பாலகுமாரன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்!- வைரமுத்து அஞசலி

தமிழ் வாசகர்களின் ஆதர்சன எழுத்தாளரும் திரைப்பட பிரபலச் வசனகர்த்தாவுமான பாலகுமாரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (மே 15) காலமானார். அவருக்கு வயது 71.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற சிற்றூரில் பிறந்த பாலகுமாரனுக்கு, தமிழ் எழுத்துலகில் தனி இடம் உண்டு. தொடக்கத்தில் கவிதைகள் எழுதிவந்த இவர், அதன் பின் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பலவற்றையும் எழுதினார். மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், இரும்புக் குதிரைகள், சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் சொல்லும் கங்கை கொண்ட சோழன், உடையார் என 200க்கும் மேற்பட்ட நாவல்களும், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதில் இரும்புக் குதிரைகள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

எண்பது டூ தொண்ணூறுகளில் மிகப் பெரிய உச்சத்தில் இருந்து தன் எழுத்துக்களால் வாசகர்களைக் கட்டிப்போட்ட பாலகுமாரன். திரைத்துறையில் இருந்த ஆர்வத்தினால், இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றினார். சிந்து பைரவி, புன்னகை மன்னன் முதலான படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ படத்தை அவருடைய மேற்பார்வையில் இயக்கினார். பின்னாட்களில் சினிமா வசனகர்த்தாவாகவும் தனி முத்திரை பதித்தார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தன்னுடைய அடுத்த அத்தியாயத்தைத் துவங்கினார். அதையடுத்து குணா, செண்பகத்தோட்டம், ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், பாட்ஷா, முகவரி, சிட்டிசன், மன்மதன், புதுப்பேட்டை உட்பட 23 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ‘நான் ஒரு தடவை சொன்னா… 100 தடவை சொன்ன மாதிரி’ என்கிற வசனத்துக்கு சொந்தக்காரர் இவரே. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இவர் மறைவையொட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்ட இரங்கற் செய்தியில், “பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். “பெண்களைப் புரிதல்” என்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பலகாலம் வாசிக்கப்படும்.

தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, “உட்கார்ந்து வாசி; பிறகு யோசி” என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத நடை அவரது நடை. கரையைத் தொட்டுக்கொண்டே நடக்கும் நதி மாதிரி கவிதையைத் தொட்டுக்கொண்டே நடந்த நடை அவரது உரைநடை.

தொடக்கத்தில் அவர் கவிதை எழுத வந்தவர்தான். கவிதையைவிடச் சந்தை மதிப்பு உள்ளது உரைநடைதான் என்பதை உணர்ந்து தெளிந்த அறிவாளி அவர். அவரது இரும்புக் குதிரைகள் – மெர்க்குரிப் பூக்கள் – உடையார் – கங்கைகொண்ட சோழன் – கரையோர முதலைகள் போன்ற படைப்புகள் வாசகர்களை வசீகரித்தவை.

கலைத்துறையிலும் புகழ் பெறவே ஆசைப்பட்டார் இந்தப் பாலகுமாரன். கலைத்துறைக்குச் சென்ற எழுத்தாளர்களில் தங்கள் அறிவுக்குரிய நாற்காலியை அடைந்தவர்கள் குறைவு. புதுமைப்பித்தன் – பி.எஸ்.ராமையா – விந்தன் – அகிலன் போன்ற பலரையும்கூட வெள்ளித்திரையுலகம் தள்ளியே வைத்திருந்தது. ஆனால் பாலகுமாரனுக்குத் திரையுலகம் வெற்றி கொடுத்தது. சிந்து பைரவி – நாயகன் – காதலன் – பாட்ஷா – இது நம்ம ஆளு போன்ற படங்களில் அவரது பங்களிப்பு அற்புதமானது.

மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே விஞ்ஞானத்தின் நீண்டநாள் விருப்பம். ஆனால் அந்தப் போட்டியில் விஞ்ஞானத்தைவிடக் கலைதான் வெற்றி பெற்றிருக்கிறது. தன் கலையை முன்வைத்து ஒரு படைப்பாளன் தன் மரணத்தை வென்றுவிடுகிறான். அந்த வகையில் பாலகுமாரன் தன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்.அவரது குடும்பத்தாரும் வாசகர் உலகமும் அமைதியுறுக என்று என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.