பாகுபலியின் சாதனைக்கு நன்றி – பிரபாஸ் நெகிழ்ச்சி!

0
538

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம் தமிழகத்தில் தற்போது பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. 75 நாட்களைக் கடந்துவிட்டாலும், தற்போது வெளியாகும் சில புதிய படங்களூக்கு நிகராக கூட்டமிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தார்கள். தமிழக விநியோகத்தில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் வியாபார சாதனைகளையும் முறியடித்ததுள்ளது. இனிமேல் வெளியாகவுள்ள படங்கள், ‘பாகுபலி 2’ செய்துள்ள சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்று விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டார்கள்.

இதனிடையே பாகுபலி நாயகன் பிரபாஸ் அனுப்பிய ஓர் அறிக்கையில், “இன்றோடு பாகுபலி-1 திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். பாகுபலி குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடுத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.  என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான் இந்த வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன். குறிப்பாக எஸ். எஸ். ராஜமௌலி சாருக்கும், பாகுபலி குழுவினர் அனைவருக்கும் இந்த மாபெரும் வெற்றியை, நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையேதான் பாகுபலி 2 தொடர்பாக திரையரங்க உரிமையாளர் பிரதிநிதி ஒருவர், “தமிழகத்தில் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் வசூல் சாதனை செய்துள்ளது. டிக்கெட் விற்பனையில் அதிகம் பேர் பார்த்த படமும் இதுதான். 2000-ம் ஆண்டிற்குப் பிறகு அதிகமான திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து ஓடிய படம் ‘பாகுபலி 2’ மட்டுமே. தமிழ் திரையுலகின் முன்னணி 5 நடிகர்களின் படங்கள், விநியோகத்தில் பங்குத்தொகையாக 35 – 40 கோடி வரை கிடைக்கும். ஆனால், ‘பாகுபலி 2’ இதனை இரட்டிப்பாக்கி பங்குத்தொகை மட்டுமே சுமார் 80 கோடி வரை செய்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை விட 2 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது எனச் சொல்லலாம்.

தமிழ் நடிகர்கள் படங்கள் முதலில் என்ன விற்பனையாகிறதோ அதோடு தயாரிப்பாளருக்கு பணம் கிடைப்பது நின்றுவிடும். ஆனால், 47 கோடிக்கு ‘பாகுபலி 2’ விற்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் விநியோகஸ்தர் தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு தொகையைக் கொடுத்தார். தமிழ் திரையுலகில் இப்படி ஒரு விஷயம் எனக்கு தெரிந்து எந்தவொரு படத்துக்கும் நடைபெற்றதே இல்லை” என்று நாகநாதன் தெரிவித்ததும் தமிழகத்தில் ‘பாகுபலி 2’ நிகழ்த்தியுள்ள மாபெரும் சாதனையை, தமிழ்ப் படங்கள் முறியடிக்க முடியுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது..