வேலைக்காரன் படத்தில் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் ‘வேலைக்காரன்’ மாதிரியான ஒரு படத்தில் நடித்ததில்லை. இதில் அவர் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றுவார் என ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறினார்.

‘வேலைக்காரன்’ படம் குறித்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறுகையில், “சென்னை வெள்ளத்தின் போது ‘வேலைக்காரன்’ படத்தின் ஒரு வரிக் கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னைக் கவர்ந்தது, இந்தப் படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். ‘வேலைக்காரன்’ வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்காலத் தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம்.

மோகன் ராஜா மற்றும் அவரின் உதவி இயக்குநர்களின் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒவ்வொரு நாளும் மாலை படப்படிப்பை முடித்து விட்டு, மறுநாள் காலை படப்பிடிப்புக்கு போகும்போது அவரின் உதவியாளர்கள் சோம்பிக்கள் போல வலம் வருவார்கள். அதற்குக் காரணம் காலை 4 மணி வரை எடுக்க வேண்டிய காட்சிகளை விவாதித்து விட்டு, மீண்டும் 8 மணிக்கு படப்பிடிப்புக்கு ஆஜராகி விடுவார்கள்.

இதுவரை சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படத்தில் நடித்ததில்லை. இந்தப் படத்தில் அவரின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். அவர் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றுவார். அதற்கேற்ப அவரின் தோற்றத்தையும் காட்சிகளையும் உருவாக்கினோம்” என்றார் ராம்ஜி.