்” என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலியால் பாராட்டு பெற்ற யஷ் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம்தான் “K.G.F. Chapter 1″
இந்த K.G.F என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்திற் குள் போகும் முன் சில விஷயங்களை நினைப்படுத்திக் கொளவது நல்லது. கோலார் தங்க வயல். ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக இருந்தது. இந்தியாவின் மொத்தத் தங்க உற்பத்தியில் 95 சதவீதத் தங்கம் இங்குத்தான் கிடைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங் களேன். கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்தக் கோலார் தங்கச் சுரங்கம் அமைக்கப் பட்டதில் திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் பங்குண்டு. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் இந்தச் சுரங்கம் பெரிய அளவில் வளர்ந்தது. 1880-ம் ஆண்டில் ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் நிறுவனம்தான் இங்கே சுரங்கம் தோண்டத் தொடங்கியது.
சுதந்திரத்துக்குப் பிறகு 1956-ம் ஆண்டில் மைசூர் அரசு இந்தத் தங்கச்சுரங்கத்தை அரசுக்குச் சொந்த மாக ஆக்கியது. சுரங்கத்தின் பெயர் பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் என்று மாறியது. கடந்த 136 ஆண்டுகளில் இங்குக் கிட்டத்தட்ட 800 மெட்ரிக் டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத் தில் தங்கம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 26 பகுதிகளில் 8 இடங்களில் மட்டுமே இதுவரை தங்கம் தோண்டப்பட்டுள்ளது. தற்போது இங்கே தங்கம் தோண்டியெடுக்கப் படுவதில்லை. அதே சமயம் 70 இறுதி மற்றும் 80 தொடக்கங்களில் K.G.F-ல் கிடைக்கும் தங்கத்தால் அந்த இடத்தை கைப்பற்ற மாஃபியாக்கள் இடையே பெரிய போட்டி நடந்தது. இது போன்ற உண்மைச் சம்பவத்தை வைத்துதான் கேஜிஎஃப் கதையைப் பின்னியிருக்கிறார்கள் .
ஜஸ்ட் லைக் கேங்ஸ்டர் கதையாக அடி, தடி, சவால் என்று மசாலாத்தனாமாகத் தொடங்கும் படம், இரண்டாம் பாதியில் பாகுபலி பாணியில் பிரம்மாண்ட காட்சி அமைப்புகளோடு சுவை பட கதையை நர்த்திக் கொண்டே போய் அட., அடடே சொல்லி வைத்து விடுகிறார்கள். படம் என்னவோ கன்னடத்தில் எடுக்க தொடங்கி இருந்தால் தொடக்கக் காட்சிகள் கன்னடத்தனமாய் உறுத்தலாக இருந்தாலும், பாம்பே தாதா தொடங்கி சுரங்கத் தொழில் பிரச்னை என்று விரியும் போது பார்ப்பவர்களுக்கு மொழி தாண்டிய உணர்வை ஃபிலிங்கை உருவாக்கி ஒரு வரலாறை போரடிக்காமல் சொல்வதில் பாஸ் மார்க் வாங்கி விட்டார்கள்.
ஹீரோ யாஷ், இந்த ரோலுக்கு ரொம்பப் பொருந்துகிறார். இவரை மனதிக் கொண்டே கதை தயார் ஆகி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனாலும் ஒத்தை ஆளாக பலரை அடித்து துவம்சம் செய்வது வழக்கம் போல் ஓவராக இருந்தாலும், யாஷுக்கேத்த ரோல் என்பதே ஒட்டு மொத்தப் படத்திற்கும் கிடைத்த வெற்றி. ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் ஆக்ரோஷம் யாஷின் நடிப்பிலும் தெரிகிறது.
மேலும் படத்துக்கு உயிரோட்டமான கலை, கேமிரா, இசை, எடிட்டிங் அத்தனையும் ஒரு ஹிட் படத்துக்கு எம்புட்டு தேவையோ அம்புட்டு இருக்கிறது.
மிகச் சிலப்படங்கள்தான் முதல் பாகம் பார்த்து முடிந்த பின்னர் அடுத்த பாகம் எப்போ வரும் என்று கேட்க தோணும்..அப்படி கேட்க வைத்த படப் பட்டியலில் கேஜிஎப் 1 இணைந்து விட்டது..
நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்