கைதி விமர்சனம்!

0
314

நம் தமிழ் சினிமாவில் காலம் காலமாக காட்டப்படும் அப்பா- மகள் பாசத்தையும், அண்டர்வேர்ல்ட் தாதாக்களின் அட்ராசிட்டை யையும் ட்ரீம் வாரியர் என்னும் பேமஸ் பானையில் போட்டு கரம் மசாலா, காரம், உப்பு ஆகியவற்றை தேவையான அளவு கலந்து வடிக்கப்பட்ட படையல்தான் ‘கைதி’ படம். இப்படத்தில் பாடலோ, காமெடி ட்ராக்கோ அல்லது ஹீரோயினோ இல்லைதான். ஆனால் அந்த குறைகள் கொஞ்சம் கூட தெரியாத அளவில் நாயகன் கார்த்தி புண்ணியத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறான் இந்த கைதி.

கதை ரொம்ப சிம்பிள்தான்.. அதாவது கொலை கைதியாகி 10 வருட சிறைத் தண்டனையில் இருந்து வெளியே வரும் கார்த்தி, அநாதை இல்லத்தில் இருக்கும் தனது மகளை பார்க்க செல்கிறார், வழி யில் சந்தேகத்தின் பெயரில் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். அதே நேரத்தில் எம் ஜி ஆரின் மானசிக தலைநகராம் திருச்சி போலீஸ் அதிகாரிகள் சில பலரை கொலை செய்து விட்டு , கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான போதை பொருளை மீட்பதற்காக ஒரு கடத்தல் கும்பல் களத்தில் இறங்குகிறது. இதை அடுத்து போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றினால் தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருகிறேன் என்ற உத்தரவாதம் பெற்று களத்தில் இறங்கும் கார்த்தி, அவர்களை எப்படி காப்பாற்றி, தனது மகளை கண்டார் என்பது தான் ‘கைதி’பட கதை.

கைதியாக இருந்தாலும் படம் தொடங்கி பத்து நிமிடங்கள் தலை காட்டாமல் இருந்த நாயகன் கார்த்தி கை விலங்குடன் படம் முழுக்க அதகளம் பண்ணி இருக்கிறார், மகளைப் பார்ப்பதற்காகவே இந்த கண்களைப் படைத்திருக்கிறான் என்று ஒவ்வொருவருக்கும் புரியும் பாசப் பார்வையோடும், தன்னை நம்பியவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற வெறி முகத்தோடும் டெல்லி என்ற கதாபாத்திரத்தில் மாஸ் காட்டுகிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் வரும் நரேன், ஓப்பனிங் சீனிலேயே ஒற்றை கையை உடைத்து ஊஞ்சல் போட்டுக் கொண்ட நிலையிலும் படம் முழுக்க பயணித்து பக்குவமாக நடித்திருக்கிறார். ஏனையோர் சகலரும் ஓ கே என்றாலும் டூட்டியில் சேர வரும் கான்ஸ்டபிளாக வரும் ஜார்ஜ் மரியம் பக்கா கான்ஸ்டபிளாக வாழ்ந்து அசத்துகிறார். .அப்புறம் அந்த லாரி ஓனராக வரும் கேட்டரிங் பையன் ஸ்கோர் செய்கிறான்.

சத்யன் சூரியனின் கேமரா பணி அபாரம். ஷாம் சி.எஸ்-இன் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்டி இருக்கலாம். ஆனால் ஸ்காட்லாண்ட்யார்டுக்கு இணை என்று மிகைப்படுத்தி சொல்லப்பட்டாலும் தமிழ்நாடு போலீசையும், அவர்களின் நெட் ஒர்க்கையும் இம்புட்டு லேமேஜ் ஆக்கி இருக்க வேண்டாம். யூனிஃபார்மோடு வந்திருக்கும் போலீஸாரை சரக்கடிக்க உயர் அதிகாரி உத்தரவிடுவதும், என்னதான் அத்துவான காட்டில் இருந்தாலும் போலீஸ் கமிஷனர் ஆபீஸையே ஓரிரவு முழுக்க உடைத்து உள்ளே புகுவதுமாக ஏகப்பட்ட இடங்களில் நம்பகத் தன்மை இல்லாமல் போய் விட்டது. மேலும் கிளைமாக்சில் குவாரியில், கத்தியால் குத்துப்பட்ட கார்த்தி மரணத்தின் வாசலை தொடும் நிலைவரை போய் ‘அடடே இது ஹீரோ ரோல்- இல்லே’ என்று ஞானோதயம் வந்து முன்னிலும் ஆக்ரோசமாக எதிரிகளை பந்தாடுவதெல்லாம் ஓவர்.

மற்றபடி கதை என்ன என்பதுடன் முன்னதாக ஹீரோ கார்த்தி தன் பேட்டி ஒன்றில்  சொன்னபடி படம் தொடங்கி 20 நிமிடத்திலேயே கிளைமாக்ஸ் என்று பரபரவென்று போவதால் தாராளமாக தியேட்டர் போய் பார்க்கலாம்.

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்