சின்னத்திரைக்கும் பெரியதிரைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை! நாசர் பேச்சு

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் ஆண்டு சிறப்பு மலர் மற்றும் Website வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை, வடபழனி இசைக் கலைஞர்கள் சங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், FEFSI கூட்டமைப்பின் தலைவர் R.K.செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் ஆண்டு சிறப்பு மலரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் வெளியீட, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன் பெற்றுக் கொண்டார்.

7H7A9051

இதேபோல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சின்னத்திரை வெப்சைட்டை FEFSI கூட்டமைப்பின் தலைவர் R.K.செல்வமணி மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவரான சிவன் ஸ்ரீநிவாசன் ஆகியோர் வெளியிட்டனர்.

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் தளபதி அனைவரையும் வரவேற்று பேசினார்.

actor naasar

விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, “சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். நாங்கள்  அனைவரும் ஒரே இன்ஸ்ட்டியூட்டில் ஒன்றாக படித்தவர்கள். இதை ஆரம்பிக்க ஒரு வித்தாக இருந்தவர் R.K.செல்வமணிதான்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சின்னத்திரைக்கும், பெரிய திரைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. அணுகுமுறை மற்றும் படைப்பு ரீதியாக மட்டும்தான் வித்தியாசம் உள்ளது. இன்னும் இவை இரண்டும் தனித்தனியாக இருப்பதுதான் கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றது. இன்னும் சில தினங்களில் பெரிய திரை மற்றும் சின்னத்திரை சங்கங்கள் ஒன்றாக வேண்டும்.

இப்போது வேறு வேறாக இருந்தாலும் வழிமுறையும், கருத்துப் பரிமாற்றமும், தொழில் நுட்ப பரிமாற்றங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு.

பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் பெரிய நடிகர்களும், ஒளிப்பதிவாளர்களும் சின்னத்திரை தொடர்களில் பணியாற்றி வருகிறார்கள். அந்த நிலைமை இங்கும் வர வேண்டும்…” என்றார் நாசர்.

director vikraman

இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது, “கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக சின்னத்திரையில் சீரியல் இயக்க வேண்டும் என்று என்னிடம் பல பிரபல சேனல்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் அழைத்தார்கள். அப்போது ‘கதை, திரைக்கதை, மற்றும் வசனத்தை மட்டும் நான்  பண்ணுகின்றேன். ஆனால் நான் இயக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டேன். இப்போது பெரிய திரையில் படம் இயக்கி கொண்டு இருக்கிறேன். நாம் சீரியல் செய்தால் விமர்சனங்கள் வரும் என்று பார்த்தேன். ஒரு கட்டத்தில், சரி… நாமும் ஒரு சீரியல் எடுத்து பார்ப்போம் என்று முடிவெடுத்தேன்.

7H7A9067

என்ன பயம் என்றால் பெரியதிரையில் சாதித்ததை சின்னத்திரையில் செய்ய முடியவில்லை என்று இயக்குநர்கள் பேசுவார்கள். அதனால் பெரிய திரையிலும் சாதித்து சின்னத்திரையிலும் சாதித்த ஒருவரிடம் சென்று இது குறித்து கருத்துக் கேட்டேன்

அதற்கு அவர் சொன்னார், ‘இது திரைப்படம் எடுக்கும் அளவிற்கு சுலபம் கிடையாது. ஒரு மாதத்தில் முப்பது நாள் என்றால் அந்த முப்பது நாளும் வேலை இருக்கும். உங்களுக்கு மட்டும் இல்லை. உங்கள் முழு குழுவிற்கும் எல்லா நாளும் வேலை இருக்கும்’ என்று சொன்னார். அப்போதுதான் புரிந்தது. சின்னதிரையில் இருக்கும் கஷ்டங்கள். அதனால்தான் ‘நான் கதை, திரைக்கதை, வசனம் மட்டும் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறினேன்.

இந்தப் பணியை இப்போதும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதற்காக எந்த உதவி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேளுங்கள். பெரிய திரை இயக்குநர்கள் சங்கம் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறது…” என்றார் இயக்குநர் விக்ரமன்.

r.k.selvamani

FEFSI தலைவர் R.K.செல்வமணி பேசும்போது, “தனித் தனி அமைப்பாய் இருந்தாலும் ஒரே இலக்கோடு செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் இந்த சின்னத்திரை இயக்குனர் சங்கத்தை பெரிய பெரிய இயக்குநர்கள் சேர்ந்து ஆரம்பித்தார்கள். சின்ன விதையாக விதைத்த இந்த சின்னத்திரை, இன்று ஆலமரமாக தளிர்த்து பெரிதாக வளந்திருக்கின்றது. நமக்குள் வேறுபாடு இல்லாமல் இருக்கிறோம். இது மிக பெரிய வளர்ச்சியாக இத்தினத்தை அடைந்திருக்கிறது.

இன்னும் மிகப் பெரிய வளர்ச்சி என்னவென்றால் பெரியதிரையின் ஆண்டு வருமானத்தைவிட, தமிழ் சின்னத்திரையின்(Satellite) ஆண்டு வருமானம் ஐந்து மடங்கு அதிகம். பெரியதிரைக்கு நிகரான தொழில் நுட்பக் கலைஞர்கள் சின்னத்திரையிலும் இருக்கிறார்கள்.

மேலும் சின்னத்திரை இயக்குநர் சங்கம் சார்பில் இன்று ஒரு சிறப்பு மலரை வெளியிட்டார்கள். அதில் சில நண்பர்களின் புகைப்படம் விடுபட்டிருக்கிறது. விடுபட்டவர்களின் புகைப்படத்தை அடுத்த சிறப்பு மலரில் வெளியிட வேண்டும். இதுமட்டுமின்றி சங்கத்திற்கென்று ஒரு வலைத்தளமும் ஆரம்பித்திருக்கிறார்கள். நாங்கள் எங்களது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சங்கம் சார்பாக ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க வேண்டும் என்று கடந்த மூன்று வருடங்களாக  நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்பொது நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள்.  பெரிய திரை இயக்குநர்கள் சங்கமும் இணையதளம் ஆரம்பிப்பதற்கு இதுவொரு நல்ல துவக்கமாக இருக்கட்டும்…” என்றார் இயக்குநர் R.K.செல்வமணி.