காலத்தை வென்று, காற்றுள்ள வரை வாழும் கே.வி. மகாதேவன்

சிறுவயதிலேயே நாடக மேடையில் ஏறிய கே.வி.மகாதேவன், பிறகு துணை இசை அமைப்பாளராகப் பணிபுரிந்து, இசை அமைப்பாளராக உயர்ந்தார்.

கே.வி.மகாதேவனின் சொந்த ஊர் நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன்கோவில் ஆகும். தந்தை – வெங்கடாசலம். தாயார்- லட்சுமி அம்மாள்.

மகாதேவனின் தந்தை வெங்கடாசலம், இசைஞானம் உடையவர். அதனால் சிறு வயதிலேயே மகாதேவன் தந்தையிடம் பாடக்கற்றுக் கொண்டார். பின்னர் திருச்சியில், விஸ்வநாத பாகவதரிடம் பயிற்சி பெற்று, மேடை கச்சேரிகளில் பாடினார். அந்த காலத்தில் பார்க்க அழகாக இருந்து, பாடவும் தெரிந்த சிறுவர்களை பாய்ஸ் நாடகக் கம்பெனிகளில் சேர்த்துக் கொள்வார்கள். அதன்படி டி.வி.சாரி என்பவர் மகாதேவனை சென்னைக்கு அழைத்து வந்து, பாலகந்தர்வகானசபா’வில் சேர்த்து விட்டார். அப்போது மகாதேவனுக்கு 13 வயது. ‘சந்திராவளி’ என்ற நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடித்தார். பின்னர், மற்ற கம்பெனி நாடகங்களிலும் நடித்தார். பெங்களூரில் நாடகம் நடிக்கச் சென்றபோது, உடன் வந்த நடிகர்கள் மகாதேவனை விட்டு விட்டு சென்று விட்டனர். அங்கிருந்து டிக்கெட் வாங்காமல் சென்னைக்கு வந்தார், மகாதேவன்.

இந்த நிலையில் நாடக ஆசிரியரான சந்தானகிருஷ்ணநாயுடு சிபாரிசின் பேரில், சென்னை கிண்டியில் இருந்த வேல்பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் மகாதேவனுக்கு வேலை கிடைத்தது. அப்பொழுது ‘திருமங்கை ஆழ்வார்’ என்ற படத்தை அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தனர். அதில் கதாநாயகனாக நடித்த கொத்தமங்கலம் சீனு சொந்தக்குரலில் பாடினார்.

இந்தப் படத்தின் இசை அமைப்பாளரான டி.ஏ.கல்யாணம், அக்காலத்தில் பிரபல இசையமைப்பாளராக இருந்தார். கே.வி.மகாதேவனுக்கு நல்ல இசை ஞானம் இருப்பதை அறிந்து கொண்ட அவர், மகாதேவனை தனது உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘ஆனந்தன் அல்லது அக்கினி புராண மகிமை’ என்ற படத்திற்கு, டி.ஏ.கல்யாணத்துடன் சேர்ந்து கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். 1940-ம் ஆண்டு, டி.ஏ.கல்யாணமும், மகாதேவனும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நிரந்தர இசை அமைப்பாளராகச் சேர்ந்தனர்.

அங்கு தயாரான சிவலிங்கசாட்சி, மனோன்மணி, திவான் பகதூர், ராஜராஜேஸ்வரி, அருந்ததி, பர்மாராணி, சுபத்ரா, சித்ரா முதலான படங்களுக்கு டி.ஏ.கல்யாணத்திற்கு உதவியாளராக இசை அமைத்து பாராட்டு பெற்றார், மகாதேவன்.

1950-ம் ஆண்டு, தனியாக இசை அமைக்கும் வாய்ப்பு மகாதேவனுக்குக் கிடைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த ‘குமாரி’ என்ற படத்துக்கு அவர் இசை அமைத்தார். 1954-ல் எம்.ஏ.வி.பிக்சர்ஸ் முதன் முதலாகத் தயாரித்த ‘மாங்கல்யம்’ படத்துக்கு இசை அமைத்தார். அந்தப் படம் வெற்றிப்படமாகியது.

‘மாங்கல்யம்’ படத்தின் கதாநாயகனாக நடித்தவர் ஏ.பி.நாகராஜன். அவருக்கும் கே.வி.மகாதேவனுக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது. தொடர்ந்து எம்.ஏ.வி.பிக்சர்ஸ் படங்களுக்கும், ஏ.பி.நாகராஜன் தொடர்புடைய படங்களுக்கும் இசை அமைத்தார்.
‘டவுன்பஸ்’, ‘முதலாளி’, ‘சம்பூர்ணராமாயணம்’, ‘மக்களைப் பெற்ற மகராசி’ முதலிய படங்களில், பல சிறந்த ‘ஹிட்’ பாடல்களைக் கொடுத்தார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் நடித்த பல வெற்றிப் படங்களுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். அவற்றில் சில முக்கிய படங்கள் வருமாறு:-

எம்.ஜி.ஆர்:- குடும்பத்தலைவன், தாயைக்காத்த தனயன், நல்லநேரம், அடிமைப்பெண், காஞ்சித்தலைவன், வேட்டைக்காரன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின்பாசம், பரிசு, பல்லாண்டு வாழ்க.

சிவாஜிகணேசன்:- திருவிளையாடல், நவராத்திரி, ரத்தத்திலகம், தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி சபதம், கந்தன்கருணை, திருமால் பெருமை, வசந்தமாளிகை.

எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்த ‘அடிமைப்பெண்’ படத்தில், ஒரு பாடலை படத்தின் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடினார். ‘அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு; ஆசான் என்றால் கல்வி. அதுவே உலகின் தெய்வம்’ என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் கே.வி.மகாதேவன்.

தமிழ்ப்படங்களுடன், தெலுங்குப் படங்களுக்கும் மகாதேவன் இசை அமைத்தார். அவற்றில் மகத்தான இசைக் காவியமாக அமைந்தது ‘சங்கராபரணம்.’ இசையை உயிரினும் மேலாக மதிக்கும் இசை மேதையாக இதில் சோமயாஜுலு நடித்தார். இவருக்காக, கர்நாடக சங்கீதத்தில் கே.வி.மகாதேவன் இசை அமைத்த பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அற்புதமாகப் பாடினார்.

ஆந்திராவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் இசைக்காகவே ஓடிய மிகச்சிறந்த படம் ‘சங்கராபரணம்.’ தமிழிலும், தெலுங்கிலும் சுமார் 500 படங்களுக்கு இசை அமைத்தவர், கே.வி.மகாதேவன். மேல் நாட்டு இசையைத் தழுவாமல், முழுக்க முழுக்க கர்நாடக இசையில், நெஞ்சைத் தொடும் விதத்தில் இசை அமைத்து சாதனை படைத்தார். அவருடைய பெரும்பாலான பாடல்கள், காலத்தை வென்று, காற்றுள்ள வரை வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவை என்றாலும் அவரை பலரும் மறந்து கொண்டிருப்பது வேதனைதான்.

 

கே.வி. மகாதாவேன பிறந்த நாள் (மார்ச் 14) சிறப்பு பதிவு